கே.வி.ஆனந்த் - ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் கூட்டணி "அநேகன்' படத்துக்குப் பின் மீண்டும் இணைகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் 18-ஆவது தயாரிப்பாக உருவாகவுள்ளது. கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். "காதலும் கடந்து போகும்' படத்துக்குப் பின் விஜய்சேதுபதி ஜோடியாக இணைகிறார் மடோனா செபாஸ்டின். கதையின் பிரதான கதாபாத்திரத்தில் இயக்குநர் டி.ராஜேந்தர் நடிக்கிறார். பாண்டியராஜன், ஆகாஷ்தீப் சைகல், ஜெகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். கதை, திரைக்கதை மற்றும் வசனப் பொறுப்பை கே.வி.ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா, கபிலன் வைரமுத்து ஆகியோர் கூட்டாக கவனிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் அபி நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனியின் படத்தொகுப்பில் கிரண் படத்தொகுப்பு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை இயக்குகிறார். நடன இயக்கத்தை பிருந்தா கவனிக்கிறார். கடந்த வாரம் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பொங்கல் வெளியீடாக படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுக்க முழுக்க ரயில் பயணங்களில் நடக்கும் சம்பவங்களை முன்னிறுத்தி உருவாகியுள்ள படம் "தொடரி'. பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்திசுரேஷ் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதியையும் உறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளது படக்குழு. காரணம் "கபாலி'. தனது மாமனார் ரஜினியின் கபாலி படம் வெளியான பின்னரே, இப்படத்தை வெளியிட வேண்டும் என தனுஷ் கேட்டுக் கொண்டிருப்பதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஜூலை 15-ஆம் தேதிதான் இப்படத்தின் வெளியீட்டுக்கு தேதி குறிக்கப்பட்டது. ஆனால் கபாலி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதால் இந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது ஜூலை 22-ஆம் தேதியில் கபாலி வெளியாகும் என்பதால், வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி "தொடரி' வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. தற்போது இப்படம் தணிக்கைக்குச் செல்லவுள்ளது. அதன் பின்னரே வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என பிரபுசாலமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் 57-ஆவது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. "வீரம்', "வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா அஜித்தை இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
"உலகம் சுற்று வாலிபன்', "ஜப்பானில் கல்யாணராமன்' படங்களின் பாணியில் முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே இப்படம் படமாக இருப்பது புதுமையான விஷயமாக இருக்கும் என்கிறார்கள். ஜார்ஜியா, பல்கேரியா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலேயே படப்பிடிப்பு நடக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் வேறு எந்தெந்த நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது என்பது குறித்து இயக்குநர் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக இயக்குநர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, சண்டை பயிற்சியாளர் சில்வா, கலை இயக்குநர் மிலன் ஆகியோர் அடங்கிய படக்குழு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிட்டு திரும்பி உள்ளது. இதையடுத்து அஜித்துக்கு ஜோடி யார் என்பதில் தீவிரமாக இயங்கி வருகிறது இயக்குநர் தரப்பு. பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், காஜல் அகர்வாலுக்கு அந்த வாய்ப்பு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
"நெருப்புடா' என்ற தலைப்பை தனது அடுத்த படத்துக்கு சூட்டி விட்டார் விக்ரம் பிரபு.
இப்படத்தின் பெயர் அறிமுக விழா சென்னையில், சிவாஜியின் அன்னை இல்லத்தில் கடந்த வாரத்தில் நடைபெற்றது. கலைப்புலி எஸ்.தாணு, ஏவி.எம்.சரவணன் மற்றும் விக்ரம் பிரபுவின் தந்தை நடிகர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, தீயணைப்பு வீரராக நடிக்கிறார். தீயணைப்பு வீரர் என்பதால், தீ விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே பிரதான கதையாக இருப்பதால் "நெருப்புடா' என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று சூட்டியுள்ளார்கள். விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். பொன்வண்ணன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள். இப்படத்தை விக்ரம் பிரபு புதிதாக தொடங்கியுள்ள ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.