தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரத்தம் அழுத்தம் சீராக..!

பொதுவாகவே அதிக இரத்த அழுத்தத்திற்குக் காரணமாக அலுவல் அல்லது தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் மனஉளைச்சல், காரசாரமான விவாதம், அதிக

எஸ். சுவாமிநாதன்

எனது வயது 53. தற்போது ஆ.ட.  160/90 உள்ளதாகவும், கொழுப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிய வந்தது. நான் இதுவரை எந்த வித மருந்துகளும் உபயோகித்ததில்லை. இதற்கு ஆயுர்வேதமருந்துகள் உள்ளனவா?

கு.ர.ரமேஷ்பாபு,  மதுரை.

பொதுவாகவே அதிக இரத்த அழுத்தத்திற்குக் காரணமாக அலுவல் அல்லது தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் மனஉளைச்சல், காரசாரமான விவாதம், அதிக அளவில் தேநீர் பருகுதல், சிறுசிறு விஷயங்களுக்குக் கூட பொறுமையுடன் செயல்படாத தன்மை, முன்கோபகுணம், அதிக பதற்றம் ஆகியவற்றை உடையவராக நீங்கள் இருந்தால் அவற்றை மாற்றிக்கொள்வது, உணர்ச்சிக் கொந்தளிப்பான சூழ்நிலைகளை விட்டு அகலுவது அவற்றிற்குத் தக்கப் போக்கு காட்டி விடுபட முனைவது போன்றவற்றை முயற்சிக்கவும்.

இதயத்திலிருந்து செயல்படும் வியான வாயுவின் அழுத்தமானது மனதின் சஞ்சலத்திற்கு ஏற்றவாறு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும். அதிகமான கவலை, கோபம், வெறுப்பு போன்ற மனநிலைகளில் வியான வாயுவின் சீற்றம் இதயப் பகுதியில் துரிதப்படுத்தப்பட்டு அதனுடைய சஞ்சார விசேஷமானது இரத்தக் குழாய்களின் வழியாக இயங்கும்போது இரத்தக்குழாய்ச் சுவர்களில் அதனுடைய அழுத்தத்தை அதிகரித்துவிடும். அதுவே இரத்தக்கொதிப்பிற்கு ஒரு முக்கியக் காரணமாக அமையலாம். வியான வாயுவைக் கட்டுப்படுத்தும் தான்வந்தரம், மஹாதான்வந்தரம், வாயு குளிகை போன்றவற்றின் உள் உபயோகம் வாதத்தினால் ஏற்படக்கூடிய இரத்தக்கொதிப்பைக் குணப்படுத்தும்.

பித்ததோஷத்தின் குணங்களாகிய வேகமாக ஊடுருவும் தன்மை மற்றும் சூடு ஆகியவற்றின் சீற்றத்தை அதிக காரம், புளி, உப்பு, பட்டை, சோம்பு, மசாலாப் பொருட்கள், மதுபானச் சேர்க்கை, வெற்றிலைப் பாக்கு போன்றவற்றின் மூலமாக இரத்தக்குழாய்களில் பரவச் செய்துவிட்டால் அதுவும் இரத்தக்கொதிப்புக்குக் காரணமாகலாம். அவிபத்தி சூரணம் எனும் ஆயுர்வேத மருந்தை மருத்துவர் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டால் பித்தத்தினால் ஏற்படும் இரத்தக்கொதிப்பை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.

நீங்கள் அதிக இனிப்பு, புளிப்பு, உப்பு ஆகியவற்றின் சேர்க்கையைக் கொண்ட உணவுவகைகளை அதிகம் சாப்பிடுபவராக இருந்தால் அதனால் ஏற்படும் கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, நிலைப்பு ஆகியவற்றின் சேர்க்கையானது இரத்தக்குழாய்களின் உட்பகுதிகளில் படிவங்களாகத் தங்கும்பொழுது இரத்தத்தினுடைய வேகமானது தடைபட்டு, அதனால் உட்புறக் குழாய்களில் அழுத்தம் அதிகரிக்கலாம். அதிக வேலைப் பளு இல்லாத ஒரே இடத்தில் அமர்ந்து பல மணி நேரம் வேலை செய்தல், பகல் உறக்கம், சோம்பேறித் தனமானதொரு வாழ்க்கைமுறை உள்ளவர்களுக்கும் இதுபோன்ற படிவங்கள் அதிகமாக இரத்தக்குழாய்களில் சேர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் உணவில் கசப்பும், துவர்ப்புமாகிய சுவைகளைக் கொண்ட கீரைகள், கறிகாய்கள், பட்டை, சோம்பு, சீரகம், ஓமம், மிளகு ஆகியவற்றின் சேர்க்கை சற்றுத் தூக்கலாக இருந்தால், அவற்றின் சூடான வீரியத்தினால் குழாய்களில் படிந்துள்ள படிமங்கள் கரைந்து இரத்த அழுத்தமானது சாதாரண நிலைக்கு வந்து விடும். லோத்ராஸவம், அயஸ்க்ருதி, நிம்பாம்ருதாஸவம் போன்ற மருந்துகள் இதுபோன்ற நிலைகளில் சாப்பிட உகந்தவை.

மேற்குறிப்பிட்ட காரணங்களால் உடலில் உள்ள கொழுப்பானது சீரான நிலையில் இல்லாமல் இரத்தத்தில் அதிக அளவில் காணப்படும் வாய்ப்பிருப்பதால் அவற்றிற்கான சிகிச்சை முறையை வரையறுத்துக் கூறுவதென்பது மருத்துவரின் நேரடியான தொடர்பின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். பொதுவாகவே, ஆயுர்வேத மருந்துகளாகிய சிலாசத்துபர்ப்பம், சிருங்கீபர்ப்பம், லோஹபஸ்மம், த்ரிபலாசூரணம் போன்றவை அதிக கொழுப்பை உடலிலிருந்து நீக்கக் கூடியவை. பாகல் இலை, கோவைக்காய், பாகற்காய், பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, வாழைத்தண்டு, வாழைப்பூ, எலுமிச்சம்பழம், நெல்லிக்காய் போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT