தினமணி கதிர்

திரைக்கதிர்

"பரதேசி' படத்துக்குப் பின் பாலா இயக்கும் படத்துக்கு "தாரை தப்பட்டை' என பெயரிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட கூத்து கலைஞர்களின் வாழ்க்கையைப்

ஜி. அசோக்

"பரதேசி' படத்துக்குப் பின் பாலா இயக்கும் படத்துக்கு "தாரை தப்பட்டை' என பெயரிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட கூத்து கலைஞர்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்கும் விதமாக உருவாகும் இப்படத்தில், நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞராக சசிகுமார் நடிக்கிறார். நாதஸ்வர கலைஞர் என்பதால் இதுவரை இல்லாதவாறு தாடி மற்றும் மீசையை மழித்துள்ளார். மேலும், தஞ்சை வட்டாரப் பகுதிகளில் உள்ள நாதஸ்வர கலைஞர்களிடம் நாதஸ்வரம் வாசிக்கவும் பயிற்சி பெற்று வருகிறார். கூத்துக் கலைஞராக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவரது தோற்றத்திலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கரகாட்டக் கலைஞராக வரலெட்சுமி நடிக்கிறார். அனைத்து வகை நடனங்களிலும் சிறப்பு பயிற்சி பெற்ற வரலெட்சுமிக்கு, கரகாட்ட நடனம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இளையராஜாவின் இசையமைப்பில் செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். கரகாட்டம் மற்றும் கூத்துக்கலை குறித்த முழுமையான பதிவாக இப்படம் உருவாகவுள்ளது. ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

திருமணத்துக்கு முன் நான்கு இளம் காதல் ஜோடிகள் சுற்றுலா செல்ல முடிவெடுக்கின்றனர். இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தளங்களைச் சுற்றி பார்த்த பின்னர், ஒரு காட்டுப் பங்களாவில் தங்கி ஓய்வெடுக்கின்றனர். நான்கு ஜோடிகளில் ஒரு ஜோடி மட்டும் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதனால் மற்ற ஜோடிகள் அதிர்ச்சியில் உறைகிறார்கள். அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களே "அமாவாசை' படத்தின் கதை.  கோட்டா சீனிவாசராவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார் ராகேஷ் சவாந்த்.

பெஸ்ட் ரிலீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பள்ளிக்கூடம் போகாமலே'. கணேஷ் வெங்கட்ராம், தேஜாஸ் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கேரளத்தில் ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை பட்டியலில் இடம் பிடித்த ஐஸ்வர்யாராஜா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். புலவர் புலமைப்பித்தனின் பேரன் தீலிபன் முக்கிய வேடம் ஏற்று இப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெயசீலன். தோல்வி என்பது பாடமே தவிர, அதுவே வாழ்க்கை இல்லை என்ற கருவை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.  மதிப்பெண்கள் மட்டும்தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக பார்க்கப்படுகிறது. ஓர் ஆண்டு காலமாக மனப்பாடம் செய்த பாடங்களை குறிப்பிட்ட சில மணி நேரங்களில் எதிர்பார்க்கும் கல்வி முறை இங்கே கேள்வி குறியானது. தேர்வில் தோற்று விடுவோம் என்கிற பயத்தில் மாணவர்கள் எடுக்கும் தற்கொலை முயற்சிகளுக்கு பாடம் புகட்டும் விதத்தில் இப்படம் உருவாகி வருகிறது.

 "அட்டக்கத்தி', "எதிர்நீச்சல்' படங்களுக்குப் பின் "நளனும் நந்தினியும்' படத்தில் நடித்து வருகிறார் நந்திதா. முன்னணி இயக்குநர் மற்றும் ஹீரோக்களின் படங்களை எதிர்பார்த்தவருக்கு சமீபத்தில் அமைந்துள்ள படம் "இடம் பொருள் ஏவல்'. முதலில் மனிஷா யாதவ் இப்படத்துக்காக ஒப்பந்தம் ஆகி இருந்தார். போட்டோ ஷூட் முடிந்த நிலையில் ஏற்கெனவே சொன்ன கேரக்டரில் மாற்றம் இருந்ததால் அப்படத்திலிருந்து மனிஷா விலகினார். இதையடுத்து இப்போது நந்திதா. ""அட்டக்கத்தி', "எதிர்நீச்சல்' ஆகிய படங்கள் நல்ல பெயர் கொடுத்தது. இனியும் அப்படித்தான் நடிக்க விரும்புகிறேன். "நளனும் நந்தினியும்' காமெடி கலந்த காதல் கதை. "இடம் பொருள் ஏவல்' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதில் மகிழ்ச்சி. என் கதாபாத்திரத்தின் தன்மை எப்படி இருக்க வேண்டும் இயக்குநரிடம் பல முறை கேட்டு அதற்கேற்ப நடிக்க இருக்கிறேன். இந்த படம் எனக்கு முக்கியமான படமாக இருக்கும். தமிழ் தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தவில்லை''என்கிறார் நந்திதா.

கதைத் தேர்வுகளில் நிதானமாக இருக்கிறார் அதர்வா. திரைத்துறைக்கு வந்த நான்கு வருடங்களில் மூன்றே படங்களைத்தான் முடித்திருக்கிறார். தற்போது "ஈட்டி', "இரும்புக்குதிரை' என ஒரே நேரத்தில் இரு படங்கள். "" எல்லா ஹீரோக்களுக்கும் வருஷத்துக்கு ஒரு படத்தில் நடிக்கத்தான் ஆசை. ஆனால் என் வேகம் அப்படியில்லை. "பாணா காத்தாடி' முதல் படம் என்பதால் அதிக நேரம் எடுத்துக் கொண்டது. "முப்பொழுதும் உன் கற்பனைகள்' தொழில்நுட்ப ரீதியாக நாள்களை எடுத்துக் கொண்டது.  "பரதேசி' படத்தை விட்டு வெளியே வர நிறையக் காரணங்கள் இருந்தன. "பரதேசி'க்காக நான் தேசிய விருது எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாலா சாருக்கு எதிர்பார்த்தேன். இப்போது "ஈட்டி', "இரும்புக்குதிரை' என வரிசையாக படங்கள் ஒப்புக் கொண்டுள்ளேன். இதுவரைக்கும் பார்க்காத லுக் இந்தப் படங்களில் இருக்கும். "இரும்புக்குதிரை'யில் பைக் ரேஸர், "ஈட்டி'யில் அத்லெட் கேரக்டர். படம் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அத்லெட் என நம்புவதற்காக முதன் முதலாக சிக்ஸ் பேக் வைத்திருக்கிறேன்'' என்றார் அதர்வா.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யாவின் "அஞ்சான்' இறுதிக் கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது.  யு டி.வி. மோஷன் பிக்சர்ஸ் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். ஆக்ஷன் மற்றும் காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்துக்காக சமீபத்தில் குத்துப்பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. பாலிவுட் உள்ளிட்ட இந்திய சினிமாக்களில் குத்துப்பாடலுக்கு பெரும் பெயர் பெற்ற சித்ரங்காதா சிங் இப்படத்துக்காக நடனமாடியுள்ளார். படத்தின் பெரும் பகுதி காட்சிகள் மும்பையில் படமாகி வருவதால், இப்பாடலும் மும்பையில் பிரம்மாண்ட செட் அமைப்புகளின் பின்னணியில் படமாகியுள்ளது. விவேகா எழுதியுள்ள இப்பாடல் ""சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி... சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி...'' எனத் தொடங்குகிறது. இப்பாடலுக்காக மட்டும் சித்ரங்காதா சிங்கிற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT