மழை, பனி, குளிர்நாட்களில் எனக்கு தலை கனத்தல், மந்தமான தலைவலி, உடல் பாரமாக இருத்தல், சோம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், மூக்கின் ஓரங்களில் குறுகுறுத்த உணர்ச்சி, கண் கலங்குதல், தொண்டையில் குறுகுறுத்த உணர்ச்சி, தும்மல் வருவது போன்ற உணர்ச்சி அடிக்கடி ஏற்படுதல், நாக்கின் ருசி அறியும் சக்தி குறைதல், மலச்சிக்கல், மூக்கிலும் கண்களிலும் லேசாக நீர் கசிதல் ஆகிய குறிகள் தென்படுகின்றன. இவை மாற வழி என்ன?
கோபு, குனியமுத்தூர்.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த குறிகள் அனைத்தும் ஜலதோஷத்தின் ஆரம்பநிலை அறிகுறிகளாகும். இந்நிலை முற்றும்போது கடுமையான ஜுரம், இடைவிடாத தும்மல், தாங்க முடியாத உடல் வலி, கண்ணெரிச்சல், கண்களிலும் மூக்கிலும் நீர் சுரத்தல், அமைதியின்மை ஆகிய குறிகள் ஜலதோஷத்தின் உச்சகட்டத்தைக் குறிக்கும். இதே போன்ற நிலை இன்புளுயன்சா, நிமோனியா போன்ற சுவாசப்பை மற்றும் சுவாசக் குழல் அழற்சி நோயிலும் தென்படலாம். இந்நிலையில் வித்தியாசப்படுத்தி நோயை நிர்ணயிக்கும் பொறுப்பை மருத்துவர்களிடம் விட்டுவிடவேண்டும்.
ஜலதோஷத்தின் ஆரம்ப நிலையில் வெந்நீர் அருந்துதல், ஆகாரத்தைப் பாதியாகக் குறைத்தல், சுலபமாக செரிக்கும் உணவுகளை உட்கொள்ளுதல், இரவில் வயிற்றை காலியாக வைத்திருத்தல், ஓய்வு கொள்ளுதல், காற்றுள்ள திறந்தவெளியில் உறங்குதல், புகையிலை, காபி, டீ போன்ற பானங்களை விலக்குதல் ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் ஜலதோஷத்தின் ஆரம்பநிலையைத் தவிர்க்கலாம் அல்லது கடுமையான நிலை ஏற்படாமல் நிச்சயமாகத் தடுக்கலாம்.
நோயின் கடுமையான நிலையில் ஒன்றிரண்டு நாள் மிளகுக் குடிநீரை மட்டும் அருந்தி பட்டினி போடுவதால் நோய் சுலபமாக நீங்கிவிடுவது, ஜலதோஷத்திற்கு சிறந்த சிகிச்சையாகக் கொள்ளலாம். பலருடைய அனுபவம் மூலம் கண்டது.
ஜலதோஷ நோய் நிலையில் சிக்கலும் குழப்பமும் கடுமையான நிலையும் இருக்குமானால் மருத்துவரின் உதவியை நாடி சிகிச்சை பெறுவதே சிறந்த வழியாகும். ஜலதோஷத்தில் எல்லா நிலைமைகளிலும் மேலுக்குப் பூசவும் உட்கொள்ளவும் கீழ்கண்ட இரு மருந்துகளும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
மேற்பூச்சுக்கு: 100 கிராம் நாட்டுச் சூடத்தை லேசாகப் பொடித்து ஒரு பாத்திரத்திலிட்டு, 400 மில்லி தேங்காயெண்ணெய்யைச் சூடாக்கி அதில் விடவும். கற்பூரம் நன்கு கரைத்து எண்ணெய்யோடு உறவாகிவிடும். அந்த எண்ணெய்யை ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு ஜலதோஷத்தில் மார்பு, தொண்டை மற்றும் வலியுள்ள பாகங்களில் தடவி வர நோயின் கடுமை குறையும்.
உள்மருந்து: இலவங்கப்பட்டை, தக்கோலம், ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி வகைக்கு 10 கிராம், இலவங்கம் 20 கிராம், சிறுநாகப்பூ 30 கிராம், மிளகு 40 கிராம், திப்பிலி 50 கிராம், சுக்கு 60 கிராம் ஆகிய மருந்து சரக்குகளை லேசாக வறுத்து நன்கு இடித்து மெல்லிய துணியில் சலித்து அத்துடன் 10 கிராம் நாட்டுச் சூடத்தை மெல்லியதாக பொடித்து முன் சூரணத்துடன் நன்கு உறவாகும்படி கலந்து அத்துடன் 250 கிராம் சர்க்கரையை (அஸ்க்கா) சூரணத்தைப் போலவே மெல்லிய துணியில் சலித்து சூரணத்தையும் சர்க்கரையையும் நன்கு கலந்து காற்றுப் புகாத பாட்டிலில் வைத்துக்கொண்டு வேளைக்கு 1/4 டீ ஸ்பூன் முதல் 1/2 டீ ஸ்பூன் வரை வெந்நீருடன் தினசரி மூன்றுவேளை சாப்பிட்டு முன் சொன்னதுபோல் மற்ற நியமங்களையும் அனுசரித்து வர ஜலதோஷத்தில் எந்த நிலைமையிலும் குணம் கிடைக்கும்.
ஆயுர்வேத கஷாய மருந்துகளாகிய வரணாதி, வ்யாக்ர்யாதி, தசமூலகடுத்ரயாதி, பலாஜீரகாதி, நயோபாயம், இந்துகாந்தம் மற்றும் தாளீசபத்ராதி சூரணம், கற்பூராதி சூரணம், சிதோபலாதி சூரணம், ஹரித்ராகண்டம், யோஷாதிவடகம், த்ரிகடு சூரணம், த்ரிபலா சூரணம், யஷ்டீ சூரணம். குளிகைகளில் அக்னிகுமாரரஸம், ஆஷால்யாதி குடிகா, கோரோசணாதி குடிகா, பில்வாதி, கோபீ சந்தனாதி. தைலங்களில் அசனபில்வாதி, அஸனமஞ்சிஷ்டாதி, அஸனஏலாதி, பில்வம் பாச்சோத்யாதி, வேணுபத்ராதி, மரிசாதி, ஏலாதி. பற்று இடும் மருந்துகளில் ராஸ்னாதி, ஏலாதி போன்ற தரமான மருந்துகள் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தத் தகுந்தவை.
தவிர்க்கப்படவேண்டியவை: இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை, சூடாறிப்போன உணவுப்பதார்த்தங்கள், உளுந்தை பிரதானமாகக் கொள்ளும், இட்லி, தோசை, வடை போன்றவை முக்கியமானவை. சேர்க்கப்பட வேண்டியவற்றில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவை. உடல்சூட்டை சீராக வைத்திருக்கக் கூடிய பட்டை, சோம்பு, கரம்மசாலா பொருட்கள், சுக்கு மற்றும் சீரகம் போட்டுக் காய்ச்சிய வெந்நீர், கருந்துளசி மற்றும் மிளகு இடித்து வைத்துக் கொண்டு இரண்டு மூன்று சிட்டிகை அடிக்கடி சாப்பிடுதல், இரவில் தலைக்கு குல்லா, கையுறை மற்றும் காலுறை அணிதல், கம்பளி போர்வை உபயோகித்தல் போன்றவை நல்லது.
ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படும் எண்ணெய்க் குளியல், வியர்வை சிகிச்சை, மூக்கில் எண்ணெய் விடும் நஸ்யமுறை வாந்தி சிகிச்சை போன்றவை மூலம் இந்த பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை நீங்கள் பெறலாம்.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.