தினமணி கதிர்

கரோனா தடுத்தாலும் கடமை தவறாத அலுவலர்கள்!

எஸ்.விஜயராகவன்

அரசுப் பணியாளர்கள் மீது பெரும்பாலான மக்கள் கொண்டிருக்கும் தவறான பார்வையை தெளிவுபடுத்தும் ஒரு பதிவு...

ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பு அருகில் அமைந்துள்ள எங்களது வீட்டின் குடிநீர் குழாயில் பல ஆண்டுகளாகவே போதிய அளவு தண்ணீர் வருவதில்லை. இதனால், பெரும்பாலும் நிலத்தடி நீரையும், விலைக்கு வாங்கப்படும் லாரி குடிநீரையும் நம்பியே நாங்கள் இருந்து வந்தோம்.

இந்தநிலையில், இது தொடர்பாக எங்களது பகுதி குடிநீர் வாரிய உதவிப் பொறியாளர் பி.நவீன்குமாரைத் தொடர்பு கொண்டு, பிரச்னையை எடுத்துக் கூறினேன். அவரும் நான் கூறுவதைப் பொறுமையாக கேட்டு விட்டு, பிற்பகல் 2 மணியளவில் தான் வருவதாகக் கூறினார். அவர் கூறியதைப் போலவே, சரியாக பிற்பகல் 2 மணியளவில் என்னை செல்லிடப்பேசியில் அழைத்து, வீட்டின் வெளியே நிற்பதாகக் கூறினார். நான் சென்று பார்த்தபோது, அவர் சக பணியாளர்களுடன் வந்திருந்தார். 

அவர்கள் வேலைக்கு தேவையான உபகரணங்களுடன் தயாராக வந்திருந்தனர். என்னிடம் என்ன பிரச்னை என்று கேட்டுவிட்டு, உடனடியாக அவர்கள் பணியைத் தொடங்கினர். ஆனால் தண்ணீர் ஏன் வரவில்லை என்பது உடனடியாகத் தெரியவில்லை. 

ஐந்து, ஆறு நாள்கள் தொடர்ந்து சளைக்காமல் வேலை செய்து,  குழாய்களில் உள்ள அடைப்புகளை கண்டுபிடித்து, ஒவ்வொன்றாக நீக்கினர். பணியை ஒரு வழியாக முடித்துவிட்டு, தண்ணீர் வருவதை உறுதி செய்தார். 

மேலும் தண்ணீர் ஓட்டம் எப்படி இருக்கிறது, உரிய வேகத்தில் வருகிறதா என்று கவனித்துக் கூறுமாறு எங்களிடம் தெரிவித்தார். நானும் 10 நாள்கள் வரை கவனித்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம் எனது வீட்டிலும், மெட்ரோ வாட்டர் கொட்டியது.  இப்போதும் தங்கு தடையின்றி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
இதிலிருந்து சில உண்மைகளை இங்கு உரக்கச் சொல்ல விழைகிறேன்.

நாம், எப்போதும் அரசுத் துறைகளில் உள்ள குறைகளையே சுட்டிக்காட்டியே பழக்கப்பட்டுவிட்டோம். அதே நேரம், எனது அனுபவத்தில் நடந்தது போன்ற நல்ல விஷயங்களையும் எடுத்துக் கூற மறக்கவோ, மறுக்கவோ செய்கிறோம். 

பல்வேறு அழுத்தத்துக்குப் பிறகே, பல இடங்களில் வேலை நடப்பதை நாம் பார்க்கும் நிலையில், என் விஷயத்தில் எந்த வித அழுத்தம் கொடுக்காத போதிலும், நவீன் குமார் நேர்மையாக தனது வேலையை செய்து விட்டு, அமைதியாக சென்று விட்டார். 

இது போன்ற அரசு அதிகாரிகளுக்கு, அவரது உயர் அதிகாரிகளிடமிருந்தோ, அரசிடமிருந்தோ நிச்சயம் பாராட்டு கிடைக்க வேண்டும்.  

இவர்களைப் பாராட்டி போற்றும்போதும் நவீன்குமாரைப் போன்ற நேர்மையான, கடமை தவறாத அதிகாரிகளுக்கும், அது நிச்சயம் ஊக்கப்படுத்துவதாக அமையும். குறிப்பாக மக்கள் மத்தியில், பொறுப்புள்ள அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதற்கு முக்கிய சான்றாகவும் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT