தினமணி கதிர்

ஆலயம் அறிவோம்!

கோயிலுக்குச் சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதுதான் கோயில்கள் பற்றிய பொதுவான புரிதலாக உள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஏ.கே.அருள்செல்வன்

'கோயிலுக்குச் சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதுதான் கோயில்கள் பற்றிய பொதுவான புரிதலாக உள்ளது.

அதனுடைய தலபுராணம், சிறப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றனவே தவிர, அந்தக் கோயிலின் வரலாற்றுத் தன்மை, அங்கு இருக்கக்கூடிய கட்டடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள், ஆகம மரபுகள், இசை மரபுகள், கலை மரபுகள் பற்றிய அறிதல், புரிதல் என்பது நம்மிடம் குறைவாகவே உள்ளன' என்கிறார், இசைக் கலைஞர், வரலாற்று ஆய்வாளர், இந்திய கோயிற்கலை சிற்பக்கலை ஆசிரியர் மற்றும் எனப் பல தளங்களில் இயங்கி வரும் எஸ். ஜெயக்குமார்.

இவர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஆர்வமுள்ளவர்களுக்கும் ஆலயக்கலை பற்றிய பயிற்சிகளைத் தொடர்ந்து அளித்து வருகிறார். ஆலயங்களுக்கு அவர்களை நேரடி ஆய்வுப் பயணமாக அழைத்துச் சென்று வருகிறார்.

அவருடன் ஒரு சந்திப்பு:

உங்களைப் பற்றி...

சென்னையில் 2001-இல் கலாஷேத்ராவில் 5 ஆண்டு காலம் கர்நாடக இசை பயின்றேன். 2006 முதல் அங்கே 8 ஆண்டுகள் இசை ஆசிரியராகவும் ஆவணக்காப்பாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தேன்.

2014 முதல் ஆலயக் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை பயிற்றுவித்து வருகிறேன். தவிர கலாசார சுற்றுலா நிறுவனம் ஒன்றை கடந்து எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். 2012- இல் பிரஸ்தாரா அறக்கட்டளை நிறுவி, பண்டைய ஆலயங்களையும், அவற்றின் மரபுகளையும் மீட்டுருவாக்கம் செய்து புரைமைப்பு செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன். கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை சம்பந்தமாக விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகிறேன்.

இசை பயின்ற நீங்கள் ஆலயக் கலைக்கு வந்தது எப்படி?

கோயில் சூழ்ந்த சீர்காழியில் பிறந்ததாலோ என்னவோ சிறு வயது முதலே கோயிலுக்குச் செல்லும் ஆர்வம் உண்டு. பள்ளி நாள்களிலேயே 'பொன்னின் செல்வன்' வாசித்திருந்தேன். அது சோழர்கள் குறித்த மிகப் பிரமாண்டமான பிம்பத்தை எனக்குள் ஏற்படுத்தி இருந்தது.

கலாஷேத்ராவில் பணிபுரிந்த போது மாணவர்களுக்காகச் சில கலாசார, பண்பாடு, வரலாறு சார்ந்த வகுப்புகளை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது பல அறிஞர் பெருமக்களின் தொடர்பு கிடைத்தது.

முனைவர் சித்ரா மாதவன் ஆற்றிய உரை ஒரு திருப்பு முனை எனலாம். டாக்டர் இரா.கலைக்கோவனின் இணையதளம் என் வரலாற்று ஆர்வத்தை மேலும் தூண்டியது. அதில் வெளியான பல கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வாசித்ததால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த பல ஆலயங்களுக்குச் செல்லும் ஆர்வம் ஏற்பட்டது.

2008- இல் சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நடத்திய மூன்று 6 மாத கால கல்வெட்டுப்பயிற்சி பெற்றேன். பிறகு வரலாற்றிலும் தமிழிலும் முதுகலை படித்தேன். பல அறிஞர் பெருமக்களின் உரைகளும் எழுத்துகளும் நான் ஆலயக்கலைக்குள் வரத் தூண்டுதலாக இருந்தன.

பத்மபூஷண் ஆர். நாகசாமியின் தொடர்பும் கிடைத்தது. அவரிடம் கல்வெட்டுப் பயிற்சியும் பல்வேறு தகவல்களும் கிடைக்கப்பெற்றேன். அவரது தொடர்ந்த ஊக்கத்தால் எனது ஆலயங்கள் தொடர்பான அறிவையும் தேடலையும் விரிவு செய்ய முடிந்தது.

2009 வாக்கில் ஆர்குட்டில் 'பொன்னியின் செல்வன்' குறித்த தொடர்ச்சியான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒரு நண்பர்கள் குழுவுடன் 'வந்திய தேவனின் பாதை' என்கிற பெயரில் காஞ்சியில் இருந்து தஞ்சை வரையிலும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் கண்டோம். அதன் தொடர்ச்சியாக ஆலயங்கள் குறித்த ஆர்வமும் தேடலும் பயணமும் அதிகரித்தன.

இந்திய ஆலயக் கலை - உலகளாவிய ஆலயக் கலை ஒப்பீடு செய்ய முடியுமா?

நமக்கு கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகளின்படி துருக்கி நாட்டில் உள்ள 'கொபேக்லி டெபே' ஆலயம் 11 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகக் கட்டப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக எகிப்து சுமேரிய நிலப்பரப்புகளிலும் ,கிரேக்க நாடுகளிலும் பல்வேறு ஆலயங்கள், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாகக் கட்டப்பட்ட பல நூறு ஆலயங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் பிற்காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்களே சான்றுகளாகக் கிடைக்கின்றன.

கட்டடக்கலையைப் பொருத்தவரை உயரமான கட்டட அமைப்புகளைக் கொண்ட கோயில்கள் ஒரு பொதுவான அம்சம் என்றே கூறலாம். இது உலகளாவிய பார்வையாக இருந்திருக்கிறது. கோயிலைச் சுற்றி, கோயிலுக்கு உள்ளே இருக்கக்கூடிய பாதைகள், வளாகங்கள் அனைத்திலுமே சில ஒற்றுமைகள் இருக்கின்றன. தொன்மங்களிலும் புராணங்களிலும் பல ஒற்றுமைகளை நாம் காணமுடியும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக மனித இனம் வெவ்வேறு இடங்களிலும் ஒரே சிந்தனை கொண்டதாக இருந்திருப்பதை இன்று அறியும்போது ஆச்சரியம் அளிக்கிறது. ஒப்பீட்டளவில் உலகளாவிய ஆலயங்கள் பெரும்பாலும் ஒரே அமைப்பைக் கொண்டிருந்தன. காலத்தால் பிற்பட்ட கோயில் கட்டடக்கலை மரபை நாம் கொண்டிருந்தாலும் கூட இந்தியாவில் 2000 ஆண்டுகால ஆலயக் கட்டுமானப் பணி வரலாறு நமக்கு உண்டு.

இலக்கியங்களைப் போல ஆலயக் கலையில் மேற்கத்திய, வெளிநாட்டு பாதிப்பு எந்த அளவிற்கு உள்ளது?

பல்வேறு நிலப்பரப்புகளில் வாழ்ந்த போதிலும் மனித இனம் ஒரே சிந்தனைத் தன்மையைக் கொண்டிருக்கிறது எனலாம்.

தொன்மங்களிலும் புராணங்களிலும் இலக்கியங்களிலும்கூட அவற்றின் ஒற்றுமைகளைக் காணமுடியும் . இங்குள்ள சப்தரிஷிகள் போன்று ஏழு முனிவர்களை, சுமேரியர்களுடைய புராணங்களிலும் கதைகளிலும் காணமுடியும்.

காந்தாரக் கலையில் கிரேக்கக் கலையின் தாக்கம் இருப்பதாகவும் குறிப்பிடுவார்கள். அதன் பரிணாம வளர்ச்சியாக கலையை அடுத்தடுத்த நிலைகளுக்கு நாம் இன்று கொண்டு சென்றிருக்கிறோம்.

கற்றதைக் கற்பிக்க வேண்டும் என்று எப்போது தோன்றியது?

கலாஷேத்ராவில் இசை படித்து முடித்தவுடன் இசை வகுப்புகள் போலவே ஆலயக்கலை மரபுகள் பற்றியும் வகுப்பெடுக்கும் வாய்ப்பு அங்கேயே கிட்டியது. 2009 -இல் அவர்களுடைய ஆய்வுக்காக சில கோயில்

களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதே தொடங்கி தொடர்ந்து ஆலயக்கலை பற்றிக் கற்பிக்க ஆரம்பித்தேன். நண்பர்களுடன் கோயில்கள், வரலாற்று ஆய்வு என்று எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்று இந்தப் பயணம் வளர்ந்தது.

2011 -இல் எங்கள் ஊரான திருவெண்காடு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அந்த ஊர்க் கோயில்கள், கல்வெட்டுகள், செப்புத்திருமேனிகள் குறித்து 2 மணி நேரம் உரையாற்றியதிலிருந்து தான் எங்களுடைய 'பிரஸ்தாரா' எனும் அறக்கட்டளையின் பணி தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாகப் பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வகுப்புகள் நடத்த அழைக்கப்பட்டேன். அதன் பிறகு அதுவே என் வாழ்வின் முக்கியமான பணியாக மாறியது.

களப்பயண அனுபவம் எப்படி ?

ஒவ்வொரு பயணமுமே எங்களுக்கு மறக்க முடியாத அனுபவம்தான். இந்த மாணவர் குழாம் அஜந்தா, எல்லோரா போன்ற உலகப் புகழ்பெற்ற வரலாற்று இடங்களுக்குச் சென்று வந்தனர்.

அதேபோல பாதாமி கட்டடக்கலைகளை கர்நாடக மாநிலத்தில் உள்ள சாளுக்கிய காலத்துக் கலை மரபுகளைக் கண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தஞ்சை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற ஆலயங்களுக்கு விரிவான பயணங்கள் செய்திருக்கிறோம்.

இதைத் தவிர ஹொய்சாளர் கலை மரபுகள், விஜயநகர காலத்து தலைநகரமான ஹம்பிக்குச் சென்று வந்திருக்கிறோம். ஒவ்வொரு பயணமுமே ஒரு தனித்த அனுபவம் தான். குறிப்பாகத் தமிழகத்தில் அதிகம் அறியப்படாத புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இரண்டு முறை களப்பயணம் மேற்கொண்டிருக்கிறோம். இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல தொல்லியல் தலங்கள் நமது தமிழ்நாட்டின் பொக்கிஷம்.

கோயில்கள் சார்ந்த கலை மரபுகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். குறிப்பாக அரையர் சேவை , நாதஸ்வர, தவில் இசை மரபுகள், நாடக மரபுகள், இலக்கிய மரபுகள் என்று ஆர்வமூட்டி அவற்றைப்பற்றி அறிய மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் பல ஊர்களுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆலயக் கலை சார்ந்த ஆவணங்கள் நம் நாட்டில் சரியாக உள்ளனவா?

நமது நாட்டின் ஆயிரக்கணக்கான ஆலயங்களை ஆவணப்படுத்துவதில் நாம் குறைந்த அளவே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஆகமங்கள் குறித்த நூல்களை ஒரு நிறுவனம் பதிப்பித்து இருக்கிறது என்றால், பாண்டிச்சேரியில் பிரெஞ்சு நிறுவனம் ஒன்றுதான். பல ஆகம நூல்களை ஆகம அறிஞர்களைக் கொண்டு பதிப்பித்திருக்கிறார்கள்.

இதைத் தவிர கோயில் கட்டடக்கலைக் களஞ்சியம் அல்லது பேரகராதி என்று 14 தொகுதி நூல்களாக அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியன் ஸ்டடீஸ் நிறுவனம் பல இந்தியக் கட்டடக்கலை வல்லுநர்களைக் கொண்டு அந்தப் பெரும் பணியைச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT