தினமணி கதிர்

தாய்ப்பால்  தானத்தில் சாதனை!

சக்ரவர்த்தி

பிரசவத்துக்குப் பின்னர், அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் கிடைக்காமல் அநேகக் குழந்தைகள் அவதிப்படுகின்றன. குழந்தை பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டால் அந்தக் குழந்தை உயிர் வாழ தாய்ப்பால் தேவை. பெற்ற குழந்தைக்குத் தர போதிய தாய்ப்பால் இல்லாமல் தாய் வருந்த, தாய்ப் பாலுக்கு ஏங்கும் குழந்தைகளும் இருக்கின்றன.

இந்தத் தருணங்களில் கருணை உள்ளம் கொண்ட சில தாய்கள் தங்கள் குழந்தைக்குப் பால் புகட்டுவதுடன் இதர குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வழங்கி தானம் செய்து பல ஆயிரம் குழந்தைகளின் பசியைத் தீர்த்துள்ளனர். இவ்வாறாக, அந்தக் குழந்தைகள் நோய் நொடியின்றி வளரவும் உதவுகின்றனர்.

18 மாதத்தில் 59 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கியிருக்கிறார், கோவைக்கு அருகில் இருக்கும் கணியூரைச் சேர்ந்த சிந்து மோனிகா. கணவர் மகேஸ்வரன் கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.

இதுகுறித்து சிந்து மோனிகா கூறியதாவது:

''எனக்கு 29 வயதாகிறது. பொறியியல் பட்டப் படிப்பு முடிந்ததும், திருமணம் ஆனது. 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-இல் (சித்திரை 1) எனக்கு மகள் பிறந்தாள். 'வெண்பா' என்று பெயர் வைத்தோம். பிறந்த ஒரு வாரம் குழந்தை தாய்ப்பால் குடிக்கவில்லை. புட்டிப்பால்தான் கொடுத்தோம். எனக்கு தாய்ப்பால் ஊட்டமுடியவில்லையே என்று கவலை. அழுகை. வீட்டுக்கு வந்த பிறகு தாய்ப்பால் குடிக்க ஆரம்பித்தாள்.

இதன்பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது என்றும் பிற குழந்தைகளைக் காக்கவும் அவற்றின் பசியைப் போக்கவும் தாய்ப்பால் தானம் செய்யலாம் என்று ஜூலை மாதத்தில் சமூக சேவகி ரூபா செல்வநாயகி தெரிவித்தார்.

எனக்கோ தாய்ப்பால் இருந்தும் என் குழந்தை குடிக்காமல் புட்டிப்பால் குடித்த அந்த ஒரு வாரம் நினைவுக்கு வந்தது. தாய்ப்பால் இருந்தாலும் குழந்தைக்கு கொடுக்க முடியவில்லை. அதே சமயம், தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்களுக்கு என் பாலை கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

ரூபா செல்வநாயகிக்கு குழந்தை பிறந்தபோது, தனது குழந்தைக்குப் போக இருந்த தாய்ப்பாலை மருத்துவமனைக்கே சென்று நேரடியாக தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு ஊட்டியவர்.

கோவைக்கு பல கி.மீ. தூரத்துக்கு வெளியே வசிக்கும் என்னால் மருத்துவமனைக்குச் சென்று தாய்ப்பால் தானம் செய்ய இயலாது .

இதற்கு, 'தாய்ப்பாலை உறிஞ்சி பாட்டில்களில் அல்லது பிரத்யேக பிளாஸ்டிக் உறைகளில் அடைத்து ஃபிரிட்ஜில் உறைநிலையில் வைத்தால் போதும். பால் கெட்டுப் போகாது. ஊட்டச் சத்தும் குறையாது. 'அமிர்தம்' எனும் தொண்டு நிறுவனத் தொண்டர் வீட்டுக்கே வந்து பாட்டில்களை பெற்று கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைப்பார்' என ரூபா தெரிவிக்கவே, சம்மதித்தேன். பால் உறிஞ்சி எடுக்க உதவும் கருவியையும் வாங்கி, பயன்படுத்தினேன்.

2021 ஜூலை மாதம் தாய்ப்பால் தானத்தை ஆரம்பித்தேன். இன்று வரை 18 மாத காலத்தில் சுமார் 59 லிட்டர் தாய்ப் பாலை தானம் செய்திருக்கிறேன். சுமார் 1,500 சிசுக்கள் தாய்ப்பால் தானத்தால் பயன்பெற்றுள்ளன. இந்தச் சாதனையாக அங்கீகரித்து 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'களில் என்னை இடம் பெறச் செய்திருக்கிறார்கள். மகளுக்கு இரண்டு வயது ஆகும் வரை பால் கொடுப்பேன். அதுவரையில் தாய்ப்பால் தானமும் தொடரும்.

இந்தியா அளவில் 70 தாய்ப்பால் வங்கிகள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் மட்டும் 45 வங்கிகள் உள்ளன.

தமிழகத்தில் 2014-ஆம் ஆண்டில் தாய்ப்பால் வங்கி முதன்முதலில் தொடங்கப்பட்டது. தானம் செய்யப்பட பாலை சிசுக்களுக்குப் புகட்டும் முன் கிருமிகள் ஏதும் பாலில் உள்ளதா என்று சோதித்த பிறகே குழந்தைக்கு உணவாகக் கொடுக்கப்படுகிறது. உறைநிலையிலிருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலை வெளியே நிலவும் வெப்பநிலைக்கு கொண்டுவந்து 24 மணி நேரத்துக்குள் சிசுக்களுக்குப் புகட்ட வேண்டும். பொதுவாக, ரத்தம், உடல் உறுப்புகள் தானம் செய்பவர்கள் எண்ணிக்கையில் ரொம்பவும் குறைவு. அதுபோல தாய்ப்பால் தானம் செய்பவர்களும் குறைவுதான்'' என்றார் சிந்து மோனிகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT