தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி சொல்வது வழக்கம். ஆனால் "குத்து' ரம்யா தன்னை தோல்வி அடைய செய்த தொகுதிக்குச் சென்று நன்றி சொல்ல இருக்கிறார். கடந்த முறை கர்நாடகத்தின் மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்ற ரம்யா, சமீபத்தில் நடந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். உள்ளூர் கட்சிக்காரர்கள் ஒத்துழைப்பு தராததுதான் தனது தோல்விக்குக் காரணம் என்று தலைமைக்கு கடிதம் எழுதினார். இதற்கு கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இப்பிரச்னை நாளுக்கு நாள் முற்றி வரும் நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்த தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்து நன்றி சொல்ல இருக்கிறார். இது குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில்... ""மாண்டியா தொகுதி மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்ற இருக்கிறேன். ஜூன் மாத இறுதியில் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்க உள்ளேன். வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காமல் இருந்தவர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லப் போகிறேன். பதவியில் இல்லா விட்டாலும் என் தொகுதி மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க பாடுபடுவேன்'' என அறிவிக்க, தோற்ற தொகுதிக்கு ஏன் வர வேண்டும்? என தொகுதி நிர்வாகிகள் சுற்றுப் பயணத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
முதல்வராக இருந்த சமயத்தில் ராமாவரம் தோட்டத்துக்கு பாரதிராஜாவை அழைத்தார் எம்.ஜி.ஆர். வெகு நேரம் சினிமா பற்றி பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று ""பாரதி... நாம கல்கியின் "பொன்னியின் செல்வன்' நாவலை சினிமாவா எடுக்கணும். அதில் நான் பொன்னியின் செல்வனா நடிக்கணும்கிறது என் நீண்ட நாள் கனவு. ஆனா, இப்ப இருக்கிற வேலையில் எனக்கு தூங்கக்கூட நேரம் இல்லை. எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் படம் தயாரித்து ரொம்ப வருஷமாச்சு. என் பேனருக்காக "பொன்னியின் செல்வன்' படத்தை நீ டைரக்ஷன் பண்றியா? என்னால் நடிக்க முடியாது. கமல்ஹாசன் பொன்னியின் செல்வனாகவும், ஸ்ரீதேவி குந்தவை நாச்சியாராகவும் நடிச்சா நல்லா இருக்கும். என்ன... டைரக்ஷன் பண்றியா?'' என கேட்டிருக்கிறார். அரும் பெரும் வாய்ப்பை தட்டிக் கழிக்காமல் பாரதிராஜாவும் ஒப்புக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார். ஆனால், அதன் பின் அந்தப் படத்தைப் பற்றி இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லையாம். ""எப்படியோ.... எங்கேயோ மிஸ் ஆயிடுச்சு'' என்பதுதான் இதற்கு எப்போதும் பாரதிராஜா தரும் பதில்.
தொழிலதிபரோடு திருமணம்... இனி சினிமாவுக்கு முழுக்கு... என்றெல்லாம் செய்திகள் கிளம்ப, ""என் பிரச்னைகள் எல்லாமும் தீர்ந்து விட்டது. தற்போது நடித்து வரும் தெலுங்குப் படம் முடிந்தவுடன், புனித் ராஜ்குமார் ஜோடியாக கன்னடப் படமொன்றில் நடிக்க இருக்கிறேன். தமிழில் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், எனக்குப் பிடித்த சில கதைகளுக்கு ஓ.கே. சொல்லியிருக்கிறேன். விரைவில் தமிழ் சினிமாவில் நடிப்பேன் என நடிகை அஞ்சலி அறிவித்து முடித்த சில நிமிடங்களிலேயே, ""என் "ஊர் சுற்றி புராணம்' படத்தில் நடித்துக் கொடுக்காமல் அஞ்சலியை எந்தப் படத்திலும் நடிக்க விட மாட்டேன். ஒரே கட்ட படப்பிடிப்பில் முடிய வேண்டிய படத்தை ஒரு வருடத்துக்கும் மேலாகக் காக்க வைத்திருக்கிறார் அஞ்சலி. தமிழ்த்திரை அமைப்புகளிடம் புகார்கள் தந்தும், இன்னும் விடிவு காலம் இல்லை. தற்போது மீண்டும் தமிழில் அஞ்சலி நடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. அப்படி நடிப்பதாக இருந்தால் முதலில் எனக்கு கால்ஷீட் கொடுத்து விட்டுதான் நடிக்க வேண்டும். இதற்கு முடிவு தெரியவில்லையென்றால் அஞ்சலியை எந்த மொழிப் படங்களிலும் நடிக்க விட மாட்டேன்'' என அஞ்சலி விவகாரத்தில் அடுத்த கட்ட பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் இயக்குநர் களஞ்சியம்.
"சிட்டுக்குருவி' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண் இனத்தின் குரல் ஆகியவற்றை இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ""பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கு சட்டங்கள் மட்டும் போதாது. மனவியல்ரீதியாக இளம் தலைமுறையினர் இடையே ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பாலியல் வன்முறையின் போதும் பாதிக்கப்படுவது ஒரு பெண் மட்டுமல்ல. ஒரு தலைமுறை என்பதை இளைஞர்கள் மத்தியில் பதிய வைக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆல்பத்தின் நோக்கம். மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான் சிட்டுக்குருவி. இந்தியாவில் தற்போது ஆங்காங்கே நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்களையும் அந்த சிட்டுக்குருவி போல் இல்லாமல் செய்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது. தமிழகத்திலும் அது மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவது கவலை தந்தது. இந்த வருத்தத்தை ஆல்பமாகப் பதிவு செய்ய வேண்டும் என எண்ணினேன். அதில் உருவானதுதான் இது'' என்கிறார் ஆல்பத்தின் இயக்குநர் விஜய் ஆர்.ஆர்.
தனுஷுக்கு வந்த அதிர்ஷ்டம், சல்மான்கானுக்கு வரவில்லை. "எதிர்நீச்சல்' படத்தில் தனுஷுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய நயன்தாரா, அதே போல சல்மான்கானுடன் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட வந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம். சல்மான் நடிக்கும் "பிரேம்ரத்தன் தான் பயோ' என்ற படத்தில் நடிக்க அழைத்தபோது அதை ஏற்க மறுத்ததுடன் அவர் ஹீரோவாக நடிக்கும் "கிக்' படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு ஆட அழைத்த போதும் மறுத்து விட்டாராம். தமிழகக் கலாசாரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த இந்திப் படத்தில், தமிழின் பிரபல நடிகையை நடனமாட வைக்கலாம் என்பதாலேயே நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் "நோ' சொல்லி விட்டார். ""பாலிவுட் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தாலும், அப்படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. இப்போதைக்கு தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை. அதே போல் ஒரு பாடலில் மட்டும் தொடர்ந்து ஆடுவதற்கு என்னிடம் கால்ஷீட் இல்லை. ஆறு படங்களில் நான் பிஸி!'' என்பது நயனின் பதில்.
திருமணம் ஆகி விட்டது. இனி மேல் நடிக்க மாட்டார். நடித்தாலும் கவர்ச்சிக் காட்சிகளில் நடிக்க மாட்டார் என்றெல்லாம் உலவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் சினேகா. சமீபத்தில் வெளியாகியுள்ள "உன் சமையல் அறையில்' படத்தில் ஏற்று நடித்துள்ள குடும்பப் பாங்கான வேடம் நல்ல பெயரை பெற்றுத் தந்ததையடுத்து, இனி அடுத்தடுத்த படங்களில் ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்க முடிவு எடுத்திருக்கிறாராம். ""நடிப்பு வேறு... திருமணம் வேறு. நானும் என் கணவரும் அவரவர் தொழிலை நேசிக்கிறோம். அடுத்தவர் தொழிலை மதிக்கிறோம். படத்தின் காட்சிக்குத் தேவைப்பட்டால், எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று இப்போது சொல்ல முடியாது. இப்போது சில வரையறைகள் தேவைப்படுகின்றன. "உன் சமையல் அறையில்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து வரும் வாய்ப்புகளில் நேர்த்தியான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். இல்லத்தரசி வேடமே அதிகமாக வரும் என்பதால் அதில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தால் நடிப்பேன்'' என அதிர வைக்கிறார் சினேகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.