எத்தனையோ வீர விளையாட்டுகளும் கலைகளும் தமிழகத்தில் அழிந்துள்ளன. தற்காப்புக் கலைகளுக்கெல்லாம் முன்னோடியான சிலம்பம், களரி, மல்யுத்தம், மல்லர் கம்பம் உள்ளிட்டவை தமிழகத்தில் பிறந்ததற்கான சான்றுகளும் கல்வெட்டுக் குறிப்புகளும் கிடைத்தவண்ணம் உள்ளன. இந்தச் சிறப்புமிக்க மல்லர் கம்பம் சிவகங்கைச் சீமையில் வலுப்பெற்றுவருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அமெச்சூர் மல்லர் சங்க நிறுவனர் பிரகாஷிடம் பேசியபோது:
'வீரக்கலைகள் தமிழர்களின் மரபினில் மற்போர், மல்லு போன்ற வீர விளையாட்டுகளாக தொடக்கக் காலத்தில் இருந்து வந்தது. பின்னர் போர் வீரர்களுக்கு ஆயத்தப் பயிற்சிக்காக மனிதன் போன்று நின்று கொண்டிருக்கும் நீண்ட உருளை வடிவிலான கம்பத்தில் பிடித்து தொடை , கைகள், உடல் தசை நார்கள் போன்றவற்றை வலுப்படுத்திக் கொள்ள மல்லர் கம்பம் பயிற்சியாக உருமாறியது.
மல்லர் கம்பக் கலை ஆதித்தமிழரின் கலையாக இருந்த நிலையில், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இன்று சிறப்பாக விளையாடப்பட்டு வகுகிறது.
19 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பேஷ்வா மன்னரால் சமஸ்தானத்தின் அவை குருவான "பாலம் பட்ட தாதா தியோதர்' (17801852) என்பவரால் மல்லர் கம்பம் கலை இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டதால், இவர்தான் "மல்லர் கம்பத்தின் தந்தை' என்று இன்றுவரை போற்றப்பட்டு வருகிறார்
மல்லன் என்றால் வீரன் என்றும் கம்பம் என்றால் உருளை வடிவ நீண்ட கம்பத்தையும் குறிக்கும். "மல்லர் கம்பம்' என்னும் சொல்லும் தமிழில் மட்டுமே பேசப்பட்ட சொல்லாகத் திகழ்கிறது. அக்காலங்களில் மன்னர்களுக்கு இடையே போர் செய்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மற்போர் பழகியதாகவும், மற்போர் செய்வதற்கும் போருக்கு செல்வதற்கும் முன்பு மல்லர் கம்பத்தில் ஏறி வீரர்கள் அவர்களது உடம்பையும் மனதையும் உறுதிப்படுத்துவதற்கு இந்தக் கலை மிகவும் உறுதுணையாக இருந்துள்ளது.
மல்லன் என்ற சொல் சிலப்பதிகாரம் மற்றும் திருக்குறள் ஆகிய தொன்மை வாய்ந்த நூல்கள் சான்றாக உள்ளன. மல்லர் கம்பம் பயிற்சி முறைகள், பின்பு முறைப்படி ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டு இன்றைய பயிற்சியாகவும், உலகம் அறியும் விளையாட்டா கவும், தொன்மையான கலையாகவும் வலம் வருகிறது.
மல்லர் கம்பம் வீர விளையாட்டு தமிழகத்தில்தான் பிறந்து இருப்பதற்கான சான்றுகள் இருந்தாலும், இந்த கலையை கட்டிக் காத்து வளர்த்ததும், அதற்கு வழிமுறைகளையும் போட்டி முறைகளையும் இலக்கண வடிவிலான பயிற்சிகளையும் வகுத்தது மராட்டியர்கள்தான்.
தமிழகத்தில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காஞ்சிபுரம் கயிலாயநாதர் கோயில் கல்வெட்டுகள் முதல் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில் கல்வெட்டுகளில் இருந்து, மல்யுத்தக் கலை சிறப்புப் பெற்றவையாகத் தெரிகிறது.
மனிதன் போன்ற உருவம் கொண்ட அந்த கம்பம் உபகரணம் சுமார் 1 அடி முதல் 10 அடிவரை அமைந்திருக்கும். தொங்கும் மல்லர் கம்பம் ஆண்கள் மட்டுமே பயிற்சி பெறுவதற்காக உருவாக்கப்பட்டது. மல்லர் கயிறு பரவலாக பெண்கள் மட்டும் விளையாட்டின் காலப்போக்கில் போட்டி முறையில் இதனை இணைத்ததால் இன்று ஆண்களும் மல்லர் கயிற்றில் ஏறி பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஒரு அடி முதல் 10 அடி வரையிலான கம்பங்களில் மாணவர்களின் உடலின் உயரத்துக்கு ஏற்றவாறு கம்பங்கள் உருவாக்கப்பட்டு அதில் முதலில் பயிற்சி பெற்ற பின்பே பெரிய கம்பங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. அனைத்து விளையாட்டுகள் போலவும் மல்லர் கம்பம் விளையாட்டுக்கும் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
மல்லர் கம்பம், தமிழ்நாடு அமைச்சூர் மல்லர் கம்பம் சங்கம் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் போட்டிகள் நடத்தப்பட்டு மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் தேசியப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
1980 களில் இருந்து தேசியப் போட்டிகள் வயது பிரிவின் நடைபெறுகின்றன. 12 வயதுக்குள்பட்டோர்பிரிவு, 14 வயதுக்குள்பட்டோர் பிரிவு, 18 வயதுக்குள்பட்டோர் பிரிவு, 18 வயதுக்கு மேல் என ஆண்களுக்கும், பெண்களுக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து தேசிய போட்டியில் வெற்றி வெற்றி பெறுபவரின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. தேசியப் போட்டிகளில் அதிக பரிசுகளை பெறுவது மகாராஷ்டிர வீரர்கள்தான்.
இளைஞர் நலன், தேசிய விளையாட்டு பிரிவின் கீழ் மல்லர் கம்பம் அங்கீகரிக்கப்பட்டு, பாரம்பரிய உள்நாட்டு விளையாட்டு பட்டியலில் இணைக்கப்பட்டு சேர்க்கப் பட்டுள்ளது.
மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்கள் மல்லர் கம்பத்துக்கு அங்கீகாரம் அளித்து வீரர்களை அரசு வேலைக்கு எடுத்துகொள்கின்றனர்.
மத்திய அரசும் மாநிலங்களவையில் தீர்மானங்கள் நிறைவேற்றி அரசு வேலைக்கு மல்லர் கம்பம் விளையாட்டினை அங்கீகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மல்லர் கம்பத்துக்கு இன்னும் அங்கீகாரம் இதுவரையில் இல்லை'' என்கிறார் பிரகாஷ்.
சிவகங்கை மாவட்டம் மல்லர் கம்பம் சங்க செயலாளரும் மல்லர் கம்ப பயிற்சியாளருமான கலைச்செல்வம் கூறுகையில்,
'2021- ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டத்தில் மல்லர் கம்பம் பயிற்சிகளை அளித்து வருகிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கி அவர்களை கடந்த ஆண்டு தமிழ்நாடு அமைச்சூர் மல்லர் கம்பம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்தனர்.
இந்தக் கலையை தமிழ்நாடு அரசு மாவட்டம்தோறும் உள்ள விளையாட்டு மையங்களில் பயிற்சியாளர்களையும் பயிற்சிக்கான உபகரணங்களையும் அளித்து ஊக்கப்படுத்தினால் மென்மேலும் வளரும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சிலம்பம் களரி முத்துவரிசை, வர்மக்கலைக்கு பயிற்சி மையமும் ஆராய்ச்சி மையமும் நிறுவுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதுபோல மல்லர் கம்பத்துக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்'' என்கிறார் கலைச்செல்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.