பொ.ஜெயச்சந்திரன்
'தமிழைப் போற்ற வேண்டும். இயற்கை விவசாயத்தைப் பற்றி பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்கிறார் திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பா.லெட்சுமிதேவி.
இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் இவர் தனது நிலத்தில், 'வாழிய நிலனே' என்ற புறநானூறு பாடல் சொற்றொடரை வரைந்துள்ளார்.
அவருடன் பேசியபோது:
'நான் சுமார் 15ஆண்டுகளாக இயற்கை முறையில், விவசாயம் செய்து வருகிறேன். இயற்கை விவசாயத்தையும், பாரம்பரிய நெல் விதைகளைப் பெருக்கவும், கடந்த 4 வருடங்களாக ஏதாவது ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். முதலில் 35 விதைகளை 1.5 ஏக்கரில் பயிர் செய்தேன். எங்கள் தாத்தா வீட்டின் குதிரில் இருந்த 45 வருடங்கள் பழமையான 'நெல்லையப்பர்' நெல்லை மீட்டெடுத்தேன்.
பல்வேறு விவசாயக் கண்காட்சிகளிலும், முக்கிய நிகழ்வுகளிலும் அந்த பாரம்பரிய நெல் விதைகளைக் காட்சிப்படுத்தி அவற்றின் மருத்துவக் குணங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தேன்.
என்னிடம் பாரம்பரிய அரிசி வாங்குவதற்கு வந்திருந்த சேரன்மாதேவி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் நைனார் வடிவமைப்பு உதவியுடன், கடந்த மூன்று மாத முயற்சியில் தற்போது வயலில் , 'வாழிய நிலனே' என்று புறநானூறு பாடல் சொற்றொடரை வரைந்துள்ளேன்.
இயற்கையைப் பாதுகாப்பது நமது கடமை என்பதை அழுத்தம், திருத்தமாகச் சொல்லும் 'வாழிய நிலனே' என்னும் சொற்றொடர் வேளாண்மையோடு நிலத்தையும், சுற்றுச்சூழலையும், இலக்கியத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்லும். விவசாயிகள், பொதுமக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டேன்.
இயற்கை வேளாண்மைக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. பொதுமக்களிடம் இந்த செயல்பாடு கொண்டு செல்லும் என்பது திண்ணம். நமது முன்னோர்கள் கற்றுக் கொடுத்த பாரம்பரிய வழிதான் சிறந்தது என்பதை அனைத்து விவசாயிகளும், புரிந்துகொண்டு செயல்பட்டால், எதிர்கால சந்ததியினருக்கு நல்ல நிலத்தையும், நோயற்ற வாழ்வையும் கொடுத்துச் செல்ல முடியும் என்ற எண்ணத்தை தனக்குள் விதைக்க வேண்டும்.
எனது முயற்சிகளின் பின்னணியில் கணவர் முனைவர் சு.சூரிய நாராயணன் இருக்கிறார்.
எனது பணிகளுக்காக, பல்வேறு அமைப்புகள் வழங்கிய 25-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன்' என்கிறார் லெட்சுமிதேவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.