தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சுகப் பிரசவத்துக்கு அதி மதுரம்!

அதிமதுரம் ஓர் அற்புதமான மூலிகைப் பொருள் என்று அறிகிறேன். அது பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஆயுர்வேதம் அதுபற்றிய குறிப்புகளை வெளியிடுகிறதா?

எஸ். சுவாமிநாதன்

அதிமதுரம் ஓர் அற்புதமான மூலிகைப் பொருள் என்று அறிகிறேன். அது பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஆயுர்வேதம் அதுபற்றிய குறிப்புகளை வெளியிடுகிறதா?

எஸ்.ஸ்ரீராம், புதுச்சேரி.

இயற்கையாக மலைப்பகுதிகளில் புதர்ச்செடியாக அதிமதுரம் விளைகிறது. சுமார் ஒன்றரை அடி உயரமாக வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறுபூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் சிறுமுட்களுடன் சுமார் 3 செ.மீ வரை நீளமானவை. வேர்கள் சிறியதும், பெரியதுமாக உட்புறம் மஞ்சள் நிறமாக வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாகக் காணப்படும். மருத்துவத்தில் வேர்களே அதிகமாகப் பயன்படுகின்றன. உத்தரபிரதேசம், இமாசலப்பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அதிமதுரம் வணிகரீதியாகப் பயிரிடப்பட்டு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிமதுரத்தின் வேர் காய்ந்த நிலையில் நாட்டு

மருந்து கடைகளில் கிடைக்கும். ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் நெல் வயல்களில் அதிமதுரமும் அடர்ந்த களைச் செடியாக வளர்கின்றது. இந்தச் செடியின் வேர்களைச் சிறுவர்கள் பறித்துச் சுவைப்பார்கள்.

இலைகள் இனிப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. ஆனால் வேர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. புண்கள், தாகம், அசதி, கண்நோய்கள், விக்கல், எலும்புநோய்கள், தலைநோய்கள், இருமல், மஞ்சள்காமாலை ஆகியவற்றை அதிமதுரவேர் குணமாக்கும். காக்காய்வலிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், படர்தாமரை ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். முடியை வளர்க்கும் பண்பும், ஆண்மையைப் பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து இலேசாக வறுத்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும். அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்துக் கொண்டு, 20 கிராம் பொடியை 200 மி.லி. தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மி.லி.யாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்திவிடலாம்.

50 கிராம் அதிமதுரத்தை லேசாக இடித்து ஒன்றரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். கால் லிட்டராக குறையும் வரை காய்ச்சி அத்துடன் 150 கிராம் சர்க்கரை, டீ லிட்டர் பால் ஆகியவை சேர்த்து, பாகுபதம் வரும் வரை காய்ச்சி வடிக்க வேண்டும். சூடு ஆறிய பின்னர் 15 மி.லி. அளவு எடுத்து அரை டம்ளர் வெந்நீரில் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் 2 வாரங்கள் உணவுக்குப் பின்னர் சாப்பிட்டு வர வயிற்றுப்புண் நன்றாகக் குணமாகிவிடும்.

சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள்உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடலை இயங்கச் செய்யும். அதிமதுரச் சூரணம், தூய சந்தனச் சூரணம் இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து பாலில் கலந்து, மூன்று வேளை சாப்பிட்டால் வாந்தியுடன் ரத்தம் வருவது நிற்கும். உடலின் உள்உறுப்பு ரணங்கள் ஆறிவிடும். அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1 அல்லது 2 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மைப் பலவீனம் நீங்கும்.

தேவையான அளவு அதிமதுரத்தூளை நெய் சேர்த்து பசையாகக் குழைத்து காயங்கள் மற்றும் வெட்டுக்காயங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் பூச அவை விரைவாக குணமாகிவிடும். அதிமதுரம், தேவதாரு ஆகியவற்றை வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

அரை தேக்கரண்டி அதிமதுரப் பொடியை சிறிதளவு தேனுடன் குழைத்து காலை, மாலை வேளைகளில் 48 நாட்கள் வரை சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி கட்டுப்படும். அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்.

அதிமதுரம், பெருஞ்சீரகம், சர்க்கரை சம அளவாக எடுத்து நன்றாகத் தூள் செய்து 5 கிராம் அளவு சிறிது வெந்நீருடன் சேர்த்து உள்ளுக்குச் சாப்பிட, ஒரு முதலுதவி மருந்தாக தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படும். பலவித ஆயுர்வேத மூலிகைத் தைலங்களில் அதிமதுரம் ஆரோக்கியத்தின் மேன்மைக்காகச் சேர்க்கப்படுகிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பெருவெள்ளம், நிலச்சரிவு: 4 குழந்தைகள் உள்பட 7 போ் பலி!

சென்னையில் 5 மண்டலங்களில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில்தான் கரைக்க வேண்டும்: சென்னை ஆட்சியா்

எண்மமயமாகும் நற்சாந்துப்பட்டி ஓலைச்சுவடிகள்!

சென்னை திரும்பும் மக்கள்: புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

SCROLL FOR NEXT