கடைசியாக 1984-ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ரேவதி நடிப்பில் வெளிவந்த "கை கொடுக்கும் கை' படத்தில் பணியாற்றிய மகேந்திரன்-இளையராஜா கூட்டணி தற்போது மீண்டும் இணைகிறது. புதுமைப்பித்தன் சிறுகதையின் சில வரிகள் தந்த பாதிப்பை மையமாக வைத்து படத்துக்கான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் மகேந்திரன். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மகேந்திரன் இயக்கும் இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் மட்டும் அனுபவமுள்ளவர்கள் நடிக்க, மற்ற பாத்திரங்களில் புதுமுகங்களே. புத்தம் புதிய கலாசார மாற்றங்களால் குடும்பங்களிலும், உறவுகளின் மத்தியிலும் சிதைந்துள்ள வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை உருவாகியுள்ளது.
துப்புரவு தொழிலாளிக்கும், டாக்டர் மகள் ஒருவருக்கும் மலரும் காதலை மையமாக வைத்து உருவாகும் படம் "சாலையோரம்'. புதுமுகம் ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் செரீனா நடிக்கிறார். பி.வாசுவின் உதவியாளர் மூர்த்தி கண்ணன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குநர்... ""மகத்துவம், புனிதம் எனப் பேசுகின்ற காதல்களுக்கு இப்போது இடமில்லாதது போல் ஒரு தோற்றம். இதுவும் அப்படிப்பட்ட கதை களம்தான். கல்லூரி பெண்ணுக்கும், அதே கல்லூரி உணவகத்தில் வேலை பார்த்த இளைஞனுக்கும் காதல் என கடந்த போன செய்தியின் துரத்துதல்தான் இந்த கதை. பொருளாதார பிரச்னைகளைத் தாண்டி இப்போதைய சூழலில் ஒரு காதல் ஜெயிக்குமா? என்பதற்கான பதில்தான் இந்த படம்'' என்றார் மூர்த்தி கண்ணன்.
நீண்ட இடைவெளிக்குப் பின் பாக்யராஜ் "3 ஜீனியஸ்' படத்தில் விஞ்ஞானி வேடம் ஏற்று நடித்து வருகிறார். இதே போன்று இயக்குநர் பாண்டியராஜும் "ஆய்வுக்கூடம்' என்ற படத்தில் விஞ்ஞானி வேடத்தில் நடிக்கிறார். மூளையை மாற்றி வைத்தால் மனிதன் குணம் மாறுகிறதா? என ஆராய்ச்சி செய்யும் வேடம். ஆராய்ச்சிக்கு அரசின் அனுமதி கிடைக்காததால் திருட்டுத்தனமாக 2 பேரின் மூளையை மாற்றி வைத்து விடுகிறார். அதன் பின் நடப்பனவற்றை காமெடியாக சொல்வதுதான் படம். கணபதி, சத்யஸ்ரீ உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். அன்பரசன் கதை, எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஆர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் முத்துக்குமார் தயாரித்து இயக்கும் படம் "வெண்ணிலா அரங்கேற்றம்'. தினேஷ், சமஸ்தி, மிதுனாவாலியா, அன்புமொழி உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். ""நகர்ப்புறங்கள் தன்னுடைய பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து வெகு தூரம் நகர்ந்து வந்து விட்டன. வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்கிற வேளையில், பாரம்பரிய மதிப்பீடுகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையிலிருந்து தவறி விட்டோம். பலமானவன், பலவீனமானவனை அடித்து வாழ்வதே அன்றாடக் கதையாகி விட்டது. தனி மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் நிறைய இருக்கின்றன. பெண்களுக்கு இன்னும் பிரச்னைகள். இந்த ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கான வழிகாட்டுதல்கள்தான் இந்தப் படம்'' என்கிறார் இயக்குநர்.
ஸ்ருதிஹாசன் தினமும் தன்னை பற்றிய லேட்டஸ்ட் தகவல்களை டிவிட்டரில் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் அவர் ஃபேஸ்புக்கில் இணையாமல் இருந்தார். இதனால் சிலர் அவரது பெயரில் போலி பக்கம் தொடங்கி தவறான தகவல்களை வெளியிட்டு வந்தனர். திடீரென அந்த பார்ட்டியில் கலந்து கொண்டேன். இந்த படத்தில் நடிக்கிறேன். இந்த நடிகரை பற்றி அந்த கருத்து என ஸ்ருதியை பிரச்னையில் சிக்க வைத்து விடும் போலி தகவல்கள் அதிகமாக இடம் பெற்றன. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் ஸ்ருதி. இதையடுத்து தானே ஃபேஸ் புக்கில் இணைய முடிவு செய்து விட்டார். ""ரசிகர்கள் பலர் ஃபேஸ்புக்கில் சேர அழைப்பு விடுத்தனர். போலிகளை தவிர்க்கவே இப்போது ஃபேஸ் புக்கில் இணைந்துள்ளேன். இனி என்னை பற்றி அனைத்து தகவல்களும் உண்மையாக இருக்கும்'' என்றார் ஸ்ருதி.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னக மொழிகளில் வந்த பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் அஜித் நடித்து விஷ்ணுவர்தன் இயக்கிய "ஆரம்பம்' படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அஜித் வேடத்தை சல்மான்கான் ஏற்பதாக தகவல் வெளியானது. தற்போது அந்த வேடத்துக்கு பலத்த போட்டி எழுந்துள்ளது. படம் வெளியானதுமே அதை துபையில் இருந்து பார்த்தார் ஷாருக்கான். விஷ்ணுவர்தனைப் பாராட்டினார். அப்பட ரீமேக்கில் நடிக்கவும் விருப்பம் தெரிவித்தார். வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் அது பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடரவில்லை. இந்நிலையில் அஜித் வேடத்தில் நடிக்க அக்ஷய்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். இவர்தான் "ஆரம்பம்' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கிறாராம். ஷாருக்கான் இது பற்றி பேசாத நிலையில் அக்ஷய், சல்மான் இடையே போட்டி நிலவுகிறது. இதே போல் ஆர்யா வேடத்தில் நடிக்க வளரும் ஹீரோக்கள் இடையே போட்டி உருவாகியிருக்கிறதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.