'அப்பா, அம்மா.. இன்னும் பத்து நாளில் நான், பிரியா, குழந்தைகள் எல்லாரும் இந்தியா வரோம்' என்று அமெரிக்காவிலிருந்து விடியோ காலில் வந்த மோகனின் செய்தி கேட்டதும், மங்கா சந்தோஷம் அடைந்தாள். இரவு தூங்க முடியவில்லை. பேரக் குழந்தைகளை நேரில் பார்க்கும் ஆர்வம் களை கட்டியது.
'காலை எப்போது விடியும்' என்று காத்திருந்த அவளுக்கு அலாரம் அடித்து, பார்த்தபோது காலை அஞ்சு மணி. காஃபி போட்டு குடித்தவுடன் கணவருக்காக பிளாஸ்கில் ஊற்றி வைத்தாள் . விடிந்ததிலிருந்தே அவளுக்கு மனசு படபடப்பாக இருந்தது.
வீட்டுக்கு வெள்ளை அடிக்கணும். மகன், மருமகள், குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கேட்பார்கள். சமையலுக்குத் தவிசுப் பிள்ளையைப் வர சொல்லணும்.
'தவிசுப் பிள்ளை நெல்லையப்பன் இந்த ஊரில் செட்டிலானவர். திருநெல்வேலி ஸ்பெஷல் சொதிக் குழம்பு, அத்துடன் சைனீஸ்
தந்தூரி, நார்த் இந்தியன் புட் செய்வதில் எக்ஸ்பர்ட்' என்று பண்ணை வீட்டு அண்ணி ஒரு தடவை மங்காவிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
ஏற்கெனவே மங்காவிடம் விவசாயம் மராமத்து வேலை செய்து, பத்து வருடம் கழித்து மீண்டும் வேலைக்குச் சேர்ந்த பரமசிவத்தை வரச் சொல்லி. ஃபோன் போட்டாள்.
வருடா வருடம் குத்தகைக்குச் சாகுபடி செய்து வந்த பண்ணை முதலாளி இந்த வருடம் மங்காவிடம், 'தங்களால் முடியல' என்று சொன்னதால் ரொம்பக் காலத்துக்குப் பிறகு, பரமசிவம் மூலம் சாகுபடி செய்யப்பட்டது. பரமசிவத்திடம் தோட்டத்தில் நூறு தேங்காயைப் பறித்துப் பின் கட்டில் இருக்கும் ஸ்டோர் ரூமில் போட சொன்னாள். வேலை முடிந்தவுடன் அஞ்சாறு இட்லி சாப்பிட கொடுத்தாள்.
ஒரு நாள் கூட டிஃபன் கொடுக்காத மங்கா இன்னிக்கு அதிசயமா எட்டு மணிக்கே கொடுக்குது. பயங்கரத் தந்திரமும், சாமர்த்தியமும் தெரிந்த பொம்பளை என நினைத்துகொண்டான்.
சாப்பிட்டு முடிந்ததும், 'பரமு ஒரு எட்டு நடந்துபோய் பெயிண்டர் பாலுவையும், தவசு பிள்ளையையும், கையோடு அழைத்து வா' என்று உத்தரவு போட்டாள்..
மணி எட்டு ஆகியிருந்தது. எப்போதும் ஆறு மணிக்கே வந்து வீட்டு வேலைகள் செய்ய வந்துவிடும் பார்வதி, இன்னும் வரவில்லை. வாசலில் வந்து பார்க்கும்போது அவள் ஓட்டமும் நடையுமாக வேக வேகமாக வந்து கொண்டிருந்தாள்.
'ஏண்டி மகாராணி கருககல்ல வரமாட்டாயோ? அப்படித் தலை போற வேலை.
இவ்வளவு லேட்.'
முதல்நாள் ராத்திரி அவ புருஷன் குடிச்சிட்டு, சாப்பாடு சரியில்லைன்னு அடிச்ச அடியில், உடம்பு வீக்கம் கண்டிருந்தது. காலையில எழுந்திருக்க முடியாத நிலை.
'பொண்ணு பூரணியே தனது நாலு வயது தம்பிக்கு, பால் காய்ச்சி கொடுத்துத் தனக்குக் கஞ்சி வைச்சு கொடுத்து ஸ்கூல் போயிடுச்சு' என்று சொன்னா இந்த மங்கம்மா கேட்பார்களா? கேட்க மாட்டாங்கா? நம்ம கெளரவம்தான் போகும்' எதிர் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள்.
'சரி போய் வேலையைப் பாரு..'
மத்த நேரமா இருந்தா சண்டைக்கு வந்துவிடும் மங்கா, இன்னிக்கு ஏதும் சொல்லாமல் இருந்தது ஆச்சர்யத்தைக் கொடுத்து பார்வதிக்கு.
கொல்லைப்புறம் சென்று பாத்திரங்கள் கழுவும்போது பரமு தான் அவளிடம், 'மோகன் தம்பி வரப் போகுது. உன்னலா நிறைய வேலை நடக்கணும். அதான் அந்த அம்மா வாயை திறக்கல. ஒன்னையும் வையல' என்றான்.
அடுத்த இருபதாவது நிமிடம், 'வரச் சொன்னீங்களாமில்ல?' என்று பெயிண்டர் பாலுவும், தவசிப் பிள்ளையும் கோரஸா குரல் கொடுத்தார்கள்.
'பிள்ளையும், மருமவளும், பேர பிள்ளைகளும் வராங்கா.. இங்கே தங்கும் வரைக்கும் சமையல்லாம் டேஸ்டா இருக்கணும்.'
ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ். வாங்கிகொண்டு அவர் சென்றவுடன், 'இத பாரு பாலு. வீடு முழுவதும் போனது வந்தது பட்டி பாத்து இரண்டு கோட்டிங் பெயிண்ட் அடிக்கணும். மோகன் குடும்பம் தங்கும் அறை சுத்தமா இருக்கணும். வருகிற ஞாயிறுக்குள்ளாறே வீடு புதுசு மாதிரி இருக்கணும். புரியுதா?' என்றாள் மங்கா.
'சரிங்க' என்று தலையை ஆட்டி விட்டு, 'இன்னிக்கே வேலையை ஆரம்பிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு இன்னும் இரண்டு ஆட்களை அழைத்து வர கிளம்பினான் பெயிண்டர் பாலு.
'முக்கியமான கோர்ட் கேஸ்' என்று சொல்லிவிட்டு சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார் முத்தையா.
'வர்ற பத்து நாள் ஆகும். நீயே கவனிச்சுக்கோ.. செலவுக்குப் பணம் பீரோவில் இருக்கு.'
கல்யாணத்துக்குப் பின்னர் மோகன் ஒரே முறை வந்ததுதான். அனுப்பும் போட்டோ படத்திலும், விடியோ ஃபோன் பேச்சிலும், தான் பேர பிள்ளைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. பிட்ஸா, பர்கர் என்று சாப்பிட்டவர்களுக்கு நாக்கு செத்துக் கிடக்கும்.
'தன் கையால் விதவிதமா ஸ்பெஷல் முறுக்கு,அதிரசம், ஊட்டச்சத்து தரும் கடலை உருண்டை, எள்ளு உருண்டை ,பயத்தம் லட்டு பண்ணிக் கொடுக்கணும். பேரப் பிள்ளைகள் சாப்பிடுவதைக் கண் குளிர பார்க்கணும்' என்று கற்பனைகளும், யோசனைகளும் மங்காவின் மனதில் விரிந்தன.
பதபதைக்கும் வெயிலில் தலைமுக்காடுடன் வாசல் குறட்டில் குரல் கொடுத்து நின்றாள் பார்வதி.
'காலை அமர்க்களத்தில் மறந்துட்டேன். அதான் ஒன்னை திரும்பவும் வரச் சொன்னேன். கோவிச்சுக்காதே?'
'மூட்டையிலிருந்த பயறையும், உளுந்தையும் , பச்சைக் கடலையையும், ஆறு ஆறு மரக்காலா அளந்து ஒவ்வொரு சாக்கிலும் போட்டதைக் கண்காணித்த மங்கா, 'இந்த மூட்டைகளை மொட்டை மாடிக்கு பத்திரமா எடுத்துட்டு போ?' என்றாள்.
உச்சி வெயில் மணி ஒன்று இருக்கும். கோரைப் பாயை விரித்து, கொண்டு வந்த உளுந்து, பயறு, நிலக்கடலைகளைக் கொட்டி, அதை நன்கு கையினால் துழாவி, வெயில் படும்படி காய வைத்தாள் பார்வதி.
'நீ இன்னிக்கு அதைக் காய வைச்சுட்டு'
நாளைக்குச் சீக்கிரமா வந்து காய வைச்ச பயறு, உளுந்தை எண்ணெய் தடவி, அதை எந்திரத்தில் போட்டு ஒடைச்சு உரலில் போட்டு குத்தி, உமியை வெளில எடுத்து விட்டுப் பருப்பு
சுத்தமா மொறத்தினால் பொடைச்சு கொடு' என்றாள்.
காலையில் பூரணி வைச்சு கொடுத்த கஞ்சியைக் கூடக் குடிக்கல. மயக்கம் வரும் போல இருந்தது. தாக்குப் பிடித்து கொண்டாள் பார்வதி.
'அந்தப் பயறு, உளுந்து ,கடலக் காயட்டும்.'அது காயற வரைக்கும் இதை ஒடைச்சு கொடு.'
பெரிய கூடையில் கோபுரமாகக் காய வைச்ச வேர்க்கடலையைக் கொண்டு வந்து முற்றத்தில் கொட்டினாள் மங்கா.
'குருட்டுக் கணக்காகப் பார்த்தாலும் இரண்டு மரக்காலுக்குக் குறையாது. கூட இருக்கும் போலிருக்கேம்மா' என்று தயங்கினாள் பார்வதி.
'ஆமாம் கண்ணால் அளக்ககாதது கை
அளந்திடுமா? என்ன?' பிடி கூடக் கொறைய இருக்கத்தான் செய்யும் அதுக்கு என்ன? பேசிகிட்டு நிக்கற நேரத்துலே கொட்டையை உடைச்சிடலாம்' என அலட்சியமாகக் கூறிவிட்டு உள்ளே மறைந்தாள் மங்கா.
பார்வதிக்கு இந்த மாதிரிப் பெரிய மனுசங்க வீட்டு வேலை, ஒவ்வொரு வெள்ளாமைக் காலத்திலும் அறுப்பு, நடவு எந்த வேலை எப்பொழுது கிடைக்கதோ, அதுதான் அவளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் கஞ்சி ஊத்துது. எதிர் பேச்சு வாயாடல் எதுவும் இங்கே பலிக்காது.
புருஷன் முருகையன் கட்டட வேலைக்கு நினைத்தால் போவான்; கிடைத்ததை டாஸ்மாக்குக்கு மொய் எழுதிவிட்டு வருவான். வேலை இல்லாதபொழுது அவளை அடித்து உதைத்துக் கிடைத்ததைக் கொண்டு போய்விடுவான். இந்த நிலைமையில், உரத்துக்கூட அவள் பேசிவிட முடியுமா என்ன?
பரமசிவத்தை பத்து வருஷம் கழித்து இந்த வீட்டில் பார்த்ததும், 'பரமசிவத்தைமட்டும் கல்யாணம் செஞ்சுருந்தா, இப்படி கஷ்டப்படவேண்டி இருந்திருக்காது' என்று பார்வதிக்கு பழைய நினைவுகள் வந்து போனது.
'என்ன பார்வதி என்ன யோசனை. சீக்கிரம் வேலையை முடி' என்று மங்கா வந்து கத்தியதும் அவள் நினைவுகளிருந்து மீண்டாள்.
தோட்டுடன் இருக்கும் பச்சை கடலையை உடைப்பது அவ்வளவு சுலபமல்ல. நகக்கணுவெல்லாம் கிழிபட்டு, எரிச்சலெடுத்தது.
'பிள்ளைகளுக்குச் சோறாக்க போனா. நேரம் கடத்தி விடுவாள்' என்று பார்வதிக்கும், அவளது குழந்தைகளுக்கும், தட்டில் சாதமும், கத்திரிக்காய் குழம்பையும் தொட்டுக்க நார்த்தாங்கா ஊறுகாயும், சுட்ட அப்பளம் நாலும் வைத்து விட்டு போனாள் மங்கா. சின்ன டிஃபன் பாக்ஸில் குழந்தைகள் பங்கு சாதத்தை எடுத்து வைத்திருந்தாள்.
பெரியவள் பூரணி பத்து வயது. அஞ்சாம் வகுப்பு பள்ளிக்குப் போய்விடுவதால், காலை டிஃபன், மதியச் சாப்பாடு கிடைத்துவிடும். இளையவன் நடராஜன் எனும் நட்டுவுக்கு நாலு வயசு. பக்கத்து வீட்டில் விட்டு வந்திடுவாள்.
மேலத் தெரு செட்டியார் கடையில கடன் சொல்லி வாங்கிய பன் துண்டைக் கடித்துக் கொண்டே வந்தான் நட்டு, பூரணி கையைப் பிடித்தபடியே. அம்மாவைக் கண்டதும் கழுத்தைக் கட்டிக் கொண்டது. சாப்பாட்டை நட்டுவுக்கு ஊட்டிவிட்டு, அவன் கைகளில், நாலஞ்சு கடலையக் கொடுத்ததும், பூரணியுடன் விளையாடப் போய்விட்டது. நல்ல வேளை மங்கா பாக்கலை.
அந்தி சாயும் வேளையில் ஒருவிதமாக வேலையை முடித்துச் சேலையை உதறிக் கொண்டு எழுந்தவள், மங்காவிடம், 'புள்ளைங்களுக்குக் கொஞ்சம் பயறு குடுங்கம்மா.. கொறிச்சிட்டுக் கெடக்கும்' என்று கேட்டுப் பார்த்தாள் பார்வதி.
'நாளை வேலையை முடிச்ச கையோடு தட்டி முடியும் போது எதாச்சும் தரேன்..' என்றாள் மங்கா.
மறுநாள் சனிக்கிழமை பூரணிக்கோ பள்ளி விடுமுறை. அவளுக்கும், நட்டுவுக்கும் கஞ்சியைக் காய்ச்சிக் கொடுத்துவிட்டு, பயறையும், உளுந்தையும் எண்ணெய் தடவி கை எந்திரத்தில் உடைத்தாள்.
'எப்படிப் பார்வதி? ஒனக்கு மட்டும் சீரா உளுந்தும் பயறும் ஒடையது' என்று மங்கா வாயிலிருந்து பாராட்டி வார்த்தை வந்ததும் ஆச்சர்யமாய் பார்த்தாள் பார்வதி.
முதல் நாள் ஒடைச்ச நிலக்கடலை பருப்பைக் காய வைக்கச் சொல்லிவிட்டு, 'உலர்ந்ததோட கலந்துடாதே' என்றபடி இன்னொரு மரக்காலுக்கு மேலிருந்த கடலையைக் கொட்டினாள் மங்கா.
'என்னங்கம்மா இன்னும் பயறு உளுந்து உரலில் போட்டு தீட்டணும்..'
'எல்லாம் செய்யலாம். இந்தா....' என்று காலையில் மீந்துருந்த அஞ்சாறு இட்லிகளைத் தக்காளி சட்னியுடன் கொடுத்தாள்.
எத்தனை நேரம்தான் பூரணியால் நட்டுவை பார்த்துகொள்ள முடியும் ? ஒரு கட்டத்தில் குழந்தை நட்டு அம்மாவைப் பார்க்க வேண்டுமென்று அழ ஆரம்பித்துவிட்டான்.
அம்மாவைத் தேடி உள்ளே வந்தவன். பச்சை வண்ணத்தில் குவிக்கப்பட்டிருந்த பச்சைப் பயிறைக் கண்டதும், அவன் நாக்கில் நீர் ஊறியது. ஓடி வந்து ஒரு பிடி வாரி எடுத்தான்.
ஒரு வாரம் முன்பு தான் பக்கத்து ஊர்ப் பக்கம் உள்ள புற்றடி மாரியம்மன் கோயில் குலதெய்வம் செல்லாயி கோயிலில், முடி இறக்கிய மொட்டைத் தலையை ஆட்டி, ஆட்டிக்கொண்டு, அவன் கிளம்பு முன், அந்தப் பக்கம் வந்த மங்கா இதைப் பார்த்துவிட்டு, 'ஐயோ இப்பிடி அள்ளிக் கொட்டிக்கிட்டா என்ன மிஞ்சும்?ஏண்டி பார்வதி..' எனக் கத்திக் கொண்டே, 'திருட்டுப் பயலே..' என்று கூறி அந்தக் குழந்தையின் மொட்டைத் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.
'ஓ' வென்று கதறியபடி வெளியே ஓடி அக்கா மடியில் விழுந்தது குழந்தை. விக்கித்துப் போய்ச் சிலையாக அமர்ந்திருந்த பார்வதியால் என்ன செய்ய முடியும் ?
எதிராகவோ பேசிட முடியுமா? அம்மா காலத்திலிருந்து படி அளக்கிற குடும்பம். தீபாவளி, பொங்கலுக்குத் துணிமணி வாங்கிக் கொடுக்கும் குடும்பம்.
தம்பியை இடுப்பில் சொருகியவாறே உள்ளே சீறிக் கொண்டு வந்த பூரணி, 'என்னம்மா இப்பிடி இந்தப் பச்சப் புள்ளைய கொட்டியிருக்கீங்களே? இந்தச் சொப்புக் கையிலே மரக்கா பயறா தின்னுடும்? நாக்கு கேட்டுச்சுண்ணு கைப்பிடி பயறு எடுத்ததைத் திருட்டு அது இதுன்னு சொல்லிகிட்டு என்ன மனுசங்களோ? நீங்க? ஏம்மா.. நீயும் பாத்துக்கிட்டுக் குந்தியிருக்கியே... புள்ள கதறுறது கூடக் காதிலே விழலியா?' என்று அம்மாவிடமும் கோபத்தைக் கொட்டிவிட்டுக் குழந்தை
யுடன் வெளியேறினாள் பூரணி.
'ஆத்தாடி, உம் பொண்ணு வாயாலதான் வாழப் போகணும். இந்த வயசில என்ன ஒரு ஆங்காரம்... பேச்சு? இப்பவே அடக்கலைன்னா நாளை கைக்கடங்காது' என அறிவுரை கூறிவிட்டு எதுவுமே நடக்காதது போல உள்ளே சென்றுவிட்டாள் மங்கா.
பின்னர், அவள் பார்வதியிடம், 'நாளை கொஞ்சம் மாவு இடிச்சுக் குடுக்கணும். வெயிலுக்கு முன்னே வந்துடு' என உத்தரவிட்டாள்.
ஆனால் அவள் வீடு சேருமுன்னமே எதிரே வந்த பூரணி, 'அம்மா, தம்பிக்கு காய்ச்சல் கொதிக்குது..வசந்தி அக்கா ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போயிருக்கு' என்று செய்தி வாசித்தாள்.
டாக்டரம்மா காரணத்தைக் கேட்டதும், 'இப்படியா குட்டு வாங்க அதிர்ச்சியிலே, குழந்தைக்கு ஜுரமே வந்திருக்கே' என எரிச்சலுடன் கூறி உடனே பிள்ளையை அட்மிட் செய்துவிட்டார். ஜுரம் இறங்க நான்கு நாள்கள் ஆகும் என்றதால் பையனோட இருந்தாள் பார்வதி.
மறுநாள் மாவு இடிக்கப் பார்வதி வராத காரணத்தைத் தெரிந்த மங்கா இன்னொரு பெண்ணைக் கூப்பிட்டு இரண்டு மடங்கு கூலி கொடுத்து வேலையை முடித்துவிட்டாள்.
பெரிய தூக்குகளில் கடலை உருண்டை, தேங்காய் பர்ஃபி, பயத்தம்லாடு உளுந்து முறுக்கு... என்று பலவகைப் பலகாரங்களைச் செய்து வீட்டையும் ஒழுங்கு செய்து முடிக்கவும், மகன், மருமகள் குழந்தைகள் வரவும் சரியாக இருந்தது. குழந்தைகள் உமா, உஷா இருவரும் பாட்டியிடம் ஒட்டிக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தனர்.
'அப்பா... உஷா கண்ணெல்லாம் தண்ணி கொட்டுது.. உடம்பெல்லாம் ஒருமாதிரி ஆயிடுச்சு' என அழுதபடி கூறினாள் உமா.
ஹாலுக்கு ஓடிவந்த மோகன் குழந்தையின் நிலையைப் பார்த்ததும், கலவரத்துடன், 'என்னம்மா, இவளுக்குக் கடலை பர்பி, பயத்தம் லட்டுப் பலகாரமாக் குடுத்திருக்கீங்களே. இவளுக்கு நட் அலர்ஜி. என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?'
மங்கா பதில் கூறாது கையைப் பிசைந்துகொண்டு நின்றாள். குழந்தையை உடனே தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். டாக்டரிடம் திட்டு வாங்கிக்கொண்டு ஒரு விதமாக மருத்துவம் முடிந்து இரண்டு நாட்களில் வீடு வந்து சேர்ந்தனர்.
பையனை டிஸ்சார்ஜ் பண்ணியதும், மருத்துவச் செலவுக்குப் பணம் கேட்க பூரணி, நட்டுவுடன் வந்திருந்தாள் பார்வதி.
'நாலு நாள் வேலையைவிட்டு ஆசுபத்திரியிலே காவல் கிடந்தயாக்கும். பெண்ணைப் பார்த்துக்க விட்டுட்டு வரக் கூடாதா?' என்று தன் வேலை கெட்டதையே பெரிதாக எண்ணி சத்தம் போட்டாள் மங்கா.
அதே சமயம் உள்ளிருந்து வந்த மோகன், 'பார்வதி என் பிள்ளைகளுக்கு இந்தப் பயறுலாடு, உளுந்தில செஞ்ச முறுக்கு, கடலை பர்பி சமாசாரமெல்லாம் ஒத்துக்காது. அலர்ஜி. நீ கொண்டு போய் ஒன் பிள்ளைங்களுக்குக் குடு. இனி இந்த வீட்டில் எந்தத் தின்பண்டமும் இருக்க வேண்டாம். பட்டதெல்லாம் போதும்' என்றபடி ஒரு பெரிய பையில் பலகாரங்களைப் போட்டு எடுத்து வந்து பார்வதியிடம் கொடுக்க வந்தான்.
பூரணி முந்திக் கொண்டு, 'அதை வாங்காதம்மா? அன்னிக்கிப் பச்சப் புள்ள நாலு பயறு எடுத்ததுக்குக் காய்ச்சல் வரமட்டும் ஒங்க அம்மா கொட்டுவாங்களாம். இன்னிக்கி புள்ளைக்கு ஏதோ இங்கிலீசு நோக்காடு என்றதும் கூடைகூடையாத் தூக்கித் தருவாங்களாம். ஏழைக்குத் திறக்காத கதவு வைத்தியனுக்குத் திறக்கும் என்கிற பழமொழி மாதிரி தான் இருக்கு ஒங்க நடவடிக்கை' என்றாள்.
எப்பவோ வசந்தி அக்கா தன்னிடம் சொன்ன அந்தப் பழமொழியைப் பூரணி சொன்னதும் சுறுக்கென்றது மங்காவுக்கு.
'எங்களுக்குத் தன்மானம்தான் முக்கியம்..' என்றாள் பூரணி.
'என்னம்மா இது.. குழந்தைங்களை இப்படியா நடத்துவே. பார் சின்ன பையனோட அவலத்தைச் சொல்லி அக்கா குமறுவதை' என்றான் மோகன்.
'நட்டு வாடா! நம்ம செட்டியார் கடையிலே ஒனக்கு கடலை மிட்டாயும், பயத்தம் லாடும், முறுக்கும் கடன் சொல்லிட்டு வாங்கித்தரேன்' என அவனை இழுத்துக்கொண்டு வெளியேறினாள் பூரணி.
தன்னை யாரோ ஓங்கி சவுக்கால் அடித்தது போல் அதிர்ந்து நின்றார் மங்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.