''குமாரு, குமாரு, ஓடியா பூரான்டா; பூரான் போகுது'' என்று வாசலில் நின்றுகொண்டு கதிர் கத்துவது உள்ளே படித்துக் கொண்டிருந்த குமாருக்குத் தெளிவாகக் கேட்டது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அவசரமாகச் சட்டையை மாட்டிக் கொண்டு வாசலுக்குப் போனான்.
''எங்கேடா? எங்க?'' என்று அவன் கேட்க, ''இப்பதாண்டா கோடிக்குப் போயி வடக்குத் தெரு திரும்பிடுச்சு'' என்றான் கதிர். இருவரும் ஓடினர். தெரு திரும்பியதும், ''அதோ பாருடா'' என்று காட்டினான். பாதித் தெருவில் அவன் போய்க் கொண்டிருந்தான். அவன்தான் பூரான் இவர்களுக்கு. இருவரும் சற்று வேகமாக நடந்தபோது, வடக்குத் தெருவிலிருந்து, ''நானும் வரேண்டா'' என்று மூன்றாம் வீட்டிலிருந்து மணியும் சேர்ந்து கொண்டான்.
மூவரும் மாற்றி மாற்றி, ''டேய் பூரான், பூரான்'' என்று கூவினர். போய்க் கொண்டிருந்த அவன் திரும்பிப் பார்த்தான். ''பூரான் திரும்பிப் பார்க்குதுடா?'' என்றான் மணி. அதற்குள் கதிர் கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து வீசினான். அதைப் பார்த்துவிட்டுப் பூரான் என்னும் பூராசாமி இவர்களை நோக்கி ஓடி வந்தான்.
''டேய் பூரான் தொரத்துதுடா'' என்று சத்தம் போட்டுக்கொண்டே குமார் ஓடத் தொடங்க மூவரும் ஓடினர்.
தெருவில் சத்தம் கேட்டு வீடுகளின் உள்ளே இருந்த இரு பெரியவர்கள் வெளியே வந்தனர். அதில் ஒருவர் மற்றொருவரிடம், ''அவன்தான் பைத்தியக்காரன்னா? இவனுங்க அவனைவிடப் பைத்தியம் போல இருக்காங்க?'' என்றார்.
கேட்டவரும், ''ஆமாம், அவன் பாட்டுக்குப் போறான். இவனுங்கதான் அவனிடம் கலாட்டா செஞ்சு அவனுக்குக் கோவத்தை வரவழைக்கிறாங்க?'' என்று சொன்னார்.
அதற்குள் பூராசாமி ஓடிவந்து இவர்களை நெருங்கிவிட்டான். ''பூராசாமி,, அவங்க ஓடிப் போயிட்டாங்க. நீ போடா'' என்றார் பெரியவர்.
அருகில் வந்த பூராசாமி, கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்து வீசுவதாகப் பாவனை செய்து, ''சாமி, சாமி'' என்று கத்தினான். கல்லை எடுத்துத் தன்னை நோக்கி வீசியதைச் செய்து காட்டி அவர்களுக்குப் புரியவைத்தான் அவன். அவனுக்குத் தெரிந்த மொழி, 'சாமி சாமி' என்று சொல்வதுதான்.
அவனால் அந்த ஊரில் யாருக்கும் எந்தப் பாதிப்புமில்லை. இந்த ஊருக்கு எப்படி வந்தான் என்பதும் யாருக்கும் தெரியாது. அவன் சொந்த ஊரும் தெரியாது. பார்த்தால் மனநிலை பாதிக்கப்பட்டவன் போலவே தெரியாது. வெள்ளை வெளேரென்ற வேட்டி, அப்பொழுதுதான் குளித்தது போலப் பளிச்சென்ற முகம். நெற்றியில் மூன்று கோடுகளாகத் திருநீறு. இதுதான் அவன் கோலம். கையில் ஒரு துணிப்பை இருக்கும். அதில் அவனுடைய மாற்றுத் துணி இருக்கும்.
அந்த ஊரில் உள்ள ஒரே கோயிலான சிவன் கோயில்தான் அவனின் இருப்பிடம். அதன் வெளிப்புறத்தில் உள்ள மண்டபத்தில்தான் இரவுப் படுக்கை. அங்கே இருக்கும் மாமரங்களில் அவன் காயோ பழமோ பறித்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள். காலையில் எழுந்தவுடன் கோயில் குளத்தில் நீராடல். உடுத்தி இருந்த ஆடைகளைத் துவைத்துக் காய வைத்தல். நெற்றியில் மூன்று பட்டைகளை அழகாக வைத்தல். பின்னர் வெளியில் கிளம்பி விடுவான்.
ஊரில் உள்ள நான்கைந்து சிறிய ஓட்டல்களில் ஏதேனும் ஒன்றின் முன் போய் நிற்பான். அதனுள்ளிருந்து நான்கு இட்லிகள் அடங்கிய ஒரு பொட்டலம் தருவார்கள். அதை வாங்கிக் கொண்டு மீண்டும் கோயிலுக்கு வந்து குளக்கரையில் உட்கார்ந்து தின்றுவிடுவான். மதியம் கோயில் அன்னதானத்தில் உணவு. இரவும் இருக்கும் ஓட்டல்களில் ஒன்றில் ஏதேனும் கொடுத்து விடுவார்கள்.
பொழுது போகவில்லையென்றால் ஊருக்குள் செல்வான். அப்படித்தான் அன்று ஒருநாள் போய்க்கொண்டிருந்தான். காலை பத்து மணி இருக்கும்.
சிறுவர்கள் எல்லாரும் பள்ளிக்குப் போய் விட்டார்கள். எனவே அவனுக்கு அவர்களால் தொல்லை இல்லை. அவர்கள் அவனை விரட்டுவதும் அவன் அவர்கள் மீது கல்லெறிவது போலப் பாவனை காட்டுவதும் ஒரு விளையாட்டாகவே மாறிவிட்டது.
வானம் திடீரென இருட்டத் தொடங்கியது. பொழுது மாலையோ எனத் தோன்றியது. சில்லென்று காற்று வீசியது. பறவைகள் எல்லாம் உல்லாசமாகப் பறக்கத் தொடங்கின. மரங்கள் எல்லாம் தலையாட்டத் தொடங்கின. அந்தச் சூழல் பூரானுக்கே உற்சாகமூட்டியது. சும்மா இருக்க முடியவில்லை. ஊரினுள் சென்றால் புதிய மனிதர்களைப் பார்க்கலாம் என்று எண்ணினான். ஊர் என்பது சுமார் இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருந்தது.
ஊரினுள் மழை வரப் போகிறது என்று எண்ணி எல்லாரும் பரபரப்பாக இருந்தனர். லேசாகத் தூறல் விழத் தொடங்கியது. பூரானும் சற்று வேகமாக நடந்தான். தூறல் சற்றுப் பலமாக சாலை ஓரத்தில் இருந்த ஒரு தேநீர்க்கடை வாசலில் ஒதுங்கினான். உள்ளேயும் அதிகம் யாரும் இல்லை.
அப்பொழுது கடை உள்ளிருந்து, ''ஏம்ப்பா, பூராசாமி உள்ளே வாப்பா'' என்னும் குரல் கேட்டது. பூரானுக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரும்பாமல் நின்றிருந்தான். அதற்குள் கடையின் உள்ளே இருந்து ஒருவர் சாமியார் போல இருந்தவர் வெளியே வந்தார்.
அவன் கையைப் பிடித்து உள்ளே இழுத்தார். ''பூராசாமி என்னைத் தெரியலயா? நாந்தாம்பா அருணாசலம் உள்ள வா..'' என்று அவன் கையைப் பிடித்து இழுத்தார். பூரான் சில நிமிடங்கள் அவர் முகத்தை உற்றுப் பார்த்தான். பின் திடீரென்று கையை உதறினான். 'சாமி சாமி' என்று கூக்குரலிட்டவாறே மழையில் நனைந்துகொண்டு வெளியே வேகமாக ஓடி மறைந்தான்.
அருணாசலம் கடைக்குள் சென்றார். ''சாமியாரே! அவனை உங்களுக்குத் தெரியுமா?'' என்று கடைக்காரர் கேட்டார்.
''தெரியுங்க; நல்லாவே தெரியுங்க?'' என்றார் அருணாசலம்.
''அவன் எந்த ஊருங்க?''
''செங்குன்றம் கேள்விப்பட்டிருக்கீங்களா? அதான் அவன் ஊரு..''
''அது எங்க இருக்குங்க..?''
''சென்னைக்கு வடக்கே இருக்குங்க; ஆந்திரா எல்லையில இருக்குது..''
''நீங்க ஏன் சாமி அங்க போனீங்க?''
''எனக்கெல்லாம் எல்லா ஊரும் போக வேண்டிய வேலைதான். ஊர் ஊராப் போகும்போது அங்கேயும் போனேன். எப்படி அவ்வளவு சரியா நினைவிருக்குனா எனக்கு ரொம்பப் புடிச்ச ஊரு அது.''
''என்னா செங்குன்றத்துல அப்படி இருக்கு?''
''அருமையான ஊருங்க. அங்க இருக்கற மாரியம்மன் கோயில் பக்கத்துல ஒரு மாந்தோப்பு இருக்கு. அங்கதான் நான் தங்கிப்பேன். மக்களெல்லாம் போதும் போதும்னு சொல்றவரைக்கும் சோறு போடுவாங்க?''
''ஆச்சரியமா இருக்க; இப்படி ஊரா?''
''அதுலயும் இந்தப் பூராசாமி வீட்டில்தான் நிறையப் போடுவாங்க?''
''அங்கியும் இவன் இப்படித்தான் இருந்தானா?''
''ஆமாம்; ஆனா கூப்பிட்டா நல்லாப் பேசுவான்; திடீர்னு ஒடம்பெல்லாம் மண்ணைவாரிப் போட்டுக்குவான். மரத்தில ஏறி ஒளிஞ்சிக்கிட்டு ராத்திரி பூரா வரமாட்டான். தானா வந்தாத்தான் உண்டு ; புடிக்க ஏறினா குதிச்சிடுவேன்னு பயமுறுத்துவான்.''
''ஏன் இப்படி ஆயிட்டானாம்..''
கடைக்காரரை, 'அருகில் வா' என்று சைகை காட்டினார் அருணாசலம். அருகில் வந்து உட்கார்ந்தார் கடைக்காரர். அவர் காதில் மட்டும் விழும்படி மிக மெதுவாகச் சொல்லத் தொடங்கினார் அருணாசலம்.
''நான் விசாரிச்சேன். இவனுக்கு அப்பா, அம்மா இல்ல. அண்ணன்தான் காலேஜ் வரைக்கும் படிக்க வச்சாரு. அவரு பின்னால மனம் மாறிட்டாராம். ஒரு நாள் இவன் சொத்தை எழுதி கேட்டிருக்காரு. இவன் கையெழுத்து போட முடியாதுட்டானாம். அவங்க ரொம்ப பயமுறுத்தினாங்க? அதுலேந்து இப்படி ஆயிட்டான்னு சொன்னாங்க?''
''இங்க அவன் வந்து அஞ்சு வருசம் ஆயிருக்குங்க?'' என்றார் அந்தக் கடைக்காரர்
''அடுத்த தடவை நான் செங்குன்றம் போகச்ச அவன் இல்லை,. விசாரிச்சதுல செத்துப் போயிட்டான்னு சொன்னாங்க? அதுக்கப்பறம் இப்பத்தான் நான் அவனைப் பாக்கறேன்'' என்று கூறி முடித்தார் அந்தச் சாமியார்.
கடைக்காரர், இங்கு அவன் எப்படி இருக்கிறான் என்று சொன்னார், கேட்டு முடித்த அந்தச் சாமியார்,''நான் சஷ்டிக்குத் திருச்செந்தூர் போவணும். நான் கிளம்பறேன்'' என்று கூறிவிட்டுக் கடையை விட்டுக் கிளம்பினார். அதிலிருந்துதான் அவன் பெயர் பூராசாமி என்பது அவ்வூர்ப் பெரியவர்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.
மணியும் குமாரும் பள்ளியைவிட்டு வந்து கொண்டிருந்தனர். கதிர் அந்த நாளில் பள்ளி வரவில்லை. அப்பொழுதுதான் வெளிவந்திருக்கும் திரைப்படம், பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகள், மறுநாள் செய்ய வேண்டிய வீட்டுப்பாடம், வீட்டுக்குப் போய்விட்டு வெளியெ வந்து விளையாட வேண்டிய விளையாட்டு எல்லாம் அவர்கள் பேச்சில் வந்து போய்க்கொண்டிருந்தன.
சிவன் கோயில் அருகே வந்ததும், குமார் சொன்னான்.
''டேய் பூரான் ஒக்காந்திருக்குடா?''
''எங்கடா?''
''அங்க பாரு கோயில் மேடையில, தூணுக்கு அந்தப்புறம் இருக்கு..''
''வாடா, கிட்டக்கப் போயிப் பாக்கலாம்'' என்று மணி சொல்ல, இருவரும் பூனை போலக் காலடிகளை மெதுவாகச் சத்தம் கேட்காமல் சென்றனர். மிகவும் அருகில் செல்லாமல் சற்று தொலைவில் நின்றனர். இப்பொழுது பார்த்தால் பூரான் தெளிவாகத் தெரிந்தான். கால்களை மடக்கிக் குத்துக் காலிட்டு உட்கார்ந்துகொண்டு தலையைக் கீழ்நோக்கிப் புதைத்திருந்தான். முதுகு குலுங்கிக் கொண்டிருந்தது.
''டேய், பூரான் அழுவுதுடா..'' என்றான் மணி மெல்லிய குரலில்.
''போயி என்னான்னு கேப்போமா?''
''வேணாம்டா? பிடிச்சு அடிக்கப் போவுது..''
''ஒண்ணும் செய்யாதுடா? எதுக்கும் ஓடத் தயராகவே இருப்போம்'' என்றான் குமார்.
இருவரும் இன்னும் மெதுவாகச் சென்றனர். பூரான் இவர்களைக் கவனிக்கவே இல்லை. அழுதுகொண்டுதான் இருந்தான். கண்களிலிருந்து நீர் கொட்டிக் கொண்டிருந்தது. இவர்கள் அருகே வந்துதான் அவன் பார்த்தான். சட்டென்று எழுந்தான். '' இருவரும் பயப்படாதே; நாங்க ஒண்ணும் செய்ய மாட்டோம்'' என்று கூறிக் கொண்டே அவனை அமுக்கிப் பிடித்து உட்கார வைத்தனர்.
உடனே அவன் கைகளால் கும்பிட்டு, ''சாமி. சாமி'' என்று குரலெடுத்தான். கண்களைத் துடைத்துக் கொண்டான்.
மணி, ''ஏன் அழுவறே?'' என்று கேட்டான். அவனிடமிருந்து பதில் வரவில்லை.
குமாரும், ''யாராவது அடிச்சாங்களா?'' எனக் கேட்டான். பூரான் இல்லையென்று தலையசைத்தான்.
''பின்ன என்னான்னு சொல்லு'' என்றான் குமார்.
பூரான் தன் வயிற்றையும் சாப்பிடுவது போலக் கைகளை வாயிலும் தொட்டுக் காண்பித்தான். இவர்களுக்குப் புரிந்து விட்டது. ''மத்தியானம் சாப்பிடலியா? பசிக்குதா'' என்று கேட்டான் மணி.
பூரானும் 'ஆமாம்' என்பது போலத் தலையாட்டினான். ''குமாரு ஓடிப்போயி கடையிலேந்து ரெண்டு ப்ரட் பாக்கெட் வாங்கிட்டு வா. நான் இங்கியே இருக்கேன்'' என்றான் மணி. உடனே பூரான், ''வேண்டாம், வேண்டாம்'' என்று கைகளாலும் தலையாலும் சைகைகள் காட்டியதோடு வாயால் 'சாமி, சாமி' என்று கூறினான்.
''நீ சும்மா இரு?'' என்று கூறியவாறே குமார் ஓடிவிட்டான். வாங்கி வந்து கொடுத்தான். அதிலிருந்து அவர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இது நடந்து பத்து நாள்கள் சென்றிருக்கும். அந்தத் தெருவே அல்லோகலப்பட்டது. மணி ஏழாகியும் பள்ளிக்குச் சென்ற சிறுமி பத்மா வீடு திரும்பவில்லை. அவள் முதல் வகுப்பில் படிக்கிறாள். பள்ளியிலேயே படுத்துத் தூங்கிவிட்டாளா? என்று பார்க்க அவள் பெற்றோர் உள்பட தெருவில் சிலரும் பள்ளிக்குச் சென்றனர். பள்ளிக் காவலாளி பள்ளியைத் திறக்க எல்லா வகுப்பறைகளிலும் சல்லடை போட்டுத் தேடினர். பத்மா இல்லை.
தெருமக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, இதுவரை இதுபோல நடந்ததில்லை. ஒருவர் கோயில் குளத்தில் போய்ப் பார்க்கச் சொன்னார். பத்மா வீட்டு வாசலில் ஒரே கூட்டம். பத்மாவின் அம்மா அழுது அழுது துக்கம் தாளாமல் மயங்கிவிட்டார். பத்மாவின் அப்பா இரு சக்கர வாகனத்தில் பக்கத்து ஊருக்குச் சென்று காவல் நிலையத்தில் புகார் தரக் கிளம்பினார். சிறிது தூரம்தான் வண்டியில் சென்றிருப்பார். பத்மாவை பூரான் கைப்பிடித்து அழைத்து வருவது தெரிந்தது. வண்டியை நிறுத்தினார். கோபமாக, ''ஏறுடா வண்டியில?'' என்றார்,
பத்மாவைத் தூக்கிவைத்துக் கொண்டு அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தான். வீடு வந்து வண்டியை நிறுத்தினார். ஒருவர், ''ஓகோ! இவன்தான் கூட்டிக்கிட்டுப் போயிருக்கானா? என்னா திமிரு?'' என்றார்.
''நாங்களெல்லம் இங்க எவ்வளவு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கோம்'' என்றார் மற்றொருவர். ''இவன் இதையே வழக்கமா வச்சுக்கிட்டா என்னா செய்யறது?'' என்றார் வேறு ஒருவர். ''அதற்குத்தான் இப்படிக் கொடுக்கணும்'' என்று அவனை அறைந்தான் ஒரு இளைஞன். அவ்வளவுதான். பூரான் மீது படபடவென்று அடிகள் விழ அவன், 'சாமி, சாமி' எனக் கூக்குரலிட்டான்.
தாங்கவே முடியாச் சூழலில் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டான் பூரான். சிறிதுநேரம் கழித்து மூவர் கூட்டணியான கதிர், குமார், மணி வந்தனர். அவர்கள் வரும்போதும் குமாரின் அப்பா, ''ஏண்டா உங்களுக்கு இப்பதான் விளையாட்டு முடிஞ்சுதா? பத்மாவைக் காணோம்னு தெருவே கவலைப்பட்டுத் தேடிக்கிட்டு
இருக்குது''என்றார்.
''நாங்கதான் பார்த்தோமே. பூரான்தான் பத்மாவைக் கூப்பிட்டுக்கிட்டு வந்தான். எல்லாமே விசாரிச்சோம். அவளைக் கொண்டாந்து விட்டுட்டானே'' என்றான் குமார். ''பூரான் இப்ப எங்கே பூட்டான்'' என்று கேட்டான் கதிர். ''அடிச்ச அடியிலக் கத்திக் கிட்டே ஓடிட்டான்'' என்றார் ஒருவர்.
''அவனை ஏன் அடிச்சீங்க?'' எனக் கேட்டான் மணி.
''யார்கிட்டயும் சொல்லாமக் குழந்தையைத் தூக்கிட்டுப் போனா அடிக்க மாட்டாங்களா?'' என்றார் அவர் பதிலுக்கு.
''சரி, அவன்தான் தூக்கிக்கிட்டுப் போனானான்னு பத்மாவைக் கேளுங்க?'' என்று கோபமாகச் சொல்லிவிட்டு, ''வாங்கடா நம்பப் போயி பூரான் எப்படி இருக்கான்னு பாப்போம்'' என்று குமார் மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு ஓடினான்.
''எங்க பத்மா போயிட்ட?'' எனக் கேட்டார் பத்மாவின் அப்பா.
''ஸ்கூல் விட்ட உடனே நான் வெளியே வந்தனா? அப்ப பக்கத்து ஊர்ல சர்க்கஸ் நடக்குதில்ல; அந்தக் கூட்டம் போய்க்கிட்டு இருந்தது. நிறைய யானையெல்லாம் போச்சுங்க. அதுங்களைப் பாக்கப் பாக்க ஆசையா இருந்திச்சு.''
''சரி சொல்லுடி'' என்றார் பத்மாவின் அம்மா.
''இரும்மா, அதான் சொல்றேன்ல, அப்படியே அதுங்கப் பின்னாலயே போயிட்டேன். ரொம்ப தூரம் போனதக்கப்பறம்தான் தெரிஞ்சது இது நம்ம ஊரு இல்லியேன்னு. பயமாயிடுச்சு; அழுகை அழுகையா வந்திச்சு. அழுதுகிட்டே நின்னுக்கிட்டு இருந்தேன். அப்பறம்தான் அங்க பூரான் வந்துச்சு: எனக்குப் பயமாதான் இருந்துச்சு. இருந்தாலும் பூரான் பூரான்னு கூப்பிட்டேன். அதுதான் அழுவாத பாப்பா, பயப்படாதேன்னு சொல்லி வெவரம் கேட்டுக்கிட்டுத் தூக்கிக்கிட்டு வந்துச்சு'' என்று சொல்லி முடித்தாள் பத்மா.
''அய்யய்யோ; அவனைப் போயி அடிச்சட்டுமே. பாவம்'' என்று அங்கிருந்த ஒருவர் வருத்தமுடன் சொல்ல, அனைவருமே உடனே ஆமோதித்தனர். அதற்குள் குமாரும், கதிரும், மணியும் வந்தனர்.
''எங்கடா பூரான் இருக்கான்? பாத்தீங்களா?'' என்று கேட்டார் ஒருவர்.
''எல்லா இடத்துலயும் தேடிட்டோம். அவனை எங்கியுமே காணோம்'' என்றான் குமார். ''எங்கப் போய்டுவான்? எல்லாம் காலையில வந்திடுவான்'' என்று சொல்லிவிட்டுப் போனார் ஒருவர். எல்லாரும் கலைந்தனர்.
காலையில் பூரான் வரவில்லை. அவன் கோயில் குளத்தில் மிதந்து கொண்டிருந்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.