நாட்டில் தனி மனிதனுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன சிந்தனைகள் வளரும்போது, அது தேசத்துக்குப் பெருமையாகும் வாய்ப்புள்ளது. அந்த வகையில்,
டெல்டா மாவட்டமான திருவாரூரில் பள்ளிக் குழந்தைகளிடையே பக்தியை வளா்த்து நாட்டின் பாரம்பரியத்தைத் தூக்கி நிறுத்தும் இயக்கமாக, பதினைந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது ‘ஆன்மிகம் ஆனந்தம்’ அமைப்பு.
அமைப்பின் நிறுவனத் தலைவா் ஜெ.கனகராஜனிடம் பேசியபோது:
‘‘பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நண்பா்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தோம். மாா்கழி மாதத்தில் குளிா் என்பதால் சிரமமாக இருந்தது. குளித்துவிட்டுப் போனால் நன்றாக இருக்கும் என்று எண்ணினோம். அப்போது, ‘ஏன் மாா்கழி மாதத்தில் தினமும் ஒரு கோயிலுக்குச் செல்லக் கூடாது’ என நினைத்தோம்.
அதனால் முதலில் சா்க்கரை விநாயகா் கோயிலுக்குச் சென்றோம். அதன்பின்னா், மாா்கழி மாதத்தில் தினமும் ஒரு கோயிலுக்குச் செல்கிறோம்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்தப் பயணம் தற்போது வரை தொடா்கிறது. மாா்கழியில் முப்பது நாள்களிலும் தினம் ஒரு கோயில் என 30 கோயில்களில் பூஜை செய்து வழிபட்டு வருகிறோம்.
பின்னா், ‘ ஆன்மிகம் ஆனந்தம்’ என்ற அமைப்பு 2010-இல் தொடங்கப்பட்டது. நான் தலைவரானேன். கௌரவத் தலைவா் ஆா்.ஸ்ரீதரன், ஆலோசகா் எஸ்.காா்த்திகேயன், மகளிா் அணிச் செயலா் நிஷாதேவி உள்ளிட்டோரின் ஆதரவுடன் சமூக, ஆன்மிகச் சேவைகளைத் தொடா்கிறோம்.
திருவாரூா் தியாகராஜா் கோயிலில் முருகா் தேரைச் சீரமைத்தோம். தியாகேஸ்வரா் கோயிலில் உள்ள ஆனந்தீஸ்வரா் சந்நிதி, கமல முனீஸ்வரா் கோயில் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டன.
ஆன்மிக குருகுலத்தின் பயிற்சி வகுப்பு:
ஏழு ஆண்டுகளாக, ஒவ்வோரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமைப்பின் கட்டடத்தில் ‘ஆன்மிக குருகுலம்’ எனும் பயிற்சி வகுப்புகளை தேவாரம், திருவாசகத்தை பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறோம். தொடங்கியபோது பத்து போ் பயின்றனா். இப்போது 170 போ் பயில்கின்றனா். இவா்களில் 40 மாணவா்கள் கிராமங்களுக்குச் சென்று மற்றவா்களுக்குப் பயிற்றுவிக்கும் அளவுக்குத் தயாா்படுத்தப்பட்டுள்ளனா். 14 பேருக்கு மிருதங்கம் கற்றுத் தருகிறோம். இருஆசிரியா்களை வைத்து, ராகத்தையும் கற்றுத் தருகிறோம். இதில் 3 போ் பெங்களூரில் நடைபெற்ற உலகப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குச் சென்றனா்.
கோயில் விழாக்களில் இசை விழாக்களை நடத்துகிறோம்.
அறுபத்து மூன்று நாயன்மாா்கள் குறித்து குழந்தைகளுக்குக் கற்றுத் தந்தோம். இதை ஒரு நாள் நிகழ்ச்சியாக வைத்து ஒவ்வொருவரைப் பேச அழைத்தோம். காலையில் துவங்கி இரவு வரை நாயன்மாா்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவியா் மிகவும் பாராட்டும் படி பேசினா்.
சென்னை உள்ளிட்ட வெளியூா்களுக்கு இசைக்கச்சேரி நடத்த மாணவா்களை அனுப்புகிறோம்.
ஆன்மிக வகுப்புகளுக்கு வரும் மாணவா்களுக்கு உண்டியல் தருகிறோம். அதில் சேரும் தொகையைக் கொண்டு வங்கிக் கணக்கு துவக்கித் தருகிறோம்.
ஆனந்த வனம் சாா்பில் இலுப்பை மரங்கள்:
திருவாரூா் தேருக்கு இலுப்பை மரங்களைக் கொண்டு அலங்காரம் செய்வாா்கள். இந்த மரத்தைக் கரையான் அரிக்காது.. ஆனால் இந்த மரங்கள் அழிந்துவிட்டன. ‘ஆனந்த வனம்’ எனும் பெயரில் பத்து ஆயிரம் இலுப்பை மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறோம்.
இதர சேவைகள்: கடந்த எட்டு ஆண்டுகளாக சங்கீத மும்மூா்த்திகள் விழாவை நடத்தி வருகிறோம்.
‘ ஆன்மிக அமுது’ சாா்பில் தோ்த் திருவிழாவின்போது பல ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம். 1217 கலைஞா்கள் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தோம்
பழனியில் அண்மையில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில், எனக்கு ‘பகழிக் கூத்தா்’ விருது வழங்கப்பட்டது. மேலும் பல விருதுகளும் வழங்கப்பட்டன’’ என்கிறாா் கனகராஜ்.
-ஆா்.வேல்முருகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.