கடலில் நீந்துதல் என்பது சாதாரண விஷயம் அல்ல; பலரும் கடலில் இறங்கவே தயங்கும்போது, கால் இழந்த மாற்றுத்திறனாளி மணிஎழிலன் ஆழ்கடலுக்குள் 'ஸ்கூபா டைவிங்' செய்துவருகிறார். இதோடு, அவர் கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர் என பன்முகத் தன்மையோடு இயங்கிவருகிறார்.
ராணிப்பேட்டை அருகேயுள்ள திமிரியைச் சேர்ந்தவர் மணி எழிலன். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர், வலது காலில் முழங்காலிலிருந்து கீழே வெட்டி எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். தனது விடா
முயற்சியால் கடலில் நீச்சலைக் கற்று தன்னை ஒரு 'ஸ்கூபா டைவிங்' சாதனையாளராக வெளிக்காட்டியிருக்கிறார்.
அவரிடம் பேசியபோது:
'என்னுடைய நண்பர் புகழ் பெற்ற ஆழ்கடல் ஸ்கூபா பயிற்சியாளர் அரவிந்த் தருண்ஸ்ரீ. அவர் ஒருமுறை என்னிடம், 'மாற்றுத்திறனாளியும்கூட கடலில் நீந்தலாம். கடலுக்குள் வெகு ஆழத்தில் பயணிக்கலாம். அபூர்வ மீன்களைப் பார்க்கலாம். அவற்றைப் படம் பிடிக்கலாம்' என்றார். கடலின் அடியில் நீந்துதலை அவர் ரசித்து ரசித்து சொன்ன விதம் என்னை கடலுக்குள் செல்லத் தூண்டியது.
தொடக்கமாக, என்னை நீச்சல் குளத்தில் பயிற்சி அளித்தார். ஒரு காலுடன் நீச்சல் அடிப்பது சிரமமாகத்தான் இருந்தது. அரவிந்த் என்னை ஊக்கப்படுத்தியதால் உடல் சிரமத்தையும் மீறி என்னால் நீந்த முடிந்தது. அரவிந்துக்கு திருப்தி வந்ததும்,
சென்னையில் கடலில் நீந்தவும் பயிற்சி அளித்தார். பின்னர், அவருடைய 'ஸ்கூபா டைவிங்' கற்றவர்களுடன் சேர்ந்து பயிற்சி எடுத்தேன்.
ஆழ்கடலில் நீந்தியது என்னைப் போன்ற மாற்றுத்திறனாளி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஆனால் அவர் பயிற்சியால் ஆழ்கடலுக்குள் நீந்தும் அளவுக்கு முன்னேறினேன்.
கடலுக்குள்ளும் என்னால் சகஜமாக நீந்த முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்குள் உருவானது. வாழ்க்கையில் எதிர்பாராமல் வரும் சவால்கள், சோதனைகளைக் கூட தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவத்தை நீச்சல் தந்தது.
எனது நீச்சல் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு காதலர் தினமான பிப். 14-இல் வந்தது. சென்னை நீலாங்கரை கடல் பகுதியில், அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்தின் நடுவர்கள் எனது சாதனையைக் கண்காணிக்க வருகை தந்தார்கள். கடலோர காவல் படை விதியின்படி, கடலுக்குள் ஒரு மனிதன் 56 நிமிடங்கள் வரைதான் இருக்கலாம். அதன்படி, 56 நிமிடங்களுக்குள் ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று முடிவு செய்தேன்.
கரையிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் 60 அடி ஆழத்தில் சுமார் 54 நிமிடங்கள் 30 நொடிகள் கடலுக்குள் இருந்து 'வெட்புக்'கில் (தண்ணீருக்குள் எழுத பயன்படுத்தப்படும் பிரத்யேக நோட்டு புத்தகம் ) பதினாறு பக்கம் கதை ஒன்றை எழுதி முடித்தேன்.
இதுவரை 11 நூல்களை எழுதியுள்ளேன். நான் நடத்தும் 'மலர்க்கண்ணன்' பதிப்பகம் மூலம் சுமார் 400 நூல்களைப் பிரசுரித்துள்ளேன்' என்கிறார் மணி எழிலன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.