மகாத்மா காந்தி 
தினமணி கதிர்

புள்ளிகள்

1941-இல் ரவீந்திரநாத் தாகூரின் 80-ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லி மகாத்மா காந்தி அனுப்பிய தந்தியில் கூறியிருந்ததாவது, 'எண்பது வயது போதாதது.

கோட்டாறு கோலப்பன்

1941-இல் ரவீந்திரநாத் தாகூரின் 80-ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லி மகாத்மா காந்தி அனுப்பிய தந்தியில் கூறியிருந்ததாவது, 'எண்பது வயது போதாதது. நூறு வயதுக்கு மேல் வாழ்ந்து கலைச்சேவை செய்வீராக?'' என்றிருந்தது.

இதைக் கண்டதும் மகிழ்ந்தவுடன் தாகூர் அனுப்பிய பதிலில், 'வயது என்பது ஒரு சுமை. எண்பது வயதைச் சுமக்கவே நான் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நூறு, நூற்று ஐம்பது வயதுகளைச் சுமக்கும் அளவுக்கு எனக்குச் சக்தி இல்லை. தங்களின் அன்புக்கு நன்றி.'' என்றிருந்தது. அதே ஆண்டில், ஆகஸ்ட் 7-இல் தாகூர் மறைவுற்றார்.

சென்னை தி.நகரில் 1969 ஜனவரி 14-இல் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிலை திறக்கப்பட்டது.

அந்த விழாவில் எம்.ஜி.ஆர். பேசும்போது, 'கலைவாணருடன் நான் நடித்த ஒரு படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தேன். இடையில் ஆற்றைக் கடக்கும்போது, ஒரு காலணி அறுந்துவிட்டது. இதனால் அதையும், மற்றொரு காலணியையும் ஆற்றங்கரையில் வீசி எறிந்துவிட்டு வந்தேன்.

மறுநாள் புதிய காலணிகள் வாங்க வேண்டும் என்று கலைவாணரைத் துணைக்கு அழைத்தேன்.

அவர்தான் வைத்திருந்த காலணிகளை எடுத்து என் முன் போட்டு, "இதையே மாட்டிக் கொண்டு போகலாம்' என்றார்.

நான் அதிர்ந்துப் போனேன். ஆற்றங்கரையில் நான் எறிந்துவிட்டு வந்த அந்தக் காலணிகள் தைக்கப்பட்டு, என் முன் கிடந்தன. தலைகுனிந்து நின்ற என்னிடம், "ஏன் இப்படி ஊதாரித்தனமாகச் செலவு செய்ய நினைக்கிறாய்? நீ வாங்கும் சம்பளம் என்ன? அதில் வேளைக்கு வேளை காலணிகளை வாங்க முடியுமா?' என்று கண்டித்தார். என் கண்களில் நீர் மல்கியது'' என்று எம்ஜிஆர் பேசி முடித்தார்.

மூதறிஞர் ராஜாஜியின் அனைத்து நூல்களையும் வெளியிட்டவர் திருநாவுக்கரசு. அவரிடம் ராஜாஜி, 'ராமாயணம், மகாபாரதம் இரண்டுமே கற்பகக் கனிகள். மலிவான விலையில் மக்களுக்குத் தொடர்ந்து அளிக்க வேண்டும். செய்வாயா?'' என்று சத்தியம் வாங்கிக் கொண்டார். இதன்படியே திருநாவுக்கரசுவும் நடந்தார்.

-முக்கிமலை நஞ்சன்

1971-இல் காமராஜரை விருதுநகர் சட்டப் பேரவைத் தொகுதியில் தோற்கடித்த சீனிவாசனுக்கு சென்னை ஆபட்ஸ்பரி மாளிகையில் திருமணம் நடைபெற்றது.

அன்று சீனிவாசனுடைய திருமணத்துக்கு காமராஜர் சென்றிருந்தார். காமராஜர் உள்ளே நுழைந்தவுடன் அமர்ந்திருந்தோர் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். மாளிகையில் இருந்தோர் கைதட்டி வரவேற்றனர். திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் மணமேடைக்கு காமராஜர் வந்தார். அங்கிருந்தோரிடம் பேசிவிட்டு, மணமக்களையும் வாழ்த்திவிட்டு மிகச் சாதாரணமாக அங்கிருந்து தனியாகவே புறப்பட்டார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

ஒருமுறை மதுரை யாதவர் கல்லூரியில் சொற்பொழிவாற்ற சென்றார் கருணாநிதி. அப்போது நிகழ்ச்சியில் வரவேற்றுப் பேசியவர், 'நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆதரவில்லா யாதவர்கள். நீங்கள்தான் எங்களைக் கவனித்து மேம்படுத்த வேண்டும்'' என்றார். இந்தப் பேச்சை கருணாநிதி கவனித்து, குறித்தும் கொண்டார்.

தான் பேசுவதற்கான நேரம் வந்தபோது கருணாநிதி, 'நானும் ஒரு வகையில் யாதவன்தான். அண்ணாவின் வழியில் நடப்பதால் சூதும் வாதும் அறி"யாதவன்'. சூழ்ச்சிக்காரர்களின் கயமைச் செயல்களைச் சில நேரங்களில் புரி"யாதவன்'. நண்பர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் வேறுபாடு தெரி"யாதவன்'. ஆகவே, கல்லூரி நிர்வாகிகளே! உங்கள் இனத்தோடு சேர்ந்த இனத்தவன் நான்!'' என்று பேசினார். அரங்கத்தில் இருந்தோர் இந்தப் பேச்சை வெகுவாக ரசித்தனர்.

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

சி.டி.க்களின் வரவால் உலகம் முழுவதும் ஆடியோ கேசட்டுகளின் ஆதிக்கம் குறைந்து, பல ஆண்டுகளாகிறது. ஆனால், அமெரிக்காவில் உள்ள "நேஷனல் ஆடியோ கேசட் கம்பெனி' மட்டும் ஆடியோ கேசட்டுகள் தயாரிப்பதைக் கைவிடுவதாக இல்லை. விற்பனை குறைந்தாலும், ஆடியோ கேசட்டுகளைத் தயாரித்து வருகிறார்கள். போதுமான லாபமும் கிடைக்கிறது.

இந்த கம்பெனி 1969-இல் தொடங்கப்பட்டது. சி.டி.க்கள் அறிமுகமானவுடன் மற்ற ஆடியோ கேசட் கம்பெனிகள் சி.டி.க்களுக்கு மாறிவிட்டன. ஆனால், இந்த கம்பெனியை மூடக் கூடாது என்பதில், அதன் நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. அதனால் அமெரிக்காவின் கடைசி கேசட் கம்பெனி என்ற பெருமையையும் கிடைத்திருக்கிறது.

'இன்றும்கூட இசையமைப்பாளர்கள் பழைய ஆடியோ கேசட்டுகளை விரும்புகின்றனர். சில சிறிய இசைக்குழுக்கள் தங்கள் இசையை ஆடியோ கேசட்டுகளில் மட்டுமே வெளியிட விரும்புகின்றன. நாங்கள் தயாரிக்கும் கேசட்டுகளில் 70 சதவீதம் இசைப்பதிவுக்கே பயன்படுத்தப்படுகின்றன. மீதியுள்ளவை எதுவும் பதிவு செய்யாத வெற்று கேசட்டுகளாகவே விற்பனையாகின்றன. லாபத்துடன் ஓடினாலும் கம்பெனியை வெகு காலத்துக்குத் தொடர்ந்து நடத்த இயலாது. இதுதான் அமெரிக்காவின் கடைசி கேசட் கம்பெனி'' என்கிறார் அதன் உரிமையாளர் ஜான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கூட்டுறவு சங்க வாரியத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு: ராகுல் கேள்விக்கு அமித் ஷா பதில்

இன்றைய மின்தடை: க.க.சாவடி

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை

பருத்திக்கு இறக்குமதி வரி விலக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சைமா நன்றி

SCROLL FOR NEXT