காதல் ஜோடி என்றால், சட்டென்று நினைவுக்கு வருவது ரோமியோ - ஜூலியட், அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு, மும்தாஜ் - ஷாஜஹான், தேவதாஸ் - பார்வதி.. ஜோடிகள்தான்.
இந்தக் காதல் ஜோடிகளின் கதைகள் திரைப்படமாக பல கால கட்டங்களில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளன .
மனதைத் தொட்டு உலுக்கும் திருப்பங்கள் வைத்து எடுக்கப்பட்ட "மரோசரித்திரா', "அலைகள் ஓய்வதில்லை' போன்ற காதல் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.
சினிமாவிலோ, புனை கதைகளிலோ வராத ஆனால் அவற்றைத் தூக்கிச் சாப்பிடும் திருப்பங்களுடன், நெகிழ்ச்சியான நிகழ்வுகளுடன், ஓர் உண்மைக் காதல் ஐம்பது ஆண்டுகாலமாக கேரளத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அந்தக் காதல் சமீபத்தில் மலையாளத்தில் படமாக "என்னு, நிண்ட மொய்தீன்' தலைப்பில் வெளிவந்து வசூலில் சாதனை புரிந்துள்ளது. "ஜலம் கொண்டு முறிவேற்றவள்' (தண்ணீரால் காயமுற்றவள்) என்ற தலைப்பில் டாகுமெண்டரி படம் தயாரித்த இயக்குனர் விமல், அதன் நீட்சியாக இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார். பிரித்விராஜ் மொய்தீனாக நடிக்க, பார்வதி, காஞ்சனமாலாவாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார். படம் சூப்பர் ஹிட்.
காதல் கடிதம் எழுத... அது யார் கையில் கிடைத்தாலும் வாசிக்க முடியாமல் திணறச் செய்ய, தங்களுக்கு மட்டுமே புரியக் கூடிய மொழியைக் கண்டுபிடித்தது எழுதி வந்திருக்கிறார்கள் காலத்தை வென்ற இந்த மலையாளக் காதல் ஜோடி.
உலகில் காதல் கடிதம் எழுத ஒரு மொழியை உருவாக்கியது இந்த காதல் ஜோடியாகத்தான் இருக்கும்.
"என்னு நிண்ட மொய்தீன்' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், அந்த உண்மைக் காதல் ஜோடியில் ஒருவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது ஒரு சிறப்பு.
இந்த காதல் ஜோடி, காதலித்த 1960 கால கட்டத்திலும் சரி, இன்றைக்கும் சரி அகில கேரளப் பிரசித்தம் பெற்றவர்கள். இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டவர்கள்... பேசப்படுகிறவர்கள்... சுருக்கமாகச் சொன்னால், மதங்களைத் தாண்டி மலர்ந்த காதல், ஒன்று சேராத மொய்தீன் - காஞ்சனமாலா காதல் ஜோடி, நேற்று இன்று நாளைய கேரளத்தின் நித்ய காதல் ஜோடி.
இந்த ஜோடியின் காதல், புத்தகமாக வெளிவந்து ஆவணமாகியது. டாக்குமெண்டரி படமாகவும் வந்து பல வெளி நாட்டு பட விழாக்களில் விருதுகள் பெற்றுள்ளது.
அகில கேரள பிரபலம் (celebrity) காஞ்சனமாலாவுக்கு தற்சமயம் 75 வயதாகிறது. மொய்தீனுடன் தனக்கிருக்கும் காதல் பற்றி எங்கள் காதல் கேரளத்தின் கல்வெட்டாக மாறி ஆண்டுகள் பல ஆகிவிட்டன என்கிறார் அவர்.
காஞ்சனமாலா, இப்போது அதிக முக்கியத்துவம் தந்து வருவது, மொய்தீன் நினைவாக தொடங்கிய சமூகப் பணிகளுக்கு. ஆதரவற்ற அபலைப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அடைக்கலம் தரும் மொய்தீன் சேவா மந்திரத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். காஞ்சனமாலா நிர்வகிக்கும், சுமார் பத்தாயிரம் நூல்கள் உள்ள நூலகம், பெண்களுக்கு தையல் கற்றுத்தரும் பயிற்சி வகுப்புகள், அவரது பகல் நேரங்களைப் பங்கிட்டுக் கொள்கின்றன.
காஞ்சனமாலா கோழிக்கோடிற்கு (கள்ளிக்கோட்டைக்கு) அருகே முக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த ஊரில் பிரபலமான இரண்டு குடும்பங்கள், நட்பில் பிணைந்திருந்தன. கொற்றன்கல் அச்சுதன், உள்ளாட்டில் உன்னிமொய்தீன். ஒன்றாக சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள். மதங்கள் வேறு ஆனாலும், சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள்.
இனி காஞ்சனமாலா விவரிக்கிறார்:
""மொய்தீனும் நானும் எட்டாவது வரையில் சேர்ந்து படித்தோம். அந்த வயதில் வெறும் நட்புடன் மட்டுமே பழகினோம். அந்த காலகட்டத்தில் எட்டாம் வகுப்பு தேர்வை உநகஇ என்பார்கள். அரசாங்கத் தேர்வு நடக்கும். அந்தத் தேர்வில் மொய்தீன் தோல்வி அடைய, நான் வெற்றி பெற்று கோழிக்கோடு நகரில் ஒன்பதாவது படிக்கச் சென்றேன். மொய்தீனும் எட்டாம் வகுப்பைத் தொடர கோழிக்கோடு வந்தார். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. ஒரு தேர்வு விடுமுறையில் முக்கம் வந்து கோழிக்கோடு சென்று கொண்டிருந்தபோது, பஸ்ஸில் என்னை அந்த இரண்டு பழுப்பு நிறக் கண்கள் பார்த்துக் கொண்டிருப்பதை தற்செயலாக உணர்ந்தேன். தொடர்ந்து அந்த முகம் ஒரு குறும்பு சிரிப்பை நழுவ விட்ட போது... அது மொய்தீன் என்று புரிந்து விட்டது. அந்த சிரிப்பு என்னைத் தொந்தரவு செய்து, ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. அது பிறகு காதலாக மாறியிருக்க வேண்டும்.
திடீரென்று ஒரு கவிதை தொகுப்பு தபாலில் வந்தது. யார் அனுப்பியது என்ற விவரம் இல்லை. மூன்று வாரத்திற்குப் பிறகு இன்னொரு தபால் வந்தது. அது ஓர் ஆங்கில சஞ்சிகை. அதில் சில பக்கங்களில், ஒவ்வொரு ஆங்கில எழுத்தின் கீழும் கோடிடப்பட்டிருந்தது. சக மாணவிகள் அந்த கோடிடப்பட்ட எழுத்துகளை எழுதி அதில் மறைந்திருக்கும் பெயரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள். அந்த எழுத்துகளில் ம்,ர்ண்,சிதறிக் கிடப்பதைப் பார்த்ததும், தபாலில் புத்தகங்களை அனுப்பியது மொய்தீன் என்று எனக்குத் தெரிந்தாலும், வெளியில் சொல்லவில்லை. மொய்தீன் தான் முதலில் காதலை வெளிப்படுத்தினார். பள்ளித் தோழியின் மூலமாக கடிதம் கொடுத்தனுப்பினார். "டியர் தீன்' என்று ஆரம்பித்து, நானும் பதில் கடிதம் எழுதினேன். "டியர் தீன்' என்று நான் அழைத்தது மொய்தீனுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது.
ஹாஸ்டலின் வெளியே சந்திப்புகள் தொடர்ந்தன. ஒரு சில ஆண்டுகள் இப்படிப் போக, கடிதப் போக்குவரத்து ஒரு நாள் வீட்டிற்கு தெரிய வர, படிப்பை நிறுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். 25 ஆண்டுகள் வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்டேன். விலங்கு மட்டும் போடப்படவில்லை. மற்றபடி எல்லாவிதத்திலும் கைதி. வீட்டிற்கு வெளியே நிற்கக் கூட அனுமதியில்லை. ஜன்னல் கதவுகளைத் திறக்கக்கூடாது என்ற கட்டளை வேறு. முதல் 10 ஆண்டுகள், மொய்தீனும் நானும் பரஸ்பரம் பார்க்கவில்லை. கடிதம் மூலம் பேசவில்லை. ஆனால் உள்ளுக்குள் முன்பைவிட தீவிரமாகக் காதலித்தோம். எனக்கு வேறிடத்தில் திருமணம் செய்து வைக்க பல முயற்சிகள் நடந்தன.
நான் எதையும் ஒத்துக் கொள்ளவில்லை. மணந்தால் மொய்தீன் என்று தீர்மானமாகச் சொல்ல, வீட்டில் அடிக்கடி கிடைத்தது அடி- உதை- மிதி.
இதனால் மொய்தீன் மேல் காதல் அடர்த்தியாக வளர்ந்ததே தவிர குறையவில்லை. மொய்தீனுடன் வாழ வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்ததால், தற்கொலை குறித்து சிந்திக்கவில்லை.
இதற்கிடையில் மொய்தீன் வீட்டிலும் எங்கள் காதல் தெரிய வர .. அங்கேயும் எதிர்ப்பு. மொய்தீனின் வாப்பாவிற்குத் தன் மகன் தன் உயிர் நண்பனின் மகளைக் காதலித்தது கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன் நண்பனுக்கு, நண்பனின் குடும்பத்திற்கு மொய்தீன் துரோகம் செய்துவிட்டதாக சபித்தார்.
தந்தைக்கும் மகனுக்கும் நடந்த வாக்குவாதத்தில் தந்தை மகனை நோக்கி துப்பாக்கியைத் தூக்க... சுடுங்கள் என்று மொய்தீன் மார்பைத் தூக்கிக் காட்ட.. மொய்தீனின் உம்மா நடுவில் பாய்ந்து தடுத்தார். அடுத்த சில நாளில், வாப்பா மகனைக் கத்தியால் குத்தி சாய்த்து விட்டு போலீஸ் ஸ்டேஷன் போய் நடந்ததைச் சொல்ல.... மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மொய்தீன், ""வாப்பா என்னைக் கத்தியால் குத்தவில்லை... ஓடும் போது கீழே விழுந்ததில் கூர்மையான மரத்துண்டு வயிறைக் கிழித்து விட்டது'' என்று வாக்கு மூலம் கொடுக்கிறார். வாப்பா மீது வழக்கு ஏதும் பதிவாகவில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகும் வாப்பாவின் மனம் மாறவில்லை. மொய்தீனைக் காண மருத்துவ மனைக்கு ஓட வேண்டும் என்று நான் தவியாய்த் தவித்தேன். அப்படி போனால் என் வீட்டவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள். என் உயிருக்கு ஆபத்து என்றால் மொய்தீனும் உயிர் வாழ மாட்டார். அதனால் வீட்டிலேயே அழுது தீர்த்தேன். மொய்தீனும் நானும் திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அப்படிச் செய்தால் எனது ஆறு சகோதரிகளின் திருமணம் நின்று போகும் என்பதினால் அவசரப்பட்டு அப்படி செய்ய வேண்டாம்; பொறுத்திருப்போம் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம்.
முதல் 10 ஆண்டு காலத்தில், சகோதரிகளுக்கு திருமணம் ஆனது. அடுத்த பதினைந்து ஆண்டுகளில், என் மேல் இருந்த கட்டுப்பாடும் கண்காணிப்பின் மும்முரமும் சற்று குறைந்தது. மொய்தீனுக்கு சொந்தத்தில் பெண் பார்த்தார்கள். நானும் மொய்தீனிடம் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னேன். அதற்கு, ""நான் சரின்னு சொன்னால் போதும்; அந்தக் கல்யாணம் சட்டென்று நடந்துவிடும். உன்னைக் கைப் பிடிக்க ஏழு மலைகள் ஏறி ஏழு கடல்கள் தாண்டவேண்டும்; எனக்கு ஏழு மலைகள் ஏறி ஏழு கடல்கள் தாண்டவே விருப்பம்'' என்று தீர்மானமாகச் சொன்னார். எங்கள் காதலைப் புரிந்து கொண்டவர்கள் கடிதப் பரிவர்த்தனை செய்து கொள்ள ரகசியமாக உதவினார்கள். நானும் மொய்தீனும் என்ன எழுதியிருக்கிறோம் என்று யாருக்கும் தெரியாமல் இருக்க நாங்களாகவே குறியீடுகளை வைத்து புதிய எழுத்துகளை உருவாக்கி அதில் எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டோம்.
ஒரு முறை எனது மாமா வீட்டிற்கு செல்லும் போது ஆற்றின் மணல் பரப்பில் நடந்து சென்றேன். பின் தொடர்ந்த மொய்தீன் குனிந்து மணல் பரப்பில் ஏதோ குனிந்து எடுத்தார். ""அப்படி என்ன மணல் பரப்பில் கிடந்தது? எதை நீங்கள் குனிந்து எடுத்தீர்கள்?'' என்று கடிதத்தில் கேட்டேன். ""உனது கால்தடம் பதிந்த மண்ணை அள்ளினேன். அதைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்..'' என்று மொய்தீன் பதில் எழுத... நான் பூரித்துப் போனேன். காதல் மேலும் உறுதியானது. உயிரை விட மேலாக மொய்தீனை நேசித்தேன்.
காதலில் விழுந்த மொய்தீன் சோகத்தில் தாடி வளர்த்து திரியவில்லை. ஒரு கால் பந்தாட்டக்காரராக, அரசியல்வாதியாக, பஞ்சாயத்து உறுப்பினராக, உணர்ச்சியுடன் பேசும் பேச்சாளராக, முக்கம் பஞ்சாயத்தின் முக்கிய பிரமுகராகப் பிரபலம் ஆனார். எங்களது காதல் காரணமாக மொய்தீன், பஞ்சாயத்து தலைவராக முடியவில்லை. முக்கம் வந்திருந்த பிரதமர் இந்திரா காந்தி மொய்தீன் ஆரம்பித்த நல்ர்ழ்ற்ள் ஏங்ழ்ஹப்க் பத்திரிகையை வெளியிட்டார். நேதாஜியின் மகள் அனிதா போஸின் தொடர்பிலும் மொய்தீன் இருந்தார்.
மொய்தீனின் வாப்பா இறந்து போனதால், மொய்தீனின் தம்பிக்கு 18 வயது நிறைவாகி மேஜர் ஆனதும், சொத்துகளைப் பிரித்துக் கொடுத்து விட்டு, 1983இல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மொய்தீன் தீர்மானித்தார். அவரது தம்பி மேஜராவது 1982 டிசம்பரில். நானும் மொய்தீனும் ஆவலாக 1983க்குக் காத்திருந்தபோது விதி விளையாடியது.
1982 ஜூலை 14 இரவில் வானத்தைக் கிழித்துக் கொண்டு பேய்மழை முக்கம் சுற்று வட்டாரத்தில் பெய்தது. இருவழிஞ்சி ஆறில் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளம் கரை புரண்டு பெருக்கெடுத்து சீற்றத்துடன் ஓடியது . அடுத்த நாள் காலை கோழிக்கோடு செல்ல மொய்தீன் படகில் ஏற, அவருடன் 28 பயணிகளும் இருந்தனர். கரையை விட்டு படகு மறு கரைக்குச் செல்லும் போது நடுவில் கவிழ்ந்தது. மொய்தீனுக்கு நீச்சல் மிக நன்றாக வரும். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் கரை நோக்கி நீந்தவில்லை. மாறாக ஆற்றில் மூழ்கிக் கொண்டிருக்கும் பயணிகளைக் காப்பாற்றி கரை சேர்ப்பதில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 25 பேரைக் கரை சேர்த்த மொய்தீன், கடைசி 2 பேரைக் காப்பாற்ற முயற்சித்தபோது, அந்த இரண்டு பேருடன் சுழலில் சிக்கி ஆற்றினுள் மறைந்து போனார்.
மொய்தீன் ஆற்றில் மூழ்கி இறந்து போனார் என்ற செய்தி முக்கத்தை துக்கத்தில் ஆழ்த்தியது. நானும் மனதளவில் இறந்து போனேன். இருவழிஞ்சி ஆற்றில் குளித்து நீந்தி வளர்ந்தவர் மொய்தீன். கடைசியில் அந்த இருவழிஞ்சி ஆறு அவரைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
ஒருமுறை மொய்தீனிடம் கேட்டேன்: ""என்னைக் காட்டிலும் நீங்கள் யாரை நேசிக்கிறீர்கள்?'' மொய்தீன் அதற்கு, ""நான் அதிகம் நேசிப்பது சுபாஷ் சந்திர போûஸ'' என்றார். குறைந்தது, போஸ் அளவுக்காவது மொய்தீன் இருவழிஞ்சி ஆற்றை நேசித்திருக்க வேண்டும். அதனால்தான் இருவழிஞ்சி ஆற்றில் அவர் முடிவு நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவரைக் குளிப்பாட்டி வளர்த்த ஆறே, அவரது கடைசி குளியலையும் செய்து முடித்தது. மூன்றாம் நாள் மொய்தீனின் உடல் கிடைத்தது. அவரது கண்கள் மட்டும் ஆற்று மீன்கள் தின்று சேதமுற்று இருந்ததாம். சொன்னார்கள். எந்தப் பழுப்பு நிறக் கண்களால் என்னை வசீகரித்தாரோ .. அந்த கண்கள் சிதைந்து போனது. என் வாழ்க்கையும் சின்னாபின்னமானது. என்னை மொய்தீனின் இறுதி நிலையைப் பார்க்க அனுமதிக்க வில்லை. அனுமதித்து இருந்தால் மொய்தீனின் கோலத்தைப் பார்த்து, நானும் இறந்திருப்பேன். இனி நான் யாருக்காக வாழ வேண்டும்? தற்கொலைக்கு முயற்சிப்பேன் என்று என்னைச் சுற்றிலும் காவல் இருந்தார்கள். கொல்லைப் புறத்தில் வைக்கப்பட்டிருக்கும் பூச்சிகொல்லி மருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டன... கை நரம்பை வெட்டிக் கொள்ள, ஒரு பிளேடு கூட கிடைக்கவில்லை. கடைசியில் பட்டினி கிடந்து சாகலாம் என்று முடிவு செய்தேன். சில நாட்கள் இப்படி ஓடின. மொய்தீனை திருமணம் செய்து கொண்டால் வரும் அவமானத்தைவிட, மொய்தீனின் நினைவாக பட்டினி கிடந்து செத்தால் வரும் அவமானம் அதிகப்படியாக இருக்கும் என்று கருதினார்களோ என்னவோ... மொய்தீனின் உம்மாவைக் கொண்டு எனக்கு ஆறுதல் சொல்லச் சொன்னார்கள். அந்த ஆறுதல் வார்த்தைகள் மொய்தீன் சொல்வதாக எனக்குப் பட்டது. தட்டிக் கழிக்க முடியவில்லை.
மொய்தீன் சுழலில் சிக்கி நீருக்குள் தன்னை ஒப்படைத்தபோது இருவழிஞ்சி ஆற்றின் ஒரு மடக்கு தண்ணீராவது கண்டிப்பாகக் குடித்திருப்பார். அதனால் என் உண்ணா விரதத்தை நிறுத்த அந்த ஆற்றின் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வயிறு முட்டக் குடித்தேன். மொய்தீனின் மனைவி ஆகத்தான் முடியவில்லை. மொய்தீனின் விதவையாக மாற முடிவு செய்தேன். திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், எங்கள் உறவு கணவன் மனைவி பந்தத்தைத் தாண்டி நிற்பது. நான் விதவை ஆன போது, எனக்கு வயது 40. சில மாத இடைவெளியில், பலரும் திருமணத்திற்கு நிர்பந்தம் செய்தார்கள். ஆனால் நான் வாழ்நாள் முழுவதும் மொய்தீனின் விதவையாக.... மொய்தீனின் கனவுகளைச் சமூக சேவைகள் மூலம், புதிய தலை முறைக்கு மொய்தீனை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். மொய்தீன் செய்ய நினைத்த சமூக சேவைகளை விரிவுபடுத்த இன்னும் கொஞ்ச நாளுக்கு உயிர் வாழ வேண்டும்.'' என்றார் காஞ்சனமாலா
இப்போது சொல்லுங்கள்... இது போன்ற நெகிழ்ச்சியான காலத்தை வென்று நிற்கும் காதலை, யாராவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.