""எழுத்தாளனுக்குச் சுற்றுச்சூழல் முக்கியம்'' -ரஸ்கின் பாண்ட்
அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு எழுதுவதில் திறமை பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், தன்னுடைய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் மூலம் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு எழுதுவதில் திறமை பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், தன்னுடைய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் மூலம் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது படைப்பில் "தி ரூம் ஆன் தி ரூஃப், "தி ப்ளூ அம்ப்ரல்லா', "சுஸன்னாஸ் செவன் ஹஸ்பென்ட்ஸ்', "தி நைட் டிரெயின் அட் டியோலி' உள்பட அண்மையில் எழுதிய "கேதரிங் ஆஃப் பிரண்ட்ஸ்' வரை அனைத்துமே வாசகர்கள் வரவேற்பைப் பெற்றதாகும். பத்மஸ்ரீ, பத்மபூஷண், சாகித்ய அகாதெமி விருது உள்பட சர்வதேச அளவில் விருதுகளைப் பெற்றுள்ள இவர், தற்போது முசௌரியில் லாண்டோரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தன்னுடைய எழுத்துலக அனுபவங்களைப் பற்றி இங்கு கூறுகிறார்:
எழுத்துலக வாழ்க்கையில் எனக்கென்று ஓர் இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது உண்மைதான். 60 மற்றும் 70-களில் பெருமளவில் பதிப்பகத்தார்களோ, வாசகர்களோ இல்லை. இலக்கிய உலகில் ஓர் இடத்தைப் பிடிப்பதற்காக அனுபவித்த சிரமங்கள் என்னைப் பொருத்தவரை மகிழ்ச்சியானவை. வெற்றி என்பது சுலபமாகக் கிடைக்கக்கூடியதல்ல. அப்படிக் கிடைத்தால் அதன் மதிப்பை உங்களால் உணர முடியாது.
பள்ளிப்படிப்பை முடித்தவுடன் அம்மா என்னை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். வீட்டு நினைவுகள் காரணமாக நான் எழுதிய முதல் நாவல்தான் "தி ரூம் ஆன் தி ரூஃப்'. அப்போதெல்லாம் எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் பதிப்பகத்தார் வெறும் 50 பவுண்டுகள்தான் அட்வான்ஸாகக் கொடுப்பார்கள்.
பின்னர் இந்தியாவுக்கே திரும்பினேன். இங்கும் அதிக அளவில் பதிப்பகத்தார் இல்லை என்பதால் பத்திரிகைகளுக்கும், தினசரிகளுக்கும் எழுதி அனுப்பத் தொடங்கினேன்.
பெரியவர்களுக்காக த்ரில்லர், பேய்க் கதைகளை எழுதி வந்தவன் குழந்தைகளுக்காகவும் மாற்றி எழுதத் தொடங்கியது ஒரு வேடிக்கையான திருப்பம்தான். நான் மனிதர்களைப் பற்றி எழுதி வந்தேன். பின்னர் பேய்க் கதைகளுக்கு மாறினேன். நானாகக் கற்பனை செய்து எழுதினேனே தவிர இதுவரை நான் பேய்களைப் பார்த்ததும் இல்லை, பயந்ததும் இல்லை. மனிதர்களைப் பார்த்துத்தான் பயப்படுவேன்.
குழந்தைகளுக்கு பேய்க் கதைகள் மிகவும் பிடிக்கும். அவர்கள் பயப்படுவதற்கு விரும்புவார்கள். அது அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் இருக்கும். பின்னர் என்னுடைய வயதுக்கேற்ப நகைச்சுவை கலந்த கதைகளை எழுதுவது சுலபமாக இருந்தது. வயதாகும்போதுதான் வாழ்க்கையில் நகைச்சுவையான சம்பவங்கள் நடக்கும். கவிதைகள் எப்போதாவதுதான் உருவாகும். கவிதைகளை எழுதியே வாழ்க்கை நடத்த முடியாது. ஆனால் அது ஒரு சுகமான அனுபவம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
என்னுடைய கதாபாத்திரங்களில் பெரும்பாலோர் உண்மை மனிதர்களே. பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் உண்மை மனிதர்களை வைத்தே பாத்திரங்களைப் படைப்பதுண்டு. சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய "டேவிட் காப்பர் ஃபீல்ட்' நாவலில் வரும் மெக்காபெர் பாத்திரம் உண்மையில் அவரது தந்தையை மையப்படுத்தி எழுதியதாகும்.
நான் இங்கிலாந்து, தில்லி போன்ற நகரங்களில் வசித்திருந்தாலும் பெரும்பாலும் மிசௌரி, லாண்டோரை மையப்படுத்தி எழுதுவதற்குக் காரணம் உண்டு. மிசௌரிக்கு வெளியே நான் வசித்த வாழ்க்கையை நான் மறந்து விட்டேன். மிசௌரி வாழ்க்கையைப்போல் அவை இருந்ததில்லை. என்னுடைய கதைகளில் பெரும்பாலும் மிசௌரியும் மலைகளும் இடம்பெற்றிருக்கும். ஒருவேளை நான் கடற்கரையையொட்டிய பிரதேசத்தில் வசிப்பவனாக இருந்திருந்தால் என்னுடைய கதைகள் கடல் சூழ்நிலையை வைத்து படைக்கப்பட்டவையாக இருந்திருக்கும். ஓர் எழுத்தாளனின் படைப்புகளுக்கு அவனது சுற்றுச்சூழல் மிகவும் முக்கியமாகும்.
என்னைப் பொருத்தவரை என் படுக்கைக்குப் பக்கத்தில் உள்ள டெஸ்க் மீது வைத்துத்தான் கதைகளை எழுதுவேன். தூக்கம் வந்தால் உடனே படுக்கைக்கு மாறிவிடுவேன். தூக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். பெரும்பாலும் காலை நேரத்தில் எழுதுவது பிடிக்கும். என்னுடைய படைப்புகளுக்கு பெரும்பாலும் இன்ஸ்பிரேஷன் குழந்தைகள்தான்.
தற்போது என்னுடைய நினைவுகளை "ரஸ்ட்டி இன் தி மேஜிக் மவுண்ட்டன்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வருகிறேன். இதுவரை நான் எழுதிய படைப்புகளிலேயே சிறந்ததாக எதைக் கருதுகிறீர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள். அந்தக் கேள்வியே தவறு. ஒரு படைப்பாளிக்கு அவனது படைப்புகள் அனைத்துமே சிறந்தவைதான்!