கமல்ஹாசனின் அடுத்த படம் "உத்தம வில்லன்'. இதன் படப்பிடிப்புக்காக மத்திய பிரதேசம் சென்றுள்ளார் கமல்ஹாசன். வரும் தீபாவளிக்கு படம் வெளி வர இருப்பதால் முழு மூச்சாக படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. அதிரடி மற்றும் ஆக்ஷன் இல்லாமல் இப்படத்தின் கதையை முழுக்க முழுக்க நகைச்சுவை பின்னணியில் வடிவமைத்துள்ளார் கமல். இதில் கிராமியக் கலைஞராக வேடம் ஏற்க உள்ளாராம். படத்தின் திரைக்கதை மற்றும் கதை பொறுப்பையும் அவரே ஏற்றுள்ளார். நடிகர் ரமேஷ் அரவிந்த் படத்தை இயக்குகிறார். கிரேஸி மோகனுடன் இணைந்து கமலும் வசனங்களை எழுதுகிறார். ஜிப்ரான் இசையமைப்பில், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கமலின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
சிவப்பு விளக்கு பெண்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "சிவப்பு எனக்குப் பிடிக்கும்'. புதுமுகம் சான்ட்ரா எமி கதையின் முக்கியத்துவம் மிகுந்த வேடத்தில் நடிக்கிறார். பல புதுமுகங்களுடன் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார் யுரேகா. படம் குறித்து யுரேகா... ""பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீபத்திய தலைப்பு செய்திகளாகி வருகின்றன. பத்திரிகை செய்திகளில் பாலியல் குற்றங்கள்தாம் அதிகம். வறுமை, சமூக விரோதிகள் என ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக மாற காரணங்கள் நிறைய இருக்கின்றன. அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும், இளைய சமுதாயத்தை பாதுகாத்து அழைத்து செல்வதும் இந்தப் படத்தின் கடமையாக இருக்கும்'' என்றார்.
காதலுக்கும், நட்புக்கும் இடையிலான குடும்ப உறவுகளின் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம் "அழகின் பொம்மி'. கே.வி.எஸ். திரைக்கூடம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை புதுமுகம் விஜய் கைலாஷ் எழுதி, இயக்குவதுடன் முக்கிய பாத்திரமேற்று நடிக்கிறார். சன்விகா, ஆனந்த், ஆதித்தியா உள்ளிட்ட புதுமுகங்கள் பல்வேறு பாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். எவ்விதக் காரணங்களும் இல்லாமல் பாதிக்கப்படுகிற பெண், நட்பாலும், காதலாலும் தனக்கு நேர்ந்ததை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதை.
மதுரையைக் களமாகக் கொண்டு உருவாகும் தன் இரண்டாவது படத்துக்கு "பீட்சா' படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் வைத்திருக்கும் பெயர் "ஜிகர்தண்டா'. மதுரை என்றாலே அரிவாள், மல்லிகைப்பூ, கோயில் இவையெல்லாம்தான் நினைவுக்கும் வரும். அதென்ன ஜிகர்தண்டா? என்றதும்... ""பீட்சா' என பெயர் வைத்ததால் வெற்றி கிட்டியது. அதனால்தான் இப்போது "ஜிகர்தண்டா'வா? எனக் கேட்கிறார்கள். எனக்கு எந்த சென்டிமெண்டும் கிடையாது. நீங்கள் சொன்ன விஷயங்களைத் தாண்டி மதுரையில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. காதல், வன்முறை என பேசுகிற வழக்கமான படங்கள் மாதிரி இல்லாமல் இசை, காட்சி அமைப்பு, வசனங்கள் எனப் எல்லாமே வேறு மாதிரியான இடத்தில் இந்தப் படத்தை கொண்டு சேர்க்கும். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படம்தான்'' என்றார் கார்த்திக் சுப்ராஜ்.
"கருப்பசாமி குத்தகைதாரர்', "வெடிகுண்டு முருகேசன்' என முழுக்க முழுக்க காமெடி பேக்கேஜ் கொடுத்த கோவிந்தமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் படம் "பப்பாளி'. செந்தில், இஷாரா, சிங்கம் புலி, ஜெகன், இளவரசு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ""அப்பா - மகன் உறவு அத்தனை அற்புதமானது. ஆனால் ""வளர்ந்த பிறகும் ஏன் அப்பா இன்னும் உன் விரலையே பிடித்துக் கொண்டு நான் நடக்க ஆசைப்படுறே....'' என மகன்கள் கேட்கிற கேள்விதான் இந்தப் படம். எல்லோரின் குடும்பத்திலும் நடக்கிற விஷயம்தான். தாத்தாவின் நிறைவேறா ஆசை, அப்பா மேல் விழும். அப்பாவின் லட்சியங்கள் மகன்கள் மேல் திணிக்கப்படும். இது தினமும் யாருக்கோ, எங்கேயோ தினமும் நடந்துக் கொண்டே இருக்கிற விஷயம். கையேந்திபவன் வைத்திருக்கிற ஒரு அப்பாவின் பையன் படித்து ஐ.ஏ.எஸ்.ஸாக ஆசைப்படுகிறான். ஆனால் அப்பாவோ ""நான்தான் இப்படி இருக்கேன். என் மகனாவது சரவணபவன் தரத்துக்கு ஒரு ஹோட்டல் முதலாளி ஆகணும்'' என ஆசைப்படுகிறார். இதற்கிடையில் தவிர்க்க முடியாமல் ஒரு காதல். கடைசியில் யார் ஆசை வென்றது என்பது கிளைமாக்ஸ்'' என்கிறார் இயக்குநர்.
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "ஐ'. இந்தியாவின் ஒலிம்பிக் கனவு என்பதை மையமாகக் கொண்டு உருவாகும் இப்
படத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்கின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல வெளிநாட்டு படப்பிடிப்புகள், ஹாலிவுட் கலைஞர்களின் பங்களிப்பு என படம் உருவாகி வருவதால், ஷங்கரின் வழக்கமான படப்பிடிப்பு நாள்களை கடந்துள்ளது "ஐ'. இந்நிலையில் ஷங்கர் தன் வலை தளத்தில் ""ஐ' பல கட்ட சோதனைகளை கடந்து முடிந்து விட்டது. ஒரு பாடல் மட்டுமே மீதம் உள்ள நிலையில், அனைத்தும் நல்ல விதமாக அமையும் பட்சத்தில் கோடை விடுமுறைக்கு "ஐ' படம் வெளியாகும்'' எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.