எழுத்து வடிவில் இருக்கும் சிறுகதை, நாவல்களை விஷூவல் வடிவில் பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்று. தமிழ் சினிமாவிலும் ஏராளமான சிறுகதைகள், நாவல்கள் சினிமாவாக உருமாற்றம் பெற்றுள்ளன. அவற்றில் சில!
சிற்றன்னை - உதிரிப்பூக்கள்
மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'உதிரிப்பூக்கள்' திரைப்படமானது, புதுமைப்பித்தன் எழுதிய 'சிற்றன்னை' நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். புதுமைப்பித்தனின் எழுதிய எத்தனையோ புகழ்பெற்ற கதைகள் இருக்கையில் எப்படி 'சிற்றன்னை'யைப் படமாக்க வேண்டும் என்று மகேந்திரன் தீர்மானித்தார் என்பது இன்றும் வியப்பாகவே உள்ளது. மிகவும் சுவாரஸ்யமாகும் ஜனரஞ்சகமாக உள்ள இந்தக் கதையை மிகவும் எதார்த்தமான திரைக்கதையில் இயக்கி வெற்றி பெற்றுள்ளார் மகேந்திரன்.
முள்ளும் மலரும் - முள்ளும் மலரும்
1967- ஆம் ஆண்டு கல்கி இதழின் வெள்ளி விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் முள்ளும் மலரும். இந்த நாவலை உமாசந்திரன் எழுதி, பாராட்டு பெற்றார். இதை அடிப்படையாக கொண்டு 1978-ஆம் ஆண்டு இயக்குநர் மகேந்திரன் ரஜினிகாந்தை முன்னணி நாயகனாகக் கொண்டு இப்படத்தை இயக்கி கவனம் பெற்றார்.
தங்கர் பச்சான் கதைகள்
சிறுகதைகள், நாவல்களைப் படமாக்குவதில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் தங்கர்பச்சான் காட்டிய அக்கறை அதிகம். இயக்குநராக அறிமுகமான 'அழகி'யை 'கல்வெட்டு' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கினார். நாஞ்சில் நாடனின் முதல் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' கதையை 'சொல்ல மறந்த கதை'யாக சினிமாவில் சொன்னார். தான் எழுதிய 'ஒன்பது ரூபாய் நோட்டு', 'அம்மாவின் கைப்பேசி' நாவல்களை அதே பெயரில் படமாக்கினார். பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கும் இவருடைய 'களவாடிய பொழுதுகள்' படமும் தங்கர் பச்சான் எழுதிய நாவலே!
அதிகாலையின் அமைதியில் - இயற்கை
தஸ்தாயெவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'இயற்கை'யின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் எஸ்.பி.ஜனநாதன். நாவலை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய மற்றொரு படம், 'பேராண்மை'. பரீஸ் வஸீலியெவ் எழுதிய 'அதிகாலையில் அமைதியில்' நாவல், ஒரு ராணுவத் தளபதியும், ஐந்து பெண்களும் ஜெர்மன் பாஸிஸ்டுகளுக்கு எதிராக நிகழ்த்திய சாகசங்களைச் சொன்னது. 'பேராண்மை' படமும், இந்தியாவின் ராக்கெட்டுக்குக் குறிவைக்கும், அந்நிய சக்திகளை ஒரு ராணுவ வீரனும், ஐந்து இளம் பெண்களும் சேர்ந்து முறியடிப்பதுதான் கதை.
தாயம் - ஆளவந்தான்
1984 -ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதிய 'தாயம்' என்ற கதையினை கருவாகக் கொண்டு இயக்கப்பட்ட திரைப்படம் ' ஆளவந்தான்'. இப்படம் குற்றம் சார்ந்த ஒரு த்ரில்லர் படமாக அமைந்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
தலைமுறைகள் - மகிழ்ச்சி
நீல.பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்' என்ற நாவல், அப்படியே 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. 1998-இல் வெளியான 'கனவே கலையாதே' படத்திற்குப் பிறகு, 'ஆட்டோ சங்கர்', 'சந்தனக்காடு' சீரியல்களை இயக்கிக்கொண்டிருந்த வ.கௌதமன் இயக்குநராக 'ரீ-என்ட்ரி' கொடுத்த படம். குமரி மாவட்டத்தில் வாழும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் கலாசாரமும், கட்டமைப்புமே நாவலின் மையம்.
ஏழாம் உலகம் - நான் கடவுள்
ஜெயமோகன் எழுதிய 'ஏழாம் உலகம்' நாவலின் பாதிப்பில் உருவானது, பாலா இயக்கிய 'நான் கடவுள்' திரைப்படம். பிச்சைக்காரர்கள் எப்படி வாங்க/விற்கப்படுகிறார்கள், அவர்களுடைய உலகம் எப்படி இயங்குகிறது என பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைப் பிரதானமாகப் பேசிய நாவல். இந்த நாவலின் மையத்தை, காசியில் வாழும் ஓர் அகோரியின் வாழ்க்கையோடு இணைத்து திரைக்கதை ஆக்கியிருப்பார், இயக்குநர் பாலா.
எரியும் பனிக்காடு - பரதேசி
பி.எச்.டேனியல் எழுதிய 'ரெட் டீ' நாவல், பல ஆண்டுகளுக்குப் பிறகு 'எரியும் பனிக்காடு' ஆக தமிழில் வெளிவந்தது. வால்பாறையில் தேயிலைத் தோட்டம் உருவான கதையும், தேயிலைத் தோட்டத்துக்காகப் பலியாக்கப்பட்ட தொழிலாளர்களைப் பற்றியும், அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றியும் பேசுகிறது இந்நூல். பாலாவின் மற்றொரு படைப்பான 'பரதேசி' இந்நாவலின் இன்னொரு வடிவம்.
டெல் மீ யுவர்ஸ் ட்ரீம்ஸ் - அந்நியன்
'டெல் மீ யுவர்ஸ் ட்ரீம்ஸ்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஆங்கில நூலின் கதைதான் அந்நியன். இப்படத்தை மிக சுவாரஸ்யமான திரைக்கதையில் எழுதி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் இயக்குநர் ஷங்கர். இப்படத்தில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பல விஷயங்களை மக்களுக்கு எளிதாக புரியும் படி எடுத்துரைத்து, விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றி பெற்றது.
பதவிக்காக - முதல்வன்
எழுத்தாளர் சுஜாதா எழுதிய அரசியல் கதை 'பதவிக்காக'. இந்த நாவல் கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் ஷங்கர் 'முதல்வன்' என்ற திரைப்படத்தை இயக்கினார். மிகவும் ஜனரஞ்சகமான திரைக்கதையில் இப்படம் உருவாகி பட்டி தொட்டி என தமிழகத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற படமாகும்.
லாக்கப் - விசாரணை
விமர்சன ரீதியான வரவேற்பையும், ஏராளமான விருதுளையும் பெற்ற வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம், மு.சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' நாவலின் தழுவல். 'மிகச்சிறந்த மனித உரிமைக்கான திரைப்படம்' என்ற அங்கீகாரத்தைப் பெற்ற இப்படத்தின் கதை, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. காவல் துறையால் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், அதிலிருந்து மீண்டு வந்த போராட்டத்தையும் மு.சந்திரகுமார் 'லாக்கப்'பில் பதிவு செய்திருக்கிறார்.
என் இனிய இயந்திரா - எந்திரன்
எழுத்தாளர் சுஜாதா1980-களில் எழுதி புகழ் பெற்ற நாவலே 'என் இனிய இயந்திரா'. இந்தக் கதையை மையமாகக் கொண்டு 'எந்திரன்' என்ற பெயரில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்று பல சாதனைகளைப் படைத்துள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்தது.
பொன்னியின் செல்வன் - பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் (1950-1955) கல்கி எழுதிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது . 'பொன்னியின் செல்வன்' என்பது, இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று. தமிழ் வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர் காலத்தையும், அதில் தலையாயவர் எனப்படும் இராஜராஜ சோழனையும் சித்தரிப்பதனால் மிகப் புகழ் பெற்ற நாவலாக இந்த நூல் உள்ளது. தமிழ்ப் பதிப்புலகத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல் வகையில் பொன்னியின் செல்வன் நாவல்தான் முதலிடத்தில் உள்ளது. இது மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு படமாக வெளிவந்தது. இதன் இரண்டாம் பாகத்துக்கும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
துணைவன் - விடுதலை
சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற விடுதலை, ஜெயமோகனின் துணைவன் நாவலைத் தழுவியது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'விடுதலை' திரைப்படத்தின் கதை பற்றியும், அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் பற்றியும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. அருமபுரி என்ற மலைக்கிராமத்தில் சுரங்கம் அமைப்பதற்கு அரசு திட்டமிடுகிறது. அதற்கு எதிராக, பெருமாள் வாத்தியார் தலைமையிலான 'மக்கள் படை' என்ற அமைப்பு, ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய உண்மைச் சம்பவங்களை நினைவூட்டுகின்றன.
இதுதவிர, சு.வெங்கடேசன் எழுதிய 'காவல்கோட்டம்' நாவலின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'அரவான்', சுஜாதாவின் 'ஆ..!' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'சைத்தான்' என ஏராளமான படங்கள் இலக்கியம் டூ சினிமாவாக உருமாறியிருக்கிறது. சுஜாதாவின் ஜன்னல் மலர் நாவல்தான், இறைவியின் விஜய் சேதுபதி போர்ஷன்களில் பல. இப்படிப் பலவற்றைச் சொல்லலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.