பேல்பூரி
யாரும் தெரியும்,யாவும் தெரியும்,பயம் தெரியாது.
கண்டது
(குடந்தையில் இருசக்கர வாகனம் ஒன்றில்)
யாரும் தெரியும்,
யாவும் தெரியும்,
பயம் தெரியாது.
மா.உலகநாதன், திருநீலக்குடி.
(உடுமலை அருகே ஓர் கிராமத்தின் பெயர்)
ஜிலேபி நாயக்கன் பாளையம்
நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
(மதுரை கோ.புதூரில் ஒரு மருந்துக் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
உன் வலியை நீ உணர்ந்தால்
நீ உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம்.
பிறர் வலியை நீ உணர்ந்தால்,
நீ மனிதனாய் இருக்கிறாய் என்று அர்த்தம்.
எஸ்.எம்.சுல்தான், மதுரை-7.
கேட்டது
(கோபிசெட்டிப்பாளையத்தில் பழக்கடை அருகே இரு மாணவர்கள்)
"நான் லாக் டவுன்ல சூப்பராபடிச்சேன் மாப்பு. இப்டி பரீட்சை வைக்காம போய்ட்டாங்களே டா''
""டேய் எப்பவும் செல்லும் கையுமா ஸ்டேடஸ் போட்டுட்டு திரிஞ்சுட்டு, மனசாட்சிக்கு மாஸ்க் போட்டுட்டுப் பேசறியே மாமு''
கி.சரஸ்வதி,
ஈரோடு.
(சென்னை அசோக் நகரில் உள்ளஒரு வீட்டு வாசலில் இரு பெண்கள்)
""நேத்து சப்போட்டா ஜூஸ் செய்யலாம்னு மிக்ஸியில் போட்டு அரைச்சேனா... சாறே வரலைடி''
""நல்லா கவனிச்சியா... சப்போட்டா பழத்துக்குப் பதில் உருளைக் கிழங்கைப் போட்டுருக்கப் போறே''
மல்லிகா அன்பழகன்,
சென்னை-78.
யோசிக்கிறாங்கப்பா!
ஒருவர் திமிருக்குப் பின்னால் இருப்பது கோபம்...
ஒருவர் கோபத்துக்குப் பின்னால் இருப்பது ஏமாற்றம்...
ஒருவர் ஏமாற்றத்துக்குப் பின்னால் இருப்பது அன்பு.
ப. பச்சமுத்து,
கிருஷ்ணகிரி.
மைக்ரோ கதை
இரண்டு இளைஞர்கள் ஓர் ஞானியைச் சந்தித்து உரையாடினர். அவர்களில் ஒருவன், "" உலகில் பொய்யை விட உண்மைக்கு மதிப்பு அதிகமாக இருக்கிறதே... ஏன் ஐயா?'' என்று கேட்டான்.
""நானும் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். உலகில் இரும்புச் சங்கிலியை விட, தங்கச்சங்கிலிக்கு அதிக மதிப்பு ஏன்?'' என்று கேட்டார் அந்தஇளைஞனிடம்.
""இரும்பு தாராளமாகக் கிடைக்கிறது. அதனால் அதன் மதிப்பு குறைவாக இருக்கிறது. தங்கம் அரிதாக எங்கோ ஓரிடத்தில்தான் கிடைக்கிறது. அதனால் அதன் மதிப்பு அதிகம்'' என்றான் அந்த இளைஞன்.
""இந்த உதாரணம் போதும் தம்பி... உலகில் பொய் தாராளமாக இருக்கிறது. அதனால் அதற்கு மதிப்பு இல்லை. உண்மை பேசுபவர்களைக் கண்டுபிடிப்பதே அரிதாக இருக்கிறது. அதனால் அதற்கு மதிப்பு அதிகமாக இருக்கிறது'' என்றார் ஞானி.
அ.ப.ஜெயபால், சிதம்பரம்
எஸ்.எம்.எஸ்.
ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்,
ஒவ்வொரு இழப்பும் ஒரு லாபம்;
ஒவ்வொரு ஏமாற்றமும் ஓர் எச்சரிக்கை,
ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரு தேடல்!
எல். மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி- 1
அப்படீங்களா!
எழுதுவதற்கு எது வேண்டும்? பேனா வேண்டும். காகிதம் வேண்டும். இந்த டட்ழ்ங்ங் நம்ஹழ்ற் டங்ய் உங்களிடம் இருந்தால் காகிதம் தேவையில்லை. நீங்கள் எதில் வேண்டுமானாலும் எழுதலாம். உங்கள் கையில் எழுதலாம். கதவில் எழுதலாம். கார் ஓட்டிக் கொண்டு செல்லும்போது எழுத நினைத்தால் ஒற்றைக் கையில் காரில் எழுதலாம். இப்படி எழுதும் எதுவும் அடுத்த சில நொடிகளில் அது உங்களுடைய போனுக்கோ, லேப் டாப்பிற்கோ சென்றுவிடும்.
நீங்கள் எழுதியதை இந்தப் பேனா நினைவில் வைத்துக் கொள்ளும். தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். எழுதுகிற கைகளின் அசைவுகளை அளக்கும் ஆப்டிகல் டிரான்ஸ்லேஷன் மெசர்மென்ட் தொழில்நுட்பம் வாயிலாக இயங்கும் இந்தப் பேனாவை கணினியின் மெளஸ் போலவும் பயன்படுத்தலாம். புளு டூத் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் இந்தப் பேனாவில் எழுதுவது மட்டுமல்ல, படம் வரைந்தாலும் அதுவும் உங்களுடைய ஸ்மார்ட் போனுக்கோ, லேப்டாப்பிற்கோ, கணினிக்கோ சென்றுவிடும்.
என்.ஜே., சென்னை-58.