முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஜீரண சக்தி குறைந்தால்...

எனக்கு வயது 67. சில காலத்துக்கு முன்பிருந்தக் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டேன். நான் வனத்துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்.

Updated On : 24 ஏப்ரல், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:33 PM


எனக்கு வயது 67. சில காலத்துக்கு முன்பிருந்தக் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டேன். நான் வனத்துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர். எனக்கு வாயுத் தொல்லையால் வயிறு ஊதிப்போய்விட்டது. பிடரி வலியாலும் அவதிப்படுகிறேன். ஜீரணசக்தி மிகவும் குறைந்து விட்டதால் பசி எடுப்பதில்லை. என் உடல் உபாதை குறைய மருந்துகள் உள்ளதா?

- எஸ். கருப்பையா,
ஆலங்குடி.

வனத்தைப் பாதுகாப்பதற்காக நீங்கள் அடிக்கடி வாகனத்தில் செல்ல நேர்ந்திருந்தாலோ, பல இடங்களில் நேரம் தவறி உணவு அருந்தியிருந்தாலோ, குடிப்பழக்கத்தின் வாயிலாகவோ உடல் உட்புற உறுப்புகளில் ஏற்படும் உரசல்கள் மற்றும் சுரப்பிகளின் தாறுமாறான செயல்பாடுகளால், ஓய்வு பெற்ற நிலையில் அவற்றின் தாக்கத்தை மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறீர்கள். ஓரிரு முறை பிழை பொறுக்கும் உடல், பலமுறை பிழைகளை ஏற்காது என்பதை மனித மனம் உணருவதற்குள் காலம் கடந்துவிடுகிறது. புலன்களுக்கு நாம் அடிமை ஆனதற்குக் காரணமே இத்தகைய கெடுதல்களுக்கு வித்திடுகிறது.

Advertisement

வயிற்றினுள் வாயுவின் செயல்களாகிய உணவின் உள்புற நெகிழ்வை சீராகச் செயல்படுத்தி வயிற்றில் கொண்டு சேர்த்தல், வயிறு முதல் குடல் இறுதிவரை நடையாக நடந்து உணவின் செரிமானத்துக்கு உதவிடுதல், உணவின் சத்தையும் சக்கையையும் பிரித்து எடுத்து, சத்தை குடல் வழியாக உட் செலுத்தலையும், சக்கையை மலமாக வெளியேற்றுதல் போன்ற சிறப்பான செயல்கள் அனைத்தையும் பிரான = சமான= அபான வாயுக்கள் நிறைவேற்றுவதால், சீரண சக்தியானது திறம்பட மனிதக்குடலில் நிறைவேற்றப்படுகிறது.

ஆமணக்கு, ஆயில்யப்பட்டை, கொடுவேலி, சுக்கு, கடுக்காய்த்தோடு, மூக்கரட்டைவேர், சிறுகாஞ்சுரி, நிலப்பனைக் கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் தயாராக்கி விற்கப்படுகிறது. இதில் சிட்டிகை இந்துப்பு, வெல்லம் மேம் பொடியாகச் சேர்த்து, காலை மாலை வெறும் வயிற்றில் குடித்து வர, மலச்சிக்கலை நீக்கி, குடல் வாயுவை கீழடக்கி, பசியை நன்றாகத் தூண்டிவிட்டு, நாக்கிலுள்ள ருசி கோளாங்களைத் திறந்து ருசி உணரும் தன்மையையும் ஒரு சேரச் செய்துவிடும். இந்தக் கஷாயம் உங்களுக்கு மிகவும் நல்லது செய்யக்கூடும்.

இந்துப்பு, குரோசானி ஓமம், ஓமம், சுக்கு, கடுக்காய் ஆகியவற்றை தலா 2 பங்கு, 2 பங்கு, 3 பங்கு, 5 பங்கு, 12 பங்கு என்ற விகிதத்தில் வரிசைக் கரமாக எடுத்துப் பொடித்து துணியால் சலித்து, மெல்லிய தூளாக விற்பனையிலுள்ளது. இதற்கு அனுபானமாக தயிர் தெளிவு, காடி, மோர், நெய், வெந்நீர் என்ற வகையில் குடல் அமைப்பிற்குத் தகுந்த வகையில், தேர்ந்தெடுத்து, காலை இரவு உணவிற்கு அரை மணி முன் கலந்து சாப்பிட்டு வர, வயிற்றுப் பொருமல், மூலம், மலச்சிக்கல், வயிறு சார்ந்த நோய்கள், குடல் வாயு, வீக்கத்துடன் கூடிய மூட்டுப் பிடிப்பு, நெஞ்சு வலி, சிறு நீர்ப்பை உபாதைகள், மண்ணீரில் நோய்கள் போன்றவை மட்டுப்படும்.

தசமூலாரிஷ்டம் எனும் ஆயுர்வேத மருந்தை சுமார் முப்பது மில்லி, காலை இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் சாப்பிட்டு வரலாம்.

உணவில் எளிதில் செரிக்கும் வகையிலான புழுங்கலரிசிக் கஞ்சி காலையிலும், மதிய உணவில் நன்கு கடைந்தெடுத்த வெண்ணெய் நீக்கிய மோரை, சாதத்துடன் கலந்து மாவடுவுடன் சாப்பிடுவதையும், இரவில் மறுபடியும் அரிசிவடித்த கஞ்சியையும் சில வாரங்களுக்கு உட்கொள்ளவும். இதனால் வயிறு சார்ந்த உறுப்புகள் அனைத்தும் சீராகத் உங்களுடைய செயல் திறன் மேம்படும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.