தினமணி கதிர்

சொந்தப் பணத்தில் உதவி

எஸ்.சந்தன குமார்

தன்னால் இயன்ற அளவுக்குச் சொந்தப் பணத்தில்  கல்வி, ஆன்மிகப் பணிகளுக்கு  நிதியுதவியை அளித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த எண்பத்து எட்டு வயதான வத்தல் வியாபாரி டி.பி. ராஜேந்திரன்.

அவரிடம் பேசியபோது:

'என்னுடைய சொந்த ஊர் விருதுநகர். எனது தந்தை  மறைவுக்குப் பின்னர் 1951- ஆம் ஆண்டில் மதுரைக்கு குடும்பத்துடன் வந்தோம். முதன்முதலில் செல்லூர் அகிம்சாபுரத்தில் சிறிய அளவில் பலசரக்கு கடையை  ஆரம்பித்தோம். அதைத் தொடர்ந்து, காய்கறி கடையை நடத்தினோம்.
அப்போது விற்பனை போக மீதமான காய்கறிகளைப் பக்குவப்படுத்தி வத்தல் தயாரித்து விற்பனை செய்தோம். இதில், ஓரளவு வருமானம் கிடைத்தது. முதலீடு போக மீதமுள்ள தொகையை சேமிப்பபேன்.
செல்லூர் டாங்கே நகரில் இடத்தை வாங்கி வத்தல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தைத் தொடங்கினேன். இதன்மூலம், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவருகிறது.
என்னால் இயன்ற அளவு தானம் வழங்குவதற்கு எனது பெற்றோர் பாலையா, பேச்சியம்மாள் ஆகியோரே காரணம். அவர்கள் சிறு வயதில் எனக்கு வழங்கிய தர்மச் சிந்தனை இன்றளவும் என்னை இயக்கி வருகிறது.  
மதுரைக்கு வந்த முதலாகவே செல்லூரில் உள்ள நெசவாளர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கும் பணியை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
கஜா புயலின்போது,  கடலூர் அருகே உள்ள 3 குக்கிராமங்களைத் தத்தெடுத்து அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில்  அத்தியாவசிப் பொருள்களை வழங்கினோம்.
மதுரை மாநகராட்சி திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.10 கோடி மதிப்பில் வகுப்பறைகள், இறைவணக்கக் கூட்ட அரங்கம்,  இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பணிகளை நான் செய்தேன்.  கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் ரூ. 71.45 லட்சம் மதிப்பில் வகுப்பறை, ஒரு ஆழ்துளைக் கிணறு, கழிப்பறை உள்ளிட்ட  மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சேதுபதி பாண்டித்துரை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கப்பட உள்ளன.  
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் முன்பு உள்ள புதுமண்டபம் பழமை மாறாமல் ரூ. 3 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  விழாக்காலங்களில் வைகையாற்றின் நடுவே உள்ள மைய மண்டபத்தைச் சுற்றி பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் கூடாரம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கிறேன்.
என்னால் இயன்றவரை பிறருக்கு உதவியாக இருந்துள்ளேன்.  இத்தகு நன்கொடைகளை யாவும் இதுவரை வெளியில் தெரியாமல் தான் செய்து வந்தேன். 
தற்போது  மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்ற பிரவீன்குமார் தான் நற்பணிகளை அங்கீகரிக்க வேண்டும் என வெளிக்கொணர்ந்தார்.  சாலமன் 
பாப்பையா நேரில் வந்து வாழ்த்தினார். 

மதுரைக்கு அண்மையில் வருகை தந்தமுதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்தியது எனது வாழ்வில் மறக்க முடியாதத் தருணம்.
ஆரம்பப் பள்ளிக் கல்வியைக் கூட படிக்காத நான், எனது தொழில் மூலம் வளர்ச்சிப் பெற்றேன்.  எனது மனைவி மாரியம்மாள் காலமாகிவிட்டார். எனக்கு 3  மகள்கள் நல்ல நிலையில் உள்ளனர். வத்தல் தயாரிப்புத் தொழில் இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில்,  டோக் பெருமாட்டிக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சியை அளித்துவருகிறேன்.
சிங்கம்புணரி, தேவகோட்டை  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் சிலர் வத்தல் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு தற்போது நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இதுபோன்றதொரு நல்ல செயல்கள் மூலம் என் வயதையும் மீறி உழைத்து, இன்னும் அதிக அளவில் அறச் செயல்களை செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT