முகப்பு
தினமணி கதிர்

சூழலுக்கு உகந்த தேநீர் கோப்பைகள்!

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தேநீர் கோப்பைகளை கோவை அருகே பழங்குடியின பெண்கள் தயாரித்துவருகின்றனர். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 நவம்பர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:15 PM

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தேநீர் கோப்பைகளை கோவை அருகே பழங்குடியின பெண்கள் தயாரித்துவருகின்றனர். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலான தயாரிப்புகளை சர்வதேச நாடுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன. இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையை மக்கள் நாடி வரும் நிலையில், அதுசார்ந்த பொருள்கள் தயாரிப்பும் எழுச்சி பெற்று வருகிறது.

இவ்வாறாக, கோவை மாவட்டம், ஆனைகட்டியில் சுவாமி தயானந்த சரஸ்வதி நிறுவிய ஆர்ஷ வித்யா குருகுலத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது சர்வதேச ஆராய்ச்சியாளர் ராமன் செளந்தரராஜனின் "தயாசேவா சதன் நிறுவனம்'. பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கடந்த 10 ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அறுபத்தி நான்கு வயதான ராமன் செளந்தரராஜனும் அடிப்படையில் ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளர்.

Advertisement

அமெரிக்காவின் ஓக்லஹாமா பல்கலைக்கழகம், வாஷிங்டன் மாநிலப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் பல ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய இவர், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் ஹெச்.சி.பிரெளன் தலைமையிலான குழுவில் 1996- ஆம் ஆண்டு வரை ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் சீடரான இவர், அடிக்கடி ஆனைகட்டி வந்து சென்றுள்ளார்.

""பழங்குடியினரின் வாழ்வாதார மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்ற சுவாமிகளின் வேண்டுகோளை ஏற்று சர்வதேச ஆராய்ச்சிப் பணிகளில் இருந்து விடுவித்துக் கொண்டு ஆனைகட்டியில் தங்கி, 2012- ஆம் ஆண்டு முதல் பழங்குடியினரின் மதிப்புகூட்டு பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்'' என்கிறார் ராமன் செளந்தரராஜன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

""1990-ஆம் ஆண்டு முதல் ஆனைகட்டி வந்து சென்றுள்ளேன். தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் கடைசிக் காலங்களில் அதாவது 2012 முதல் 2015 வரை அவருடன் இருந்திருக்கிறேன். அவரது அறிவுரையின்படி, ஆனைகட்டி அருகேயுள்ள பட்டிசாலை கிராமத்தைத் தத்தெடுத்து அங்குள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு கல்வி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

எனது சொந்த பணமும், நண்பர்களின் உதவியிலும் ஆனைகட்டி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கொண்டனூர், பனப்பள்ளி, பட்டிசாலை பகுதி பழங்குடியின பெண்களுக்கு வனப் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்கும் பயிற்சிகளை வழங்கி, ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மையம், அங்காடி மூலம் அவற்றை விற்பனை செய்து வருகிறேன்.

இதற்கு முன்பு, வனத்தில் சேகரிக்கும் பொருள்களை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்து சொற்ப வருவாயை ஈட்டி வந்தனர். அதன் பிறகு அவர்களுக்கு வாழை நாரைப் பயன்படுத்தி யோகா மேட் தயாரிக்கும் உத்தியை ஈரோடு கவுந்தபாடியைச் சேர்ந்த நெசவாளர் நல்லசாமியின் உதவியுடன் செயல்படுத்தினேன். அதன்படி தற்போது யோகா மேட், பைகள், துணிகளை அவர்கள் தயாரித்து வருகின்றனர்.

அதேபோல, பாக்குமட்டை தயாரிப்பு, 11 வகையான தேன், 6 வகையான இயற்கை ஜாம் பொருள்கள், 10 வகையான சூப்புகள் மற்றும் சோப்பு தயாரித்து வருகிறோம். கரோனா காலத்தில் ஆயுஷ் அங்கீகரித்துள்ள மூலிகை சானிடைசர் தயாரித்திருக்கிறோம். இந்தக் குழுவில் கரோனாவுக்கு முன்பு வரை 30 பெண்கள் வரை இருந்தனர். தற்போது 10 பேர் முழு நேரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது களிமண்ணால் ஆன தேநீர் கோப்பைகள், தட்டுகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். சுற்றுச்சூழலை பாதிக்காத இந்த தேநீர் கோப்பைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. முதல்கட்டமாக கத்தார் நாட்டைச் சேர்ந்த காபி நிறுவனம் இந்தத் தயாரிப்புகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளது. அவர்களுக்கு இன்னும் ஒரு மாதத்துக்குள் 10 ஆயிரம் கோப்பைகள் அனுப்பப்பட உள்ளன.

பழங்குடியின பெண்களின் சுற்றுச்சூழல் சார்ந்த தயாரிப்புகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) மனதின் குரல் ( மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசியுள்ளார். இதன் மூலம் இந்தத் தயாரிப்புகளுக்கு சர்வதேச அளவில் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மலைவாழ் பழங்குடியினர் முன்பு பல மடங்கு வட்டிக்கு கடன் வாங்கி வந்தனர். ஆனால் அவர்களுக்கு எனது சொந்த முயற்சியில் வட்டியில்லாத தனிநபர் கடன் வழங்கி வருகிறேன். மத்திய, மாநில அரசுகளிடம் ஆதிவாசிகளுக்கு என நிறைய திட்டங்கள் உள்ளன. ஆனால் தனியார் நிறுவனமாக நாங்கள் செயல்பட்டு வருவதால் அவற்றைப் பெற முடியவில்லை.

எதிர்காலத்தில் அதற்கேற்ப தயாராக உள்ளோம். முதல்கட்டமாக ஆனைகட்டியில் தனியாக ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் பழங்குடியினரின் தயாரிப்புகளை விரிவுபடுத்த இருக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.