படைப்பாளிகளின் மூத்த சகோதரர்!
நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தகம் நகரில் 'இலக்கிய வீதி' என்ற ஆலமரத்துக்கான விதையை ஊன்றிய இலக்கியவீதி இனியவன் இன்றில்லை.
தினமணி கதிர்படைப்பாளிகளின் மூத்த சகோதரர்!
நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தகம் நகரில் 'இலக்கிய வீதி' என்ற ஆலமரத்துக்கான விதையை ஊன்றிய இலக்கியவீதி இனியவன் இன்றில்லை.
நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தகம் நகரில் 'இலக்கிய வீதி' என்ற ஆலமரத்துக்கான விதையை ஊன்றிய இலக்கியவீதி இனியவன் இன்றில்லை.
1970 களின் பிற்பகுதியிலும், 1980களிலும் புதிதாக எழுதவந்த இளைஞர்கள் பலருக்கும் மூத்த சகோதரராக இருந்து வழிகாட்டியது மட்டுமின்றி, அவர்களுடைய எழுத்துகள் அச்சுவாகனம் ஏறி ஆனந்த பவனி வருவதற்கும் வழிசெய்த மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரர் இவர்.
அந்தக் கால எழுத்துலகப் பிரபலங்களால் வசீகரிக்கப்பட்டு, எழுத்துலகில் தாங்களும் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இளைய தலைமுறையினருக்கு வாய்த்த பயிற்சிப் பட்டறைதான் இலக்கிய வீதி.
வேடந்தாங்கலுக்கு அருகிலுள்ள விநாயகநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இனியவனின் படைப்புகள் பரவலாகப் பிரபல இதழ்களில் வெளிவந்தது. சிறுகதை, நாவல், பேட்டிக் கட்டுரை என்று வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்த இனியவனின் மனதில், எழுதுவதைத் தாண்டி இன்னும் உயர்ந்த சாதனைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய நேரம் அது.
புதிதாக ஒரு வார இதழ் தொடங்கினால் என்ன?என்ற ஆலோசனையும் அவருக்குக் கிடைத்தது. பத்திரிகையா?என்று தயங்கிய இனியவனின் மனதில் பளிச்சென்ற ஒரு மின்னல்.
திறமை, விருப்பம் ஆகிய இரண்டும் இருந்த போதிலும் எப்படி எழுதுவது, யாரை அணுகுவது?என்பது தெரியாமல் தவிக்கின்ற இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டுவதே இனி நாம் செய்ய வேண்டியது என்ற தீர்மானம் இனியவனின் சிந்தனையில் தோன்றிய அந்தக் கணத்தில் 'இலக்கிய வீதி' என்ற பிரம்மாண்டமான விருட்சத்துக்கான விதை ஊன்றப்பட்டுவிட்டது.
1977 ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதியன்று துவங்கப்பட்ட இலக்கிய வீதியின் ஆரம்பக் கால கூட்டங்கள் மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியில்தான் அரங்கேறின.
வளரும் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி, பிரபல எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல், நூல் விமர்சனம், சிறப்புரை, கவியரங்கம்... என்று இலக்கிய வீதியின் மாதாந்திரக் கூட்டங்கள் களைகட்டின.
ஜெயகாந்தன், நா.பா., சிவசங்கரி, சு. சமுத்திரம், கோவி மணிசேகரன் போன்ற பிரபல எழுத்தாளர்களும், ஜெ., ராமு போன்ற பல தலைசிறந்த ஓவியர்களும் பங்கு பெற்றுச் சிறப்பித்தனர்.
மதுராந்தகம் பகுதி எழுத்தாளர்களின் படைப்புகளைப் பிரபல பத்திரிகைகளில் வரவழைத்து, அவற்றின் தொகுப்புகளை 'மீண்டும் மீண்டும் எல்லாம் மனசுக்குள்ளே'என்று தொடங்கி அற்புதமான சிறுகதைத் தொகுப்புகள் வருடாவருடம் வெளியாகின.
எஸ். குமார், மது. ராஜேந்திரன், கே. வேங்கடேசரவி, மலர்மகன், எஸ். குமாரகிருஷ்ணன், எம்.வி. குமார், ஜாசன், மது. கணேஷ், ஒழவெட்டி பாரதிப்பிரியன், ஸ்ரீதுரை உள்ளிட்ட உள்ளூர் எழுத்தாளர்கள் முதல், எஸ். சங்கரநாராயணன், பட்டுக்கோட்டை ராஜா, பூதலூர் முத்து, ஐஷ்வர்யன், கே.ஜி. ஜவஹர், புஷ்பா கந்தசாமி, சுபா, சுப்ரஜா போன்ற எழுத்தாளர்கள் பலரும் இலக்கியவீதி இனியவனால் பட்டைதீட்டப்பட்டுப் பல்வேறு வார இதழ்களிலும் பளிச்சிடும் பங்களிப்புகளை வழங்கத் தொடங்கினர்.
'வெறும் கை என்பது மூடத்தனம்; நம் விரல்கள் பத்தும் மூலதனம்'என்ற மறக்க முடியாத பாடல் வரிகளை வழங்கிய கவிஞர் தாராபாரதியின் சிம்ம கர்ஜனை இலக்கியவீதியின் மேடைகளில் முழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கொல்லங்குடி கருப்பாயி, பதின்கவனகர் கோவில்பட்டி இராமையா (கண்பார்வை அற்றவர்) ஆகிய திறமைசாலிகள் பலரும் இலக்கிய வீதியினால் வெளிச்சம் பெற்றவர்களாவர்.
இங்ஙனம் தம்மைச் சுற்றியுள்ள திறமையாளர்களைப் புகழ் ஏணியில் ஏற்றி வைத்து அளவற்ற மகிழ்ச்சியினை அடைந்த இனியவன் சென்னைக் கம்பன் கழகச் செயலாளராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார்.
இவரைப் போன்ற தன்னலம் கருதாத எழுத்துலகத் தொண்டர்கள் இவ்வுலகில் மிகவும் அபூர்வமாகவே தோன்றுகின்றனர்.