தச்சுத் தொழிலாளி... இரவு நேரக் காவலாளி... எழுத்தாளர்!
திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் வசித்து வரும் தச்சுத் தொழிலாளி ஒருவர் தான் எழுதிய 18 நூல்களை, தானே வெளியிட்டிருக்கிறார்.
திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் வசித்து வரும் தச்சுத் தொழிலாளி ஒருவர் தான் எழுதிய 18 நூல்களை, தானே வெளியிட்டிருக்கிறார். அவர் சு.லட்சுமணன். இவர், 8ஆம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். ஏழ்மையின் காரணமாகத் தொடர்ந்து படிக்க முடியவில்லை. பகலில் தச்சுத் தொழில். இரவில் தனியார் நிறுவனங்களில் காவலாளி. இதற்கிடையில் கிடைக்கும் நேரங்களைப் பயன்படுத்தி, நெல்லை செல்வம் என்ற புனைப்பெயரில் கதை, கட்டுரை, நாடகம் எழுதுகிறார்.
தச்சுத் தொழில் செய்தாலும் அவ்வப்போது நூலகங்களுக்குச் சென்று புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தது, இதுவே, அவருக்கு எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்ததாம். தனது 15 ஆவது வயதிலேயே அவர் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். 60-க்கும் அதிகமான சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார்.
இவரது படைப்புகள் பல்வேறு நாளிதழ்கள், பருவ இதழ்களில் வெளியாகியுள்ளன. செல்லப் பாப்பா பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி தான் எழுதிய சிறுகதைகளைத் தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார். முதல் நூலை வெளியிடும் போது அவருடைய மனைவி தனது உண்டியல் பணத்தைக் கொடுத்து உற்சாகப்படுத்தினாராம்.
இவரது தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சியின் காரணமாக, சிறுவர் கதைகள் 6, சிறுகதை தொகுப்பு 5, நாவல் 5, கட்டுரை நூல்கள் 2 என 18 படைப்புகளை வெளியிட்டுள்ளார். 19 ஆவது படைப்பாக நாடகம் அச்சுப்பணியில் உள்ளது.
இவரது நூலில் "பிருந்தா எங்கள் பிருந்தாவனம்' என்ற நாவல் பெண்ணியப் பிரச்னைகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை படைக்க வலியுறுத்தியும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், பெண் சிசு பிரச்னை, மனிதநேயம், குழந்தைத் தொழிலாளர் பிரச்னை உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளை மையப்படுத்தியும் அமைந்துள்ளன.
இவரது படைப்புகளான செல்லப்பாப்பா, கண்மணி ஆகியன முதியோர் கல்வித் திட்டத்தில் பாடநூலாக உள்ளது.
சென்னை வானொலி நிலையம் பண்பலை ஒலிபரப்பிலும், சன் தொலைக்காட்சியின் "வணக்கம் தமிழகம்', ஜெயா தொலைக்காட்சியின் "காலைமலர்' நிகழ்ச்சிகளிலும், பல்வேறு பத்திரிகைகளிலும் இவரது சிறப்புப் பேட்டிகள் இடம்பெற்றுள்ளன.
புத்தகங்களை எழுதுவது மட்டுமல்ல, பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை, பாரதி கலை இலக்கியப் பேரவை என இரண்டு அமைப்புகளைத் தொடங்கி இவர் நடத்தி வருகிறார். ""என்னுடைய எழுத்தை வியாபாரப் பொருளாக நான் கருதுவதில்லை. சமுதாயத்துக்கு பயன் தரும் விதை நெல்லாகவே அவற்றை நினைக்கிறேன்'' என்கிறார் நெல்லை செல்வம்.