* 25-ஆம் ஆண்டில் 50-வது படம் என்ற மைல் கல்லை "ஐ' படத்தின் மூலம் அடைகிறார் நடிகர் விக்ரம். பின்னணி எதுவுமில்லாமல் சினிமா பிரவேசம் கண்ட விக்ரம், 1990-ஆம் ஆண்டு ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த "என் காதல் கண்மணி' படத்தின் மூலம் திரையுலகம் கண்டார். அறிமுகம் தொடங்கி எல்லாவற்றிலும் தோல்வி முகம். "காதல் கீதம்', "மீரா', "புதிய மன்னர்கள்' உள்ளிட்ட 22 படங்கள் சூழ்நிலைகளுக்கு போராடிய காலங்களாக அமைந்து போனது. 9 வருட போராட்டங்களுக்குப் பின் 99-ஆம் ஆண்டில் வெளிவந்த பாலாவின் "சேது' படம்தான் விக்ரமுக்கு திருப்புமுனை. செல்வா, முரளி என பல நடிகர்கள் வசம் இருந்த "சேது' பட வாய்ப்பு, இறுதியாக விக்ரம் கைக்கு வந்தது. அது நாள் வரை தனக்குள் இருந்த நடிப்புத் திறனை வெளிக்காட்டி சிறந்ததொரு நடிகராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். "தில்', "தூள்', "சாமி', "ஜெமினி', "மஜா' என கமர்ஷியலில் முத்திரை பதிக்க இன்னொரு பக்கம் "காசி', "அந்நியன்', "பிதாமகன்', "ராவணன்', "தெய்வத்திருமகள்' என நடிப்பின் புதிய பரிணாமங்களைத் தேடி பிடித்தார். இந்த 25 ஆண்டுகளில் உங்களால் மறக்க முடியாத நாள் எது? என கேட்கப்பட்ட கேள்விக்கு விக்ரம் பதில் இது... ""1999, டிசம்பர் 10.'' ஆம் தேதி "சேது' வெளியான நாள்.
* நடிகை ஹன்சிகா சற்று வித்தியாசமாக தனது கோடைப் பயணத்தை திட்டமிட்டு இருக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் தன் பிறந்த தினத்தன்று ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து, அவர்களின் படிப்பு செலவையும் ஏற்று வருகிறார் ஹன்சிகா. இதுவரை 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து அவர்களைப் பராமரித்து வருகிறார். சமீபத்தில் "வாலு' பட படப்பிடிப்பை பாங்காங்கில் முடித்து விட்டு வந்த ஹன்சிகா, 25 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு குலுமணாலி சென்று விட்டார். குலுமணாலிக்கு 5 நாள் சுற்றுலாவாக தான் வளர்த்து வரும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ள ஹன்சிகா, தொடர்ந்து படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு பின், குலுமணாலி சென்று வந்த வண்ணம் உள்ளார். அடுத்த கோடை விடுமுறைக்கு குறைந்தது 10 நாள்கள் சுற்றுலாவில் பங்கேற்க ஹன்சிகா திட்டமிட்டுள்ளார்.
* ""கோச்சடையான் படத்தின் கதை மற்றும் வசனங்களில் எனக்கு முழு திருப்தி. ஆனால் இதை வழக்கமான படமாக எடுத்திருந்தால், இதுவரை வந்த ரஜினி படங்களிலேயே இது மாறுபட்ட படமாக இருந்திருக்கும். ரஜினியின் நடிப்பையும் தோற்றத்தையும் முப்பரிமாண அனிமேஷன் முறையில் காட்டியது எதற்காக என்பதுதான் புரியவில்லை. அரசர் காலத்து கதை என்பது போல் சித்திரிக்கப்பட்டிருப்பதும் தேவை இல்லாத ஒன்று. இதை அப்பா, அண்ணன் - தம்பி கதையாகவே எடுத்திருக்கலாம்'' என தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா. இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்படத்தின் பணிகளில் ஈடுபட்டு படத்தை இயக்கி முடித்திருக்கும் சௌந்தர்யாவுக்கு அமிதாப், ஷாரூக்கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில், வர்மாவின் இந்த தாக்குதல் ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
* ஈழத்துப் போரில் மரணமடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் இசைப்பிரியா, இலங்கை ராணுவத்தினரின் பலவித கொடுமைகளுக்கு ஆளாகி உயிர் விட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இசைப்பிரியாவின் வாழ்க்கை மற்றும் படுகொலை குறித்து வெளிவராத தகவல்களை உள்ளடக்கியதாக உருவாகியுள்ள படம் "போர்களத்தில் ஒரு பூ'. எதுவும் அறியாத குழந்தை பருவம் முதல் இளமை காலம் மற்றும் குடும்ப வாழ்க்கை வரை இசைப்பிரியாவின் வாழ்க்கையை ஓட்டிய சம்பவங்கள் இதில் திரைக்கதையாக்கப்பட்டுள்ளன. இசைப்பிரியாவின் படுகொலைக்கு பின் ஈழத்துச் சம்பவங்களை உலக அரங்கம் பார்த்த விதம் உள்ளிட்ட பலவித விஷயங்கள் இதில் இடம் பெறுகின்றன. இசைப்பிரியா பற்றிய கதை என்றதும், தானே முன் வந்து இசையமைத்து படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இசைப்பிரியாவின் வேடத்தில் புதுமுகம் பிரியா நடித்துள்ளார். பாலாஜி, பிரபாகரன், சுமந்தன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் கணேசன் இப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.
* "நடிகை ஆவேன் என நான் ஒரு போதும் நினைத்தது இல்லை' என தன் பேட்டிகளில் அடிக்கடி சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் ப்ரியா ஆனந்த். பத்து வருடங்களுக்கு முன்பு ஜர்னலிஸம் படிப்பதற்காக சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற ப்ரியா, சினிமா தயாரிப்புக்கான டெக்னிக்கல் விஷயங்களையும் கற்றுக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார். பொழுதுபோக்கிற்காக மாடலிங்கில் ஈடுபட்ட போது, விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. அதுவே தமிழில் "வாமனன்', தெலுங்கில் "லீடர்' என இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை தேடிக் கொடுத்தது. ""உன் முகம் சரியில்லை. உனக்கு நடிக்க வரலை, ஹீரோயினா நீ ஜெயிக்கிறது கஷ்டம் என என் முகத்துக்கு முன்னாடியே நிறைய கமெண்ட் வரும். அதில் சரியான கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை கண்டு கொள்ள மாட்டேன். வருடத்தில் ஒரு மாதம் பெய்கிற மழை, மீதி பதினோரு மாதத்துக்கும் தண்ணீர் கொடுக்கும். அப்படி அவ்வப்போது கிடைக்கும் பாராட்டுக்களை மட்டும் வைத்து, எதையும் தாண்டி வந்து விட வேண்டும்'' என்பது ப்ரியாவின் உத்வேக வரிகள்.
* சக நடிகர்களிடமிருந்து ஒதுங்கியிருந்த நடிகர் சந்திரபாபு இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.யிடம் மட்டும் நட்பு பாராட்டி வாழ்ந்திருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எம்.எஸ்.வி.யின் வீட்டில் இருப்பதை சந்திரபாபு பெரிதும் விரும்புவார். போதை ராத்திரிகளில் திடீரென்று வந்து எனக்கு "உப்புமா வேணும், ரவா தோசை வேணும்' என்று எம்.எஸ்.வி.யின் தாயார் நாணி குட்டியிடம் உரிமையாகக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார் பாபு. "டேய் விசு... எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் நல்ல பாட்டு போடுற... எனக்கு மட்டும் சுமார் பாட்டா போடுற...' என அடிக்கடி எம்.எஸ்.வி.யிடம் சண்டை பிடிப்பாராம். "பிறக்கும் போதும் அழுகின்றான்... இறக்கும் போதும் அழுகின்றான்...' பாடல்தான் எம்.எஸ்.வி. தனக்கு போட்டதில் பிடித்த பாட்டு என்பார் பாபு. நினைவுகள் தப்பிய மருத்துவமனை நிமிடங்களில், "நான் செத்துப் போனா என் உடலை எம்.எஸ்.வி. வீட்டில் கொஞ்ச நேரம் வைத்து விட்டு எடுத்துக் கொண்டு போங்க....' என சொல்லியிருந்தார் பாபு. அதே மாதிரியே எம்.எஸ்.வி.யின் வீட்டிலிருந்து இடுகாட்டுக்கு சென்றிருக்கிறது பாபுவின் உடல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.