க. அன்பழகன் 
தினமணி கதிர்

புள்ளிகள்

'திருவாரூரில் தமிழ் மாணவர் மன்றம் நடத்திய மு.கருணாநிதி என்னை அங்கு பேச அழைத்தார்.

தினமணி செய்திச் சேவை

'திருவாரூரில் தமிழ் மாணவர் மன்றம் நடத்திய மு.கருணாநிதி என்னை அங்கு பேச அழைத்தார். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. எனக்கு வயது இருபது. நாங்கள் அன்னியோன்யமாகப் பழகத் தொடங்கியது இருவரும் சட்டப் பேரவை உறுப்பினர்களானபோதுதான். நான் முதலில் கருணாநிதியைப் பார்த்தபோது, ஆயிரக்கணக்கான தோழர்களில் ஒருவராகவே பார்த்தேன். சட்டப் பேரவை உறுப்பினராக 15 பேரில் ஒருவராகப் பார்த்தேன்.

அண்ணா விருகம்பாக்கத்தில் மாநாடு நடத்தியபோது, மூவரில் ஒருவராக அவரை நான் பார்த்தேன். நாவலர் இயக்கத்தைவிட்டு பிரிந்தபோது, என்னில் அவரை நான் பார்த்தேன். ஒன்றிணைந்த ஓர் உணர்வு ஒன்றாக எங்களை உருவாக்கிவிட்டதற்குப் பின்னர், உடலால் இருவரானாலும், தமிழ் உணர்வால் ஒன்றானோம்' என்றார் ஒரு பேட்டியில் பேராசிரியர் க.அன்பழகன்.

தோழர் பாலதண்டாயுதம் எம்.பி.யாக இருந்தபோது, கோவையில் மின்வெட்டு ஏற்பட்டது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்களுக்கு 'லேஆஃப்' கொடுக்கப்பட்டது. ஆனால் முதலாளிகள் பாலதண்டாயுதத்தைச் சந்தித்து, 'கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதமேனன்தான் கேரள முதல்வர்.

நீங்கள் பேசினால் மின்சாரம் பெற முடியும்' என்றனர். கோவை மாவட்ட கம்யூனிஸ்ட் செயற்குழு கூடி விவாதித்தது. 'மின்சாரம் கிடைத்தால் ஆலைகள் செயல்படும். உற்பத்தி பெருகும்' என்ற அடிப்படையில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சந்திப்பின்போது அச்சுதமேனன், 'எங்களிடம் மின்சாரம் உபரியாக இருக்கிறது. ஆனால், எங்களுக்கு சிமென்ட் தேவைப்படுகிறது. நீங்கள் சிமென்ட் கொடுத்தால், நாங்கள் மின்சாரம் கொடுக்கிறோம்' என்றார். மதுக்கரை சிமென்ட் ஆலை உரிமையாளரிடம் பேச, அவர் சிமென்ட் தர ஒப்பு கொண்டார். கோவைக்கு மின்சாரமும், கேரளத்துக்கு சிமென்ட்டும் சென்றது. பாலதண்டாயுதத்தின் முயற்சியும் வெற்றி பெற்றது.

மு.வரதராசனார்

எழுத்தாளர் ஜெயகாந்தன், 'எழுதுகோல் என் தெய்வம்' என்றார். 'எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் என் மக்கள் இன்பமும் பயனும் எய்துகின்றனர். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன.

அதற்காகவும் எழுதுகிறேன். எதிர்காலச் சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துகொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன்' என்றும் அவர் கூறினார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை திருவாரூரில் மேடையில் இருந்தபோதும் மாலை அணிவிக்க அன்பர் ஒருவர் வந்தார். சுவாமிகளின் கழுத்தில் மாலை இருந்ததால், தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல் கையிலேயே அவர் வைத்திருந்தார். இதைப் புரிந்துகொண்ட வாரியார், தோளில் கிடந்த மாலையைக் கழற்றி அருகே இருந்தவரிடம் கொடுத்தார். உடனே அந்த அன்பர், விறுவிறுவென்று வாரியாருக்கு மாலை அணிவித்தார். அப்போது வாரியார், 'எப்போதும் நம்மிடம் இருப்பதை யாரிடமாவது அளித்தால்தான் அடுத்தவர்களிடம் இருந்து நமக்கு கிடைக்கும்' என்று கூற, கரவொலி எழுந்தது.

-எம்.அசோக்ராஜா.

முன்னாள் நீதிபதி மு.கற்பகவிநாயகம் புதுமையான பொருள்களைக் காண்பதில் திறமைசாலி. ஒருமுறை 'டிஸிப்லின்' என்ற வார்த்தைக்கு விளக்கம் அளித்து அவர் கூறுகையில், 'உங்களுக்கு ஒழுக்கம் இருந்தால் நீங்கள் முழுமையான மனிதர் ஆங்கிலத்தில் அந்த வார்த்தையை எழுதிப் பாருங்கள்.

பத்து எழுத்துகள் இருக்கும். ஒவ்வொரு எழுத்தையும் ஆங்கில எழுத்து வரிசையில் அதன் இடத்தைக் குறிப்பிட்டு எழுதிப் பாருங்கள். முதல் எழுத்து 'டி'யின் வரிசை எண் 4. அதன்பின் வரும் வரும் எழுத்துகள் ஐ-9, எஸ்-19, சி.-3, ஐ-9, பி-16, எல்-12, ஐ-9, என்-14, இ-5. இந்த எண்களைக் கூட்டிப் பாருங்கள் நூறு வரும். ஆக, 'டிஸிப்லின்' (ஒழுக்கம்) சரியாக இருந்தால் நூறு சதவீதம் முழு மனிதர்' என்றார்.

-இரா.கோவிந்தராஜன்.

பி.ஓ.எல். வகுப்பில் ஆசிரியராக மு.வ. பணியாற்றியபோது, அவரிடம் நான்கு மாணவர்கள் பயின்றனர். அவர்களிடம் முன்னுரையை வாங்கி தனது நாவல்களை மு.வ. வெளியிட்டார். 'அல்லி' நாவலுக்கு ம.ரா.போ. குருசாமியும், 'கரித்துண்டு' நாவலுக்கு சி.வேங்கடசாமியும், 'நெஞ்சில் ஒரு முள்' நாவலுக்கு ரா.சீனிவாசனும், 'அகல்விளக்கு' நாவலுக்கு ரகுநாயகனும் முன்னுரையை எழுதினர்.

நோபல் பரிசு பெற்ற தனது 'கீதாஞ்சலி' காவியத்தை ரோதென் ஸ்டெயின் என்ற ஓவியருக்கு காணிக்கையாக்கினார் ரவீந்திரநாத் தாகூர். இந்த நூலின் அட்டைப் படமும், தாகூரின் உருவப் படத்தையும் வரைந்தவர் ஸ்டெயின்தான்.

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT