ஏவி.எம். நிறுவனத்துக்கு இது 70-ஆம் ஆண்டு. புராணப் படங்கள் தொடங்கி இப்போதைய 3 டி தொழில்நுட்ப யுகம் வரை பயணிக்கும் ஏவி.எம். வளாகத்தில் எண்ணற்ற மாற்றங்கள் இருப்பதை உணர முடிகிறது. படப்பிடிப்புத் தளத்தின் ஒரு பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், அடுத்து வரும் காலகட்டங்களில் ஏவி.எம். நிறுவனம் எப்படி இருக்கும்? என்று எழும் கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை. ஏவி.எம். சரவணனிடம் பேசுவதற்கான நேரம் உடனே கிடைத்தது.
ஏவி.எம். நிறுவனத்தின் சொத்துகள் பங்கு பிரிக்கப்பட்டு விட்டதாக வரும் செய்திகளுக்குப் பின்னணியில், 70 ஆண்டுகள் வரலாறு கொண்ட ஏவி.எம்... இனிவரும் காலங்களில் சினிமாவுக்கான பங்களிப்பு எப்படி இருக்கும்?
"நாம் இருவர்', "வேதாள உலகம்', "ராம ராஜ்யம்' ஆகிய மூன்று படங்களும் காரைக்குடியில் ஸ்டூடியோ இருந்த காலங்களில் தயாரிக்கப்பட்டவை. இதில் "ராம ராஜ்யம்' மகாத்மா காந்தியடிகள் பார்த்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. சாலிகிராமத்தில் வாங்கப்பட்டிருந்த இடத்துக்கு மின்சார வசதி கிடைத்ததும் ஏவி.எம். ஸ்டூடியோ அப்போதைய மெட்ராஸýக்கு இடம்பெயர்ந்தது. 1949-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கிய ஏவி.எம்.நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக "வாழ்க்கை' படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களைத் தயாரித்துப் புகழ் பெற்ற எங்கள் நிறுவனம் தற்போது 70-ஆம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதில் ஏவி.எம்.கார்டன் பகுதி தம்பி குமரனிடம் இருந்தது. பாலசுப்பிரமணியத்திடம் ஏவி.எம். ஃபிலிம் ஸ்டூடியோ இருந்தது. ஃபிலிம் ஸ்டூடியோ இருந்த இடத்தில்தான் இப்போது புதிய கட்டடங்கள் எழுப்பும் வேலைகள் தொடங்கியுள்ளன. பெருகி வரும் வெளிப்புறப் படப்பிடிப்புகள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களே ஏவி.எம். ஃபிலிம் ஸ்டூடியோவில் இப்போது மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. காரைக்குடியில் இருந்து இடம்பெயர்ந்தபோது நாங்கள் முதலில் வாங்கிய அதே இடத்தில்தான் இப்போதும் ஏவி.எம்.ஸ்டூடியோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது எப்போதும் சினிமாவுக்கான பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கும்.
ஏவி.எம்.நிறுவனத்தின் அடுத்தடுத்த சினிமா முயற்சிகளில் தாமதம் ஏன்?
இடைவெளிகள் தானாகவே அமைந்துவிடுகின்றன. "காசேதான் கடவுளடா' படத்துக்குப் பின் ஒரு சின்ன இடைவெளி விழுந்தது. அதன்பின் புத்தம் புது முயற்சியாக "முரட்டுக்காளை' படம் எடுத்தோம். அதன்பின் சின்ன பிரேக். "மின்சார கனவு' படத்துக்குப் பின்பும் ஓர் இடைவெளி ஏற்பட்டது. அதன்பின் வெளிவந்த "ஜெமினி' பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இடைவெளிகள் வரத்தான் செய்கின்றன.
தற்போதைய சினிமா சூழலில் ஒருவர் முழு நேர சினிமா தயாரிப்பாளராக வாழும் சூழல் இருக்கிறதா?
கஷ்டமான விஷயம்.
28 ஃபிலிம் ஸ்டூடியோக்கள் இருந்த இந்த வடபழனி பகுதிகளில் இப்போது பிரசாத் ஸ்டூடியோவும், ஏவி.எம்.ஸ்டூடியோவும்தான் இருக்கின்றன. அதிலும் தொலைக்காட்சிகளுக்கான படப்பிடிப்புகள்தான் அதிகமாக நடந்து வருகின்றன. செட்டுக்குள் இருந்த சினிமா, ரியல் சினிமாவாக மாறிவிட்டது. கேமிரா தொழில்நுட்பங்கள் மாறிவிட்டன. "நல்லவனுக்கு நல்லவன்' படம் வரை அமெரிக்காவில் இருந்து வந்த "மிச்செல்' கேமிராதான் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும் அந்த கேமிராவில் லென்ஸ் மட்டும்தான் மாறும். இப்போது கேமிராவே மாறி விடுகின்றது. ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய கேமிரா தொழில்நுட்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கேமிரா தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்திய "கோடக்' நிறுவனமே ஆடிப்போய்விட்டது. சினிமாவின் அனைத்துப் பிரிவுகளிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த எஸ்.பி.முத்துராமனின் அனுபவத்துக்கும், குறும்பட உலகத்தில் இருந்து வந்து படம் இயக்கும் ஓர் உதவி இயக்குநரின் அனுபவத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ""80-களில் சினிமாவில் நுழைவது ரொம்பக் கஷ்டம். இப்போது ரொம்பவே ஈஸி. ஆனால், நிலைத்து நிற்பதுதான் கஷ்டம்'' என ரஜினி ஒருமுறை சொல்லியிருந்தார். அதுதான் உண்மை.
உங்களின் தயாரிப்புகளில் "மாஸ்டர் ஃபீஸ்' தயாரிப்பாக எதை நினைக்கிறீர்கள்?
எல்லாமும்தான். "அன்பே வா', "முரட்டுக்காளை' இந்த இரண்டு படங்களும் வழக்கமான பாணியிலிருந்து விலகி எடுக்கப்பட்ட படங்கள். "முரட்டுக்காளை' வித்தியாசமான படமாக அமைந்தது. அதுவரைக்கும் கதைக்கான படங்களாக உருவாக்கி வந்தோம். "முரட்டுக்காளை' ரஜினிக்கான படமாக உருவானது. 80-களுக்குப் பின் ரஜினி, கமல் இருவருக்கும் கதைகள் உருவாக்க ஆரம்பித்தோம். "சிவாஜி' படத்தில் பிரம்மாண்டம் இருந்தது.
உங்களது கனவுப் படைப்பு என்று ஏதாவது உள்ளதா?
""பெருசா, பிரம்மாண்டமா ஏதாவது பண்ணணும் குகன்'' என ரஜினி குகனிடம் சொன்னார். உடனே ""பிரம்மாண்டம்ன்னா அது ஷங்கர் சார்தான்'' என்றார் குகன். ""இல்லை, எனக்கும் ஷங்கருக்கும் பொருந்தி வராது. ஏற்கெனவே பேசி அது சரியா செட் ஆகலை'' என்றார் ரஜினி. ""நான் பேசுகிறேன்..'' என குகன் ஷங்கரிடம் பேசினார். ரஜினி சொன்ன அதே வார்த்தைகளை ஷங்கரும் சொன்னார். ஆனால், அதைத் தாண்டி இருவரையும் இணைத்தார் குகன். ராகவேந்திரா மண்டபத்தில் இருவரையும் சந்திக்க வைத்து, ஆளுக்கு 1001 அட்வான்ஸ் கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட படம்தான் "சிவாஜி'. எதுவும் திட்டமிடாமல் சில நல்ல விஷயங்கள் அமையும்.
ரஜினி, கமலை சேர்த்து வைத்து ஒரு படம் தயாரிப்பதில் என்ன சிக்கல்? இப்படியொரு கோணத்தில் யோசித்து இருப்பீர்களே?
ஒருநாள் ரஜினி என்னைச் சந்திக்க வந்தார். ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது திடீரென்று கமலும் என்னைப் பார்க்க அங்கே வந்தார். திட்டம் இல்லாமல் எதேச்சையாக நடந்த சந்திப்பு அது. ""என் பயணத்தில் நான் தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, சிவாஜி, எம்.ஜி.ஆர். என பலரிடம் பழகி இருக்கிறேன். ஆனால், அவர்களிடம் இல்லாத ஒரு பண்பு உங்களிடம் இருக்கிறது. உங்களிடம் போட்டி உண்டு. பொறாமை இல்லை...'' என அவர்களிடம் சொன்னேன். ""அதற்குக் காரணம் பாலசந்தராக இருக்கலாம்...'' என்றார் கமல். ""நான் சினிமாவுக்கு வந்தபோதே, கமல் பெரிய ஹீரோ. அவரை நான் நண்பனாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பே, அவர் என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டு விட்டார்'' என்று இருவரும் பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். அப்போது திடீரென்று ரஜினி ""கமல்... நாம ரெண்டு பேரும் ஒரு படம் சேர்ந்து நடிக்கலாம்...'' என்றார். மௌனமாக இருந்த கமல் ""கண்டிப்பாக நடிக்கலாம். அந்தப் படத்தை சரவணன் சாரே தயாரிக்கட்டும்...'' என்றார்.
இரண்டு பேரும் அப்படிச் சொன்னதில் ரொம்பவே சந்தோஷம். இருவருக்கும் சம்பளம் கொடுத்து, இயக்குநர் தேடி, அதற்கான கதை பிடித்து... பெரிய வேலைகள் இருக்கின்றன. இப்போதைய சூழலில் அது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் இரண்டு பேரும் பிரியமாகப் பேசியது சந்தோஷம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.