தினமணி கதிர்

திரைக் கதிர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் "கபாலி' பட படப்பிடிப்பை முடித்துள்ள ரஜினி, அடுத்து ஷங்கரின் "2.0' படப்பிடிப்பில் முழு நேரமாகப் பங்கேற்று வருகிறார்.

ஜி. அசோக்

பா.ரஞ்சித் இயக்கத்தில் "கபாலி' பட படப்பிடிப்பை முடித்துள்ள ரஜினி, அடுத்து ஷங்கரின் "2.0' படப்பிடிப்பில் முழு நேரமாகப் பங்கேற்று வருகிறார். இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத வகையில் இப்படத்துக்கு அதிக நாள்கள் கால்ஷீட் தந்துள்ளார். இப்படத்தையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பி.வாசு ரஜினியிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். கன்னடத்தில் இயக்கிய "சிவ லிங்கா' படத்தை ரஜினிக்கு திரையிட்டுக் காட்டிய வாசு, அதன் தமிழ்ப் பதிப்பில் நடிக்க கேட்டிருக்கிறார். இது குறித்து எந்த முடிவையும் ரஜினி அறிவிக்கவில்லை. இந்நிலையில் மலையாள இயக்குநர் சித்திக் ரஜினியிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் "பாஸ்கர் த ராஸ்கல்' படத்தை இயக்கினார் சித்திக். அந்தப் படத்தின் கதையம்சம் குறித்து அவரிடம் ரஜினி விசாரித்ததாகத் தெரிகிறது. அப்போது பேசிய சித்திக், மம்முட்டியின் கதாபாத்திரம் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என கருத்து தெரிவித்தார். இதைத் தவிர சுரேஷ் கிருஷ்ணா "பாட்ஷா 2' பற்றி பேசியிருக்கிறார். கே.எஸ்.ரவிகுமாரும் ரஜினியின் கால்ஷீட்டுக்குக் காத்திருக்கிறார். ஆனால், 2.0 படம் முடிந்த பின்னரே அடுத்த படம் குறித்து முடிவெடுக்க உள்ளார் ரஜினி. "சந்திரமுகி' கதை பாணியில் அமைந்துள்ள "சிவ லிங்கா' கதை ரஜினிக்குப் பிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கணவன், மனைவி புரிதலுடன் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கருவாகக் கொண்டு உருவாகி வரும் படம் "அவன் அவள்.' சிறிய இடைவெளிக்குப் பின் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். தேவிகா மாதவன், சந்திரிகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கணபதி, ஸ்வப்னம், சச்சு, ஆதிசிவன் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ராம்கிரீஷ் மிரினாளி. திருமணத்துக்குப் பின் ஒரு தம்பதியினருக்கு நேரும் சம்பவங்கள்தான் திரைக்கதை. கொடைக்கானல், சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

நகைச்சுவை படமாக உருவாகும் "ஜெட்லீ' படத்தில் வெள்ளை பன்றிக் குட்டி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்காக வெள்ளை பன்றிக் குட்டிக்கு பிரத்யேகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கண்ணன் பொன்னையா, பார்வதி நாயர், அருந்ததி நாயர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெகன் சாய் எழுதி இயக்குகிறார். சகுனங்களின் மேல் அதிக நம்பிக்கை வைத்து இயங்கி கொண்டிருக்கும் மக்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கும் இருவரின் நகைச்சுவை கலாட்டாதான் கதை. "நார்னியா', "லயன்' போன்ற ஹாலிவுட் படங்களின் மாடல் அனிமேட்டர் இதில் பணிபுரிகிறார். சென்னை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

பேய் சீஸன் படங்களில் அடுத்து இணைகிறது "ஜீரோ.' அஸ்வின் கதாநாயகனாக நடிக்கிறார். "நெடுஞ்சாலை' ஷிவதா கதாநாயகியாக நடிக்கிறார். வி.அருண்குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜே.டி.சக்ரவர்த்தி, துளசி, ரவி ராகவேந்தர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள். ஆனந்தமாக வாழ்ந்து வரும் இளம்ஜோடியின் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக அதீத பலம் வாய்ந்த சக்தி ஒன்று குறுக்கிடுகிறது. இதனால் அந்தத் தம்பதிகளின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தாம் படத்தின் கதை.

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளாக வளர்ந்தவர் சுதா. எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லத்தில் வளர்ந்த இவரின் மகன் ராமச்சந்திரன் "கபாலி தோட்டம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். டி.ஆர். பாஸ்கரன் எழுதி இயக்கும் இப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக ராமச்சந்திரன் அறிமுகமாகிறார். சென்னையில் கபாலி தோட்டம் பகுதியில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதை என்பதால் இப்படத்துக்கு "கபாலி தோட்டம்' என பெயரிடப்பட்டுள்ளது. சினிமா பிரவேசம் குறித்து ராமச்சந்திரன்... ""சினிமாவுக்கான திட்டம் என்னிடம் எதுவும் இல்லை. தற்செயலாக சந்தித்த இயக்குநர் பாஸ்கர் சினிமாவில் நடிப்பது குறித்து பேசினார். "கபாலி தோட்டம்' என்ற தலைப்பு ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு விட்டது. எந்தப் படத்தின் பாதிப்பிலும் தலைப்பு வைக்கவில்லை. வில்லத்தனமான வேடங்களில் நடிக்க ஆசை உள்ளது. எம்.ஜி.ஆர். "சதிலீலாவதி' படத்தில் எதிர்மறையான வேடம் ஏற்று பின்னர்தான் கதாநாயகனாக உயர்ந்தார். அதனால் அந்தப் பாணியிலேயே நடிக்க உள்ளேன்'' என்கிறார் ராமச்சந்திரன். கடந்த வாரம் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சென்னையின் பழைமையை நினைவூட்டும் இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT