தினமணி கதிர்

தேகராஜாதி... கற்பூராதி...

என் மனைவிக்கு கடந்த இரண்டு வருடங்களாக காலை எழுந்த உடனே குளிர் காற்று பட்டாலோ, தண்ணீரில் கை வைத்தாலோ தூசி பட்டாலோ, தொடர்ந்து தும்மல், மூக்கிலிருந்து நீர் வருகிறது. சளி தொந்தரவும்

எஸ். சுவாமிநாதன்

என் மனைவிக்கு கடந்த இரண்டு வருடங்களாக காலை எழுந்த உடனே குளிர் காற்று பட்டாலோ, தண்ணீரில் கை வைத்தாலோ தூசி பட்டாலோ, தொடர்ந்து தும்மல், மூக்கிலிருந்து நீர் வருகிறது. சளி தொந்தரவும் இருக்கிறது. மூச்சுவிட சிரமப்படுகிறாள். இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாகக் காணப்படும் இந்த உபாதையை ஆயுர்வேதம் எவ்வாறு தீர்த்து வைக்கும்?

- வி.சதீஷ்குமார், வேலூர் மாவட்டம்

நீங்கள் குறிப்பிடும் தும்மல், மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், சளி, மூச்சுவிட சிரமப்படுதல் போன்ற உபாதைகளுக்குக் காரணமாக சரகஸம்ஹிதை எனும் ஆயுர்வேதநூல் குறிப்பிடுவதாவது: 

1.   தூசி, புகை மற்றும் குளிர்காற்று ஆகியவை நேரடியாகத் தாக்குல்.

2.   குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பதும், குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்துதல்.

3.   தன் சக்திக்கு மீறி செய்யப்படும் உடற்பயிற்சி, உடலுறவு மற்றும் அதிக நடை.

4.   எண்ணெய்ப் பசையற்ற வறண்ட உணவை அடிக்கடி சாப்பிடுதல்.

5.   உணவைக் குறைந்த அளவிலோ, அதிக அளவிலோ, நேரம் தவறியோ உண்ணுவதை வழக்கமாக்கிக் கொள்ளுதல்.

6.   வயிற்றில் ஏற்படும் மப்புநிலையை உதாசீனப்படுத்துதல்.

7.   குடலில் வயிற்றோட்டமும், மலச்சிக்கலும் உள்ள நிலை.

8.   எண்ணெய் தேய்த்து குளிக்காமல் தோல் வறண்ட நிலையிலிருத்தல்.

9.   மிதமிஞ்சிய அளவில் அடிக்கடி பட்டினி கிடத்தல்.

10.   உடலிலுள்ள மர்ம உறுப்புகளில் ஏற்படும் அடி மற்றும் பலவீனம்.

11.   ஒவ்வாமை உணவுவகைகளை உணவில் அதிகம் பயன்படுத்துதல்.

12.   அடிக்கடி குடல்சுத்தி முறைகளைச் செய்து கொள்ளுதல்.

13.   மலக்கழிச்சல், காய்ச்சல், வாந்தி, காச உபாதை, இரத்தக்கசிவு, காலரா, சோகை மற்றும் விஷபாதிப்புகளின் விளைவாக நுரையீரல் பலவீனம்.

14.   உளுந்து, அவரை, நல்லெண்ணெய் ஆகியவற்றை அதிகம் உணவில் உபயோகித்தல்.

15.   மாவுப்பண்டங்கள், தாமரைத்தண்டு, குடலில் வாயுவை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பதார்த்தங்கள், குடல் எரிச்சலை அதிகப்படுத்தும் உணவு மற்றும் எளிதில் செரிக்காத உணவுகளின் சேர்க்கை.

16.   நீர் மற்றும் சதுப்புநிலங்களில் வாழக் கூடிய மிருகங்கள் மற்றும் பறவைகளின் மாமிசத்தை உணவாகச் சாப்பிடுதல்.

17.   தயிர் மற்றும் காய்ச்சாத பால் ஆகியவற்றை உட்கொள்ளுதல்.

18.   உட்புற பிசுபிசுப்பை அதிகப்படுத்தும் வெல்லம், கரும்புச்சாறு போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல்.

19.   கபத்தை அதிகரிக்கும் உணவுகளை உண்ணுதல்.

20.   தொண்டை மற்றும் மார்புப்பகுதியில் காயம்.

21.   உடல் உட்புறக் குழாய்களுக்கு அடைப்பு ஏற்படுத்தும் உணவுப் பண்டங்கள்.

மேற்குறிப்பிட்ட காரணங்களால் நெஞ்சுக்கூட்டின் உள்ளே அமைந்துள்ள பிராணன் மற்றும் உதானன் எனும் வாயுக்கள் சீற்றமடைந்து கபத்தைத் தூண்டுவதால் அதனுடைய சீற்றமானது நுரையீரல், மூச்சுக்குழாய் ஆகிய பகுதிகளில் அடைபடுவதால் நீங்கள் குறிப்பிடும் உபாதைகளாகிய நீர்க்கோர்வை, தும்மல், மூச்சுவிட சிரமம் ஏற்படுதல் போன்றவை ஏற்படக்கூடும்.

இதுபோன்ற ஒரு நிலையில் ஆயுர்வேதம் குறிப்பிடும் சிகிச்சைமுறையாவது: 

தலை மற்றும் மார்புப்பகுதிகளில் மூலிகைத் தைலங்களாகிய தேகராஜாதி, கற்பூராதி, நிம்பாதி எனப்படும் தைலங்களை சிறு சிட்டிகை உப்புடன் சேர்த்து சூடாகத் தடவி மூலிகை வேர்களைக் கொண்டு காய்ச்சப்

படும் நீராவியை அப்பகுதிகளில் காண்பித்து கபத்தை உருகச் செய்யவேண்டும். இதனால் வாயு தன்னிடத்திற்குத் திரும்பும். அதன் பிறகு அரிசியுடன் நெய், மீன் அல்லது மற்ற மிருகங்களின் மாமிச சூப்புகளின் வகையறாக்கள் கெட்டித்தயிர் ஆகியவற்றைச் சாப்பிடக் கொடுத்து கபத்தைத் தூண்டச் செய்து வாந்தி சிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டும். திப்பிலி, இந்துப்பு மற்றும் தேன் ஆகியவற்றைக் கொண்டு வாந்தி சிகிச்சை செய்வது சிறப்பு. இதன் மூலம் உட்புறக் குழாய்கள் சுத்தமாவதுடன் வாயுவினுடைய சஞ்சாரமானது இந்த குழாய்களில் சுலபமாக நடந்தேறத் தொடங்கும். உட்புறக் குழாய்களை மேலும் சுத்தபடுத்துவதற்காக மஞ்சள், பச்சிலை, ஆமணக்கு வேர், கோலரக்கு, மணச்சிலை, தேவதாரு, ஹரிதாளம், ஜடாமாஞ்சி ஆகியவற்றை அரைத்து ஒரு வர்த்திபோல் செய்து நெய்யில் புரட்டி அனலில் வாட்டி அதிலிருந்து வரும் புகையை நோயாளியைப் புகைக்கச் செய்வார்கள். பார்லி நெய்யில் கலந்து புகை சிகிச்சை செய்யலாம்.

ஆயுர்வேதமூலிகை மருந்துகளாகிய தசமூலகடுத்ரயம், வ்யாக்ரியாதி, வரணாதி, நயோபாயம், பலாஜீரகாதி, இந்துகாந்தம் போன்ற கஷாயங்கள் மருத்துவ ஆலோசனைப்படி சாப்பிட வேண்டிய தரமான மருந்துகள். பசியின்மை இருந்தால் வாஸôரிஷ்டம், கனகாஸவம், தசமூலாரிஷ்டம் போன்ற மருந்துகளை உணவிற்குப் பிறகு சாப்பிடவேண்டும். பசியுள்ள நிலைகளில் அகஸ்த்ய ரஸôயனம், தசமூல ரஸôயனம் போன்றவற்றைச் சாப்பிடலாம். மருத்துவருடைய ஆலோசனையின்பேரில் இவற்றைச் சாப்பிடுவது உத்தமம்.

எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT