பிரான்ஸில் மரணமடைந்த இந்திய மகாராணி!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மகாராஜா சூர்யராவ் தெரு மற்றும் மகாராணி சின்னம்மா தெரு ஆகியவற்றுக்குப்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மகாராஜா சூர்யராவ் தெரு மற்றும் மகாராணி சின்னம்மா தெரு ஆகியவற்றுக்குப் பின்னணியில் ஒரு சுவாரசியமான சம்பவமே உள்ளது. இவை இரண்டுமே பித்தாபுரம்ராஜா மற்றும் அவரது மனைவி நினைவாக வைக்கப்பட்டதாகும். இவர்கள் மகாராஜா சூர்யராவ் தெருவில் உள்ள டன்மோர் பங்களாவில் வசித்தபோது, 1917ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சீதாதேவி இவர்களுக்கு மகளாகப் பிறந்தார். பிறந்தது முதலே அழகு தேவதையாக விளங்கிய இவர், வையூர் ஜமீன்தாரை திருமணம் செய்து கொண்டு, மூன்று குழந்தைகளுக்குத் தாயானார்.
1943ஆம் ஆண்டு பரோடா மன்னர் பிரதாப் சிங் கெய்க்வாட், சென்னையில் நடந்த குதிரை பந்தயங்களுக்கு வந்த போது, சீதாதேவியைச் சந்தித்து மனதைப் பறிகொடுத்தார். அவரது அழகு மன்னரைப் பைத்தியமாக்கியது. சீதாதேவியும் அவரை விரும்பினார். ஆனால் இந்திய சமூகம், ஒரு மாநிலத்தின் மன்னர் இன்னொருவர் மனைவியுடன் வெளிப்படையாக வாழ்வதை ஏற்காது என்பதால், மன்னரின் வக்கீல்கள் ஒரு யோசனையைக் கூறினர். சீதாதேவி வேறு மதத்திற்கு மாறினால், அதன் பின்னர் அவர் தங்களை மணந்து கொள்ளத் தடை இருக்காது என்றும் கூறினர். இந்த யோசனைக்கு ஒப்புக் கொண்ட சீதாதேவி வேறு மதத்திற்கு தான் மாறுவதோடு, தன் ஜமீன்தார் கணவரையும் மதம் மாற கூறினார். புதிய மதத்தில் சேருவதன் மூலம் பலவித சலுகைகளைப் பெறலாமென்று கூறினார். இதற்கு ஜமீன்தார் ஒப்புக் கொள்ளவில்லை என்பதோடு எதிர்ப்பும் தெரிவித்தார். ஆனால் சீதாதேவி மதம் மாறியதோடு, தன்னுடைய கணவர் இந்து என்று காரணம் காட்டி விவாகரத்தும் பெற்றார். இதன் பின்னர் சுதந்திரப் பறவையான இவர், அபூர்வமாகக் கிடைத்த விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் இந்துவாக ஆர்யசமாஜ மூலம் மதம் மாறி கெய்க்வாட்டை திருமணம் செய்து கொண்டு பரோடா மகாராணி என்ற அந்தஸ்தைப் பெற்றார். தங்கள் தந்தையுடன் புதிய மகாராணியை வரவேற்க பரோடா மன்னரின் நான்கு குழந்தைகளும் தயாராகக் காத்திருந்தனர்.
சபல புத்தி படைத்த இந்திய மன்னர்கள் மீது ஏற்கெனவே கோபத்தில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கம், இந்த நாடகத்தை அளவுக்கு மீறியதாகக் கருதியது. பரோடா மாநில சட்டப்படி பிரதாப் சிங் கெய்க்வாட்டுக்கு முன்பு ஆட்சியில் இருந்த அவரது தாத்தா மகாராஜா சாயாஜிராவ், இந்த சமஸ்தானத்தில் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே இன்னொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள யாருக்கும் உரிமையில்லை என்றொரு சட்டத்தை நிறைவேற்றியிருந்தார். அந்த உத்தரவை சுட்டிக்காட்டி விதிகளை மீறியதாக விளக்கம் அளிக்க கெய்க்வாட்டை நேரில் வரும்படி வைஸ்ராய் உத்தரவிட்டார்.
சீதாதேவியை திருமணம் செய்து கொண்ட போது அவர் மேஜர் என்றும், இந்து மதத்தைச் சார்ந்தவர் அல்ல என்றும், தன்னுடைய தாத்தாவின் உத்தரவு மக்களுக்குத்தானே தவிர, மன்னர் என்ற முறையில் தன்னைக் கட்டுப் படுத்தாது என்றும் கெய்க்வாட் விளக்கமளித்தார். சட்ட ஆலோசகர்களும் வைஸ்ராயிடம், மன்னரது விளக்கம் சரியானதுதான் என்றும், புதிய மகாராணியை பிரிட்டிஷார் ""ஹர் ஹைனஸ்'' என்று அழைக்கக் கூடாது என்றும், பரோடாவில் நடக்கும் விழாக்களில் பங்கேற்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள், சீதாதேவி வரும்போது அங்கிருந்து வெளியேறுவது நல்லதென்றும் கூறினர்.
இந்தத் தடை உத்தரவுகள் அரச தம்பதியரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. 1946 ஆம் ஆண்டு இரண்டாவது உலக யுத்தம் முடிந்ததும், இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதில் எந்த தடையும் இல்லாததால், யுத்தத்தால் பாதிக்காமல் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த மன்னராட்சி செய்யும் மொராக்கோ நாட்டில், மிகப் பெரிய அரண்மனை ஒன்றை விலைக்கு வாங்கி குடியேறினர். அந்த நேரத்தில் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் எட்டாவது இடத்தில் இருந்த பரோடா மன்னர், தன்னுடைய மாநிலத்தில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் மொராக்கோ நாட்டிற்குக் கொண்டு செல்ல முற்பட்டார்.
தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு செல்ல அவருக்கு உரிமை இருந்ததால் யாரும் அவரைக் கேள்வி கேட்க முடியவில்லை. மகாராணி சீதாதேவி மூலம் பரோடா கஜானாவில் இருந்த விலைமதிப்பற்ற செல்வங்கள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டன.
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் மன்னர்கள் தங்கள் சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைக்க ஒப்புக் கொண்டனர். பரோடா மன்னர் மறுத்தபோது இந்திய அரசு வலுக்கட்டாயமாக அவரது கஜானாவைக் கைப்பற்றி, திறந்தபோது அது காலியாக இருந்தது. இதன் பின்னர், கெய்க்வாட் கொண்டு சென்ற அனைத்து செல்வங்களையும் தங்களிடம் ஒப்படைக்கும்படி இந்திய அரசு உத்தரவிட்டது. வெளிநாட்டிலேயே தங்கியிருந்ததால் அவரது மன்னர் உரிமையும் ரத்து செய்யப்பட்டது. இனி சொத்துக்களைக் காப்பாற்றுவது சந்தேகம்தான் என்று கருதிய சீதாதேவி, தன்னுடைய அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பல விலையுயர்ந்த நகைகளைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார். சில நகைகளை நியூயார்க்கிலும், பாரிசிலும் இருந்த வான்கிளிஃப் அண்ட் ஏர்பெல்ஸ் நிறுவன கிளைகளில் கொடுத்து வடிவமைப்புகளை மாற்றிக் கொண்டார்.
இந்தியாவிலிருந்து வெளியேறி மொனாகோ நாட்டில் குடியேறியது முதல் சீதாதேவி வெகு ஆடம்பரமாகச் செலவழித்து வந்தார்.
அந்த காலத்தில் இந்தியப் பெண்கள் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது முக்காடு இட்டே பங்கேற்பதுண்டு. ஆனால் சீதாதேவி இந்த மரபைக் கடைபிடிக்கவில்லை. இவரது கையால் துவங்கும் நிறுவனங்கள் வெற்றியடைவதாகக் கருதியதால் திறப்புவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிறைய அழைப்புகள் வருவதுண்டு. இவர் தன்னுடைய மகன் பிரின்சியுடன் கலந்து கொள்வார்.
இதற்கிடையில் 1968ஆம் ஆண்டு பிரதாப்சிங் கெய்க்வாட் லண்டனில் மரணமடைந்தார். எஞ்சியிருந்த காலத்தில் வரி ஏய்ப்பிலிருந்து தப்பிக்க தன்னுடைய மகன் பிரின்சியுடன் நாடு நாடாகச் சுற்றியலைந்த சீதாதேவிக்கு பிரின்சிதான் தகுந்த துணையாக கருதப்பட்டான். ஆனால் கூண்டுக்குள் அடைப்பட்டிருப்பதாக கருதிய பிரின்சி, மது மற்றும் போதை மருந்து பழக்கங்களுக்கு ஆளாகி தனது 40வது பிறந்தநாளான்று 1985 ஆம் ஆண்டு மே மாதம் தன்னுடைய கழுத்தை தானே அறுத்துக் கொண்டு மரணமடைந்தான். அதன் பின்னரும் பரோடா மகாராணி என்ற மதிப்புடன் வாழ்ந்து வந்த சீதாதேவி, தனது 72வது வயதில் 1989ஆம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பிரான்ஸில் காலமானார்.