தினமணி கதிர்

திரைக்கதிர்

"உத்தம வில்லன்' படப்பிடிப்பு வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கிடையில் படத்தின் கரு மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து அறிவித்திருக்கிறார்

ஜி. அசோக்

"உத்தம வில்லன்' படப்பிடிப்பு வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கிடையில் படத்தின் கரு மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து அறிவித்திருக்கிறார் கமல்ஹாசன். 8-ஆம் நூற்றாண்டு கூத்து கலைஞன்... மனோ ரஞ்சன் என்ற 21 ஆம் நூற்றாண்டின் சூப்பர் ஸ்டார் என "உத்தம வில்லன்' படத்தில் இரட்டை வேடங்கள் ஏற்கிறார் கமல்ஹாசன். கூத்து கலைஞனுக்கு ஜோடியாக ஊர்வசி, சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கின்றனர். 8-ஆம் நூற்றாண்டின் சர்வாதிகாரி முத்தரசனாக நாசர், ஜேகப் ஜக்காரியா வேடத்தில் ஜெயராம், அவரது வளர்ப்பு மகளாக பார்வதிமேனன் நடிக்கின்றனர். சொக்கு செட்டியார் வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர், 8-ஆம் நூற்றாண்டில் மன நோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கின்றனர். கமலைக் கண்டெடுத்த சினிமா குருவான கே.பாலசந்தர் முதன் முறையாக சினிமாவில் நடிக்க இருக்கிறார். ஊர்வசியின் தந்தையாக இயக்குநர் கே.விஸ்வநாத் வேடம் ஏற்று நடிக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

அடுத்தடுத்து படப்பிடிப்பு, முன்னணி இடம் தரும் இமேஜ் ஆகியவற்றால் பட புரமோஷன்களில் நடிகைகள் வெகுவாகக் கலந்து கொள்வதில்லை. காஜல் அகர்வால், சரண்யாமோகன் உள்ளிட்ட பலரின் மீது வந்த தொடர் புகார்களால், நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து வைக்குமாறும், பட வெளியீட்டுக்கு ஒத்துழைத்த பின்னரே அந்த சம்பளத்தை நடிகைகளுக்கு அளிக்கவும் தயாரிப்பாளர் சங்கம் யோசனை தெரிவித்தது. இருந்தும் பலனில்லை. இதில் தற்போது சேர்ந்திருப்பவர் ஹனிரோஸ். "சிங்கம்புலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஹனிரோஸ், "காந்தர்வன்' படத்தில் நடித்துள்ளார். சலங்கை துரை இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ளார். சிறு பட்ஜெட் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு விளம்பரங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. ஆனால் படப்பிடிப்பு முடிந்த கையோடு கேரளத்துக்கு போன ஹனிரோஸ், படம் குறித்த எவ்வித விளம்பரங்களிலும் கலந்து கொள்ளவில்லை. கோலிவுட் மேனஜர் மற்றும் ஹனிரோஸின் நேரடி தொலைபேசி எதில் தொடர்பு கொண்டாலும் பதில் இல்லை. தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் தரப்பட்டுள்ளது.

சமீப சம்பவங்கள் சிலவற்றின் பாதிப்பால் உருவாகி வரும் படம் "காதலி காணவில்லை'. தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. கன்னடத்தில் "பீஷ்மர்' என்ற பெயரில் உருவாகிறது. கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹார்த்திகா நடிக்கிறார். ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் முக்கிய பாத்திரங்கள் ஏற்க இருக்கின்றனர். ஒளிப்பதிவு தயாள் ஓஷா. ரவி - ராஜா என்ற இரட்டை இயக்குநர்கள் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகின்றனர். காதல் என்றால் புனிதம் என்பதற்கும், ஒரு தடவை காதலில் தோற்று விட்டால், மறுபடியும் மீண்டும் இன்னொருவர் மீது காதல் வராது என்பதற்கும் இடைப்பட்ட நம் கலாசாரத்தின் வலிமைதான் திரைக்கதை. பெண்களுக்கு எதிரான சமீபத்திய சம்பவங்கள், பாலியல் வன் கொடுமைகள் உள்ளிட்டவற்றின் பிரதிபலிப்புகள் காதலுக்கு எதிராகத் திரும்புகிற ஒரு சூழலைப் படம் பிடிக்கும் விதமாக கதை உருவாகியுள்ளது. ஆக்ஷன் மற்றும் காதல் கதையாக இருக்கும். சென்னை, பெங்களூர், தருமபுரி, அரூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.

"சில்லுன்னு ஒரு காதல்' தந்த கிருஷ்ணாவின் அடுத்த இயக்கம் "நெடுஞ்சாலை'. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பினை அடுத்து இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். ""கன்னியாகுமரியில் இருந்து இமயமலை உச்சி வரை நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலையின் ஒவ்வொரு புள்ளியிலும் நிறையக் கதைகள். தேனி மாவட்டத்தில் கேரள நெடுஞ்சாலைதான் இந்த கதையின் மையப்புள்ளி. அங்கே ஹோட்டல் நடத்தும் பெண்தான் ஹீரோயின். அங்கு காசு இல்லாமல் சாப்பிட்ட ஹீரோவுக்கும் அவளுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் தொடங்குகிறது காதலும், கதையும். ஆனால் தேனியில் மட்டுமே கதை நிற்காது. இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் நேர்த்தியான பயணத்தின் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம்மை இழுத்துக் கொண்டு போவார்கள். 80-களில் நடக்கும் கதை என்பதால் படத்துக்கு அதற்கேற்ற சூழலை கொண்டு வருவதில்தான் சவால். இப்போதைய சாலைகளுக்கும், 30 வருடங்களுக்கு முந்தைய சாலைகளுக்கும் நிறைய வித்தியாசம். அதனால் இந்திய வரைபடத்தில் இல்லாத சிற்றூர்களுக்குச் சென்று படம் பிடித்திருக்கிறோம்'' என்கிறார் இயக்குநர் கிருஷ்ணா. 

"ரமணா', "கஜினி', "7-ம் அறிவு' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் நடித்த "துப்பாக்கி' படத்தை இயக்கினார். இந்நிலையில் மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். சமந்தா ஹீரோயின். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் முடிவடைந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏற்கெனவே அஜித் நடித்த "தீனா' படத்தை இயக்கியிருந்த முருகதாஸ், அஜித்துக்காக திரைக்கதை எழுதி வருகிறார். "வயதுக்கு ஏற்ற தோற்றத்துக்கு முன்னுரிமை இருக்கட்டும்' என்ற அஜித்தின் நிபந்தனையை ஏற்று இந்த திரைக்கதையின் இறுதி கட்ட வேலைகளில் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய் படத்தை முடித்து விட்டு அஜித் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. முன்னதாக சிரஞ்சீவி நடித்த "ஸ்டாலின்' படத்தை தெலுங்கில் இயக்கினார் முருகதாஸ். கடந்த ஆண்டு ஆர்யா - நயன்தாரா நடித்த "ராஜா ராணி' படத்தை தயாரித்தார். அப்படம் தெலுங்கில் டப் ஆகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கிலும் புதுப்படம் இயக்கும் முடிவில் இருக்கிறார். மகேஷ்பாபு, ராம்சரண் இருவரில் ஒருவருக்கு முன்னுரிமை இருக்கும் என்கிறார்கள்.

"யுனிவர்சிட்டி', "ராம்', "ஏழுமலை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கஜாலா. தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கில் நடித்து வந்த அவர், திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டார். திருமணம் நடந்ததாகச் செய்திகளும் பரவின. இந்நிலையில் மீண்டும் அவர் நடிக்க வருவதாக கூறியிருக்கிறார். ""இத்தனை வருடங்களாக நடிக்காததற்கு காரணம், என் மேற்படிப்பை தொடர்ந்ததுதான். நடிகையாக புகழ், பணம் சேர்த்தாலும் கல்வி முக்கியமானது என புரிந்து கொண்டேன். அதனால் சினிமாவை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். கதாநாயகியாக  நடிக்க வாய்ப்பு வந்தாலும், முன்பு மாதிரியே  நல்ல சினிமாக்களில் மட்டுமே இருக்க விரும்புகிறேன். நதியா, ரேவதி, ஷாலினி உள்ளிட்டோரின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். அவர்களை ரோல் மாடலாக வைத்து மீண்டும் தமிழில் நடிப்பேன். பழைய சினிமா நண்பர்களிடம் இன்றளவும் தொடர்பில்தான் இருக்கிறேன். நல்ல தமிழ் சினிமாக்களைப் பார்க்கவும் தவறியதில்லை. இனி நல்ல சினிமாக்களில் நிச்சயம் இருப்பேன்'' என்றார் கஜலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT