டாடா 
தினமணி கதிர்

பாரதத்தின் ரத்தினம்..!

உரங்கள் முதல் விமானங்கள் வரை, ஆடைகள் முதல் அறிவியல் உலகின் செமிகண்டக்டர்கள் வரை 'டாடா' குழுமம் நிர்வகிக்கிறது.

சுதந்திரன்

உரங்கள் முதல் விமானங்கள் வரை, ஆடைகள் முதல் அறிவியல் உலகின் செமிகண்டக்டர்கள் வரை 'டாடா' குழுமம் நிர்வகிக்கிறது. இருபது ஆண்டுகள் 'டாடா'குழுமத் தலைவராக இருந்த ரத்தன் டாடா, குழுமத்தை விரிவாக்கம் செய்து வலுவும் சேர்த்திருக்கிறார்.

தனிமையில் வாடும் முதியோர்களைப் பாதுகாக்கும் நிலையம், புற்றுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க மருத்துவமனை, ஹாக்கி- வில் பயிற்சி நிலையங்கள், தான் படித்த அமெரிக்க கல்லூரிகள்... என ஒவ்வொன்றுக்கும் பல நூறு கோடி ரூபாய்களை அன்பளிப்பு செய்துள்ளார் ரத்தன்.

1937-இல் மும்பையில் நவல் டாடா- ஸூனி டாடாவுக்கு மகனாகப் பிறந்த ரத்தன் டாடாவின் பத்தாம் வயதில் பெற்றோர் பிரிந்தனர். அம்மா மறுமணம் செய்துகொண்டார். ரத்தனின் அப்பாவே ஜே.ஆர்.டி.டாடாவின் விருப்பத்தின்பேரில், டாடா குடும்பத்தால் தத்து எடுக்கப்பட்டவர்தான். ஸþனியோ டாடா குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் பிரிந்ததும் ரத்தனை கண்ணின் மணியாக வளர்த்தவர் அவரது பாட்டி.

நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படித்த ரத்தன், ஹார்வர்டிலும் தொழில் நிர்வாகம் படித்தார். படிக்கும்போது அமெரிக்கப் பெண்ணுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொள்ள இரு வீட்டாரும் சம்மதித்தனர். நடுவில் பாட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே ரத்தன் மட்டும் மும்பை வந்தார். 1962-இல் இந்தியா- சீனா யுத்தம் நடைபெற்றதால், பாதுகாப்பு கருதி ரத்தனுடன் இந்தியா வர காதலியை அவரது வீட்டில் அனுமதிக்கவில்லை.

பாட்டி இறந்து போக, அதே சமயம் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். பாட்டி மறைவாலும், காதலியின் திருமணத்தாலும் தளர்ந்த ரத்தன் இந்தியாவில் தங்கி ஜே.ஆர்.டி.டாடாவின் விருப்பத்தின் பேரில் ஜாம்ஷெட்பூர் இரும்புத் தொழிற்சாலையில் சாதாரண ஊழியராகச் சேர்ந்தார். அவர் கடைநிலைத் தொழிலாளர்களுடன் சேர்ந்து தொழில் நுணுக்கங்களைக் கற்றார். அந்த அனுபவமே பின்னாளில் அவரைத் தலைமை இருக்கையில் அமரச் செய்தது.

சரக்கு வாகனங்களைத் தயாரித்த டாடா நிறுவனமானது கார்கள் தயாரிப்பிலும் ஈடுபடத் தொடங்கியது. ஆனால், கார்கள் விற்பனையாகாமல் நஷ்டம் பெரும் அளவில் ஏற்பட, கார் தயாரிப்பை அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான 'ஃபோர்ட்'டிடம் விற்கப் பேசினர்.

'டாடா குழுமம் இரும்பை மட்டும் தயாரிப்பதுடன் நின்றிருக்கலாம். அனுபவம் இல்லாத கார் தயாரிப்புக்கு ஏன் வர வேண்டும்' என்று அந்த நிறுவனத்தினர் கேலியாகப் பேச, ரத்தன் இந்தியா திரும்பினார். தனது திறமைகளைப் புகுத்தி, பல வகை கார்களை தயாரித்து சாதித்தும் காட்டினார்.

'ஃபோர்ட்'நிறுவனத்துக்குச் சோதனைக் காலம் சில ஆண்டுகளுக்கு முன்பு வர, ஜாகுவார்', 'லேண்ட் ரோவர்'போன்ற சொகுசு கார் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை 2008-இல் வாங்கி, அந்தத் தொழில்நுட்பத்தை இதர கார்களிலும் அறிமுகம் செய்து டாடா கார் தயாரிப்பு நிறுவனத்தை ரத்தன் முன்னணி நிறுவனமாக மாற்றினார்.

தனி சொகுசு விமானத்தில் ரத்தன் பயணிக்கும் நிலை இருக்கும்போதும், சாதாரண விமானத்தில் எக்கனாமி வகுப்பில்தான் பயணம் செய்வார். நிறுவனச் செலவில் ரத்தன் ஆடம்பர வாழ்க்கை வாழாதவர். இரண்டு படுக்கைகள் கொண்ட சாதாரண ஃபிளாட்டில்தான் குடியிருந்தார்.

தெரு நாய்களிடத்தில் கனிவு காட்டிய ரத்தன் கோவா சென்றிருந்தபோது தெரு நாய் ஒன்றை வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்த்து வந்தார். 'கோவா' என்ற அந்த நாய் அக்டோபர் 10-இல் ரத்தனை காணாமல் ஒன்றுமே சாப்பிடவில்லையாம். இறுதியாக ரத்தனைக் காண 'கோவா'வை இறுதிச் சடங்குக்கு அழைத்து வந்துள்ளனர். 'கோவா'வுக்கு முன் ரத்தன் வளர்த்த நாயின் மூட்டு ஒன்றை மாற்ற அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்து அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்.

மும்பையில் தெரு நாய்கள், சிறு விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவமனை ஒன்றையும் துவங்கியுள்ளார் ரத்தன். டாடா தலைமை அலுவலகத் தரைத்தளத்தில் தெரு நாய்களுக்கு என்று ஒரு அறை ஏற்படுத்தி அதில் உணவு, விளையாட்டுப் பொருள்களை வைத்திருந்தார்.

டாடா குழுமத்தை புது பலத்துடன் எழுந்து நிற்கச் செய்ய 'டெட்லி டீ', தென் கொரியாவின் 'தாவூ'மோட்டார்ஸ், 'கோரஸ்'இரும்பு ஆலை, அமெரிக்காவின் 'ஜெனரல் கெமிக்கல்ஸ்' நிறுவனங்களை வாங்கினார். உள்ளூர் வர்த்தக நிறுவனங்களையும் டாடா குழுமத்துடன் இணைத்தார்.

அதில், 'கோரஸ்'டாடா குழுமத்துக்கு ஒரு சுமையாக மாறியது. 'எனது முடிவு சரியில்லாமல் இருக்கலாம். தவறானதை சரி செய்வதில்தான் வெற்றி இருக்கிறது' என்றார் ரத்தன். ஆனால், பெட்ரோலிய வணிகத் துறையில் ரத்தன் நுழையவில்லை.

ரத்தன் டாடாவின் சிந்தனை வணிக ரீதியில் அமைந்தாலும், நடுத்தர மக்களும் கார் வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'நானோ' கார் தயாரிப்பை அறிவித்தார். முடியாது என்று விமர்சனம் எழுந்தாலும், ஒரு லட்சத்துக்கு கார் என்று அறிவித்துவிட்டதால், அதனைத் தயாரித்து விற்போம் என்று உறுதியாக நின்றார் ரத்தன்.

கணினி மென்பொருள் உலகில் ரத்தன் டாடா தொடங்கிய 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' அதிக லாபத்தை வழங்கி, பிற டாடா நிறுவனங்களில் உயர்வுக்கு உரமாக அமைந்தது.

இங்கிலாந்து அரச குடும்பம் 2018 பிப்ரவரி 6-இல் 'வாழ்நாள் சாதனையாளர்'விருதை ரத்தன் டாடாவுக்கு வழங்குவதற்கான விழாவை பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏற்பாடு செய்திருந்தது. லண்டன் புறப்பட சில நாள்கள் இருக்கும்போது ரத்தனின் வளர்ப்பு நாய் உடல் நிலை திடீரென்று மோசமாக, விழாவுக்குச் செல்வதை ரத்து செய்தார்.

மன்னர் சார்லúஸா, 'சாதாரண மிருகத்துக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் தருவார்களா? ரத்தன் மாமனிதர்' என்று வியந்து பாராட்டினார்.

பிரபல பாப் பாடகி நஸியா ஹஸன் - ஜொஹபை சந்திக்க ரத்தனே லண்டன் சென்றார். 'ஒப்பந்தம் போட இன்று வரலாமா?' என்று ரத்தன் கேட்க, 'இப்போது முடியாது. இரண்டு நாள் கழித்து வாருங்கள்'என்று நஸியா சொன்னார்.

ரத்தன் காத்திருந்து அவர்களைச் சந்தித்து இசை ஆல்பம் தயாரிக்க ஒப்பந்தம் செய்தார். ஆல்பம் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றபோது, நஸியா ஹஸன் - ஜொஹப் பங்கேற்றபோதுதான் ரத்தன் யார் என்பதை தெரிந்து வியர்த்துப் போயினர். ஆனாலும், அவர்களை ரத்தன் வயதோ, அந்தஸ்தோ, வித்தியாசமோ பார்க்காமல் தனது இல்லத்துக்கு அழைத்து விருந்து கொடுத்து கௌரவப்படுத்தினார்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ஏடிஎம் கார்டுக்கான 'பாஸ் வேர்ட்' சில மாத இடைவெளியில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆன்லைன் வசதி வராததால் வங்கிக்கு சென்றோ அல்லது ஏடிஎம் இருக்கும் இடத்திற்குச் சென்றோ மாற்றிக் கொள்ள வேண்டும். முக்கிய வாடிக்கையாளருக்கு நேரடியாக ஆள் மூலம் ஸ்வைப்பிங் கருவியை அனுப்பி பாஸ்வேர்டை மாற்றிக் கொடுப்பார்கள் வங்கி அலுவலர்கள். வங்கி மேலாளர் ரத்தனின் பாஸ் வேர்டை மாற்றித் தர ஆளை அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, ரத்தன் ஏடிஎம் இருக்கும் அறைமுன் வரிசையில் நின்று தனது பாஸ்வேர்டை மாற்றிக் கொண்டு காரில் புறப்பட்டுவிட்டார்.

'இதயம் துடிப்பதைப் பதிவு செய்யும் இசிஜி வரைபடத்தில் கோடுகள் ஏறி இறங்கி பதிவாகும். வரைபடத்தில் இதயத் துடிப்பு நேர்கோடாக அமைந்தால் அந்த நபர் இறந்துவிட்டார் என்று அர்த்தம். அதுபோல் ஏற்ற, இறக்கங்கள் வாழ்க்கையின் ஒரு அம்சம். அவைதான் ஒருவரை முன்னோக்கி நகர்த்தும். வாழ்கிறார் என்று உறுதி செய்யும்' என்று ரத்தன் டாடா பலமுறை சொல்லியிருக்கிறார்.

'பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்த பின் நானும், என் தம்பியும் பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளானோம். நாங்கள் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தோம். அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட செய்தி பரவியதும், பள்ளியில் என்னையும் தம்பியையும் மாணவர்கள் கேலி செய்வார்கள். ஒரு பக்கம் அழுகையாக வரும். இன்னொரு பக்கம் கோபமாகவும் இருக்கும். கிண்டல் செய்பவர்களிடம் சண்டை போடக் கூடாது, கண்டுகொள்ளாமல் கட்டுப்பாட்டுடன் இருங்கள்' என்று பாட்டி சமாதானம் செய்வார்.

இன்னொரு பக்கம் அப்பாவோ, அவர் நினைப்பதை நான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்ளணும் என்று நான் நினைத்தேன். பியானோ கற்றுகொள் என்றார். மேல்படிப்புக்கு அமெரிக்கா போகணும் என்றபோது, இங்கிலாந்துக்குப் போ என்றார். கட்டடக் கலை படிப்பில் சேர வேண்டும் என்றபோது, பொறியியல் படி என்றார். பாட்டியின் தலையீட்டால் நான் அமெரிக்கா சென்று எனது விருப்பப்படி கட்டடக் கலை படித்தேன்.

இவ்வாறு வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்துள்ளேன். எனக்கு ஒரு குடும்பம் இல்லை. குடும்பம் என்று வந்துவிட்டால் பொறுப்பு கூடும். எனது சுதந்திரம் குறையும். டாடா குழுமப் பணிகளில் கவனம் செலுத்த முடியாது என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை. பலரது வற்புறுத்தல்களால் திருமணம் செய்து கொள்ளத் தயாரானபோதும், நான் கடைசி நிமிடத்தில் வேண்டாம் என்று விலகிவிட்டேன். இப்படி நான்கு முறை நடந்துள்ளது'என்று பலமுறை ரத்தன் கூறியுள்ளார்.

இந்தியாவின் ரத்தினமான ரத்தன் டாட்டாவுக்கு 'பாரத் ரத்னா'பட்டம் வழங்கப்படாமல் இருக்குமா என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலிறுதியில் மோதும் சபலென்கா - வோண்ட்ருசோவா

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்குப் பதிவு

தா்மஸ்தலா குறித்த தவறான தகவல்: சிபிஐ விசாரணைக்கு இந்து முன்னணி கோரிக்கை

இருசக்கர வாகன ஓட்டியைத் துரத்திய காட்டு யானை

SCROLL FOR NEXT