அருள்செல்வன்
'இசைக்கு இனம், மொழி பேதம் இல்லை; இசைக்கருவிகளுக்கும் பேதங்கள் இல்லை. அனைத்துக் கருவிகளும் சமம்தான்' என்கிறார் தவில் இசைக் கலைஞர் அடையாறு ஜி.சிலம்பரசன்.
கர்நாடக இசையின் 108 தாளங்களுக்கான அங்கங்கள் பற்றி 108 காணொலிகளை வெளியிட்டு சாதனைகளைப் படைத்த இவர், 'வாத்ய கலைமணி', 'வாத்ய விசாரத்', 'ஸ்ரீ காஞ்சி காமகோடி
பீட ஆஸ்தான வித்வான்', 'ஸ்ரீ சங்கீத சேவா ரத்னா', 'தவில் இளவல்' உள்ளிட்ட விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். நேரடியாகவும், இணைய வழியிலும் தவில் இசையைக் கற்பித்து வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'என் அப்பா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றியவர். என்னுடன் பிறந்தவர்கள் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள்.
எங்கள் குடும்பத்திற்கு எந்த இசைப்பின்புலமும் கிடையாது. எனது ஒன்றுவிட்ட மாமா சதாசிவம், 'பாய்ஸ் ஆர்கெஸ்ட்ரா' என்ற மெல்லிசைக் குழுவை நடத்தினார். அவர்தான் எனது அறிமுக குரு. எனது எட்டு வயதிலேயே அவரால் ஈர்க்கப்பட்டு, இசைக்கருவிகள் மீது எனக்கு ஆர்வம் வந்தது. அவர் இசை அமைப்பாளர்கள் சபேஷ் -முரளியிடம் வாசிப்பார்.
எனது 14-ஆம் வயதிலே 'பேங்கோஸ்', 'காங்கோ', 'ஆப்பிரிக்க வாத்தியம் தும்போ', 'டிரம்ஸ்', 'ரிதம் பேட்' உள்ளிட்ட பல தாளவாத்தியக் கருவிகளை வாசிக்கக் கற்றேன். என் மாமா பிள்ளைகள் கோகுல், கிருஷ்ணா இசைக் கல்லூரியில் படித்ததால் நானும் அப்போது செல்வதுண்டு.
அங்கே பணியாற்றிய தவில் வித்வான் திருக்கண்ணபுரம் எஸ். ஜெயச்சந்திரனும் என் ஆர்வத்தைப் பார்த்து விட்டு, பத்தாம் வகுப்பை முடித்தவுடன் நேர்காணல், தேர்வு எதுவும் இல்லாமல் சேர்த்துக்கொண்டதோடு, கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்று நிறைய கற்றுக்கொடுத்தார். இசைக் கல்லூரியில் தவில், மிருதங்கம் டிப்ளமோக்களை அடுத்தடுத்து படித்தேன். பின்னர் ராஜா அண்ணாமலை தமிழிசைக் கல்லூரியில் இசையில் பி.ஏ. பட்டம் பெற்றேன்.
பரம்பரையாக இசைக் குடும்பத்திலிருந்து வந்த மாணவர்களைவிட நான் தகுதியில் முந்தித் தங்கப்பதக்கமும் பெற்றேன். அதன் பிறகு என் ஆர்வத்தில் கடம், கஞ்சிரா ஆகியவற்றைக் கற்றேன். கீபோர்டும் வாசிப்பேன்.
திருவல்லிக்கேணி பிரபு, மன்னார்குடி வாசுதேவன், திருநாகேஸ்வரம் டி.ஆர்.சுப்பிரமணியம், வீணை காயத்ரி, லால்குடி ஜி. ஜே .ஆர் . கிருஷ்ணன், விஜயலட்சுமி, ஏ.கே.சி. நடராஜன், திருப்பாம்புரம் சகோதரர்கள் மீனாட்சி சுந்தரம், மாம்பலம் சிவா, வியாசர்பாடி கோதண்டராமன், கீவளூர் கணேசன் உள்ளிட்டோர் எனக்கு நேரடியாகவும் மானசிகமாகவும் குருவாக அமைந்தனர்.
தவிலின் மகத்துவம்: தவில் மிகவும் மதிப்பிற்குரிய கருவிகளில் ஒன்று. நம் பாரம்பரியத்தில் தவில், நாகஸ்வரத்துக்கு இருக்கும் மரியாதையே தனியானது. மக்களை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் யாரும் அந்தக் கலைஞர்களைப் பாராட்டுவதில்லை. ஆனால், கேரளத்தில் நல்ல மரியாதை. இலங்கையிலோ தெய்வீகக் கலைஞர்களாக மதிக்கின்றனர்.
பழைய முறை தவில் மிகவும் பாதுகாப்பானது. சுகமாகவும் இருக்கும். இப்போது செயற்கை முறையில் தயாரிக்கப்படும் தவிலில் இரைச்சல்தான் வரும். நாதம் இருக்காது. அதை முடுக்கி வைக்கப்பட்டிருக்கும் திருகாணிகள் கழன்றுவிட்டால் வெடிக்க நேர்ந்து வாசிப்பவருக்கு ஆபத்தாகக்கூடிய அளவுக்கு மிகவும் இறுக்கமாக முடுக்கி இருப்பார்கள்.
அந்த அளவுக்கு அழுத்தம் உள்ளதாக இருக்கும். இசைக்கருவிகளில் சில கருவிகளை இரண்டாம் தரமாகப் பார்க்கும் போக்கு உள்ளது. ஆனால், கருவிகளுக்கு ஜாதி கிடையாது. பேதமும் வித்தியாசமும் கிடையாது. அனைத்தும் சமம்.
பாரம்பரிய தவில் இசைக்குத் தமிழ்நாட்டில் மற்ற இடங்களைவிட மதிப்பு குறைந்து வருகிறது. பல இசை வடிவங்கள், இசைச் சூத்திரங்கள் புழங்கப்படாமல் மறைந்துவிடும் நிலையில் உள்ளன. இந்தத் துறையில் உள்ள அரசியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனது மாணவர்கள் எல்லாம் ஆல் இந்தியா ரேடியோவில் மற்ற கிரேடில் தேறியபோது, நான் ஏழு ஆண்டுகள் முயற்சி செய்து, எட்டாவது ஆண்டில்தான் 'பி கிரேடு' தேர்வானேன். 'ஏ கிரேடு ஆர்டிஸ்ட் தானே?' என்று அங்குள்ள அனைவரும் என்னிடம் கேட்பார்கள். ஆனால், 'பி கிரேடு' தேறுவதற்கு எனக்கு 7 ஆண்டுகள் பிடித்தன. இதில் உள்ள அரசியல் எனக்குப் புரியவில்லை. அதேபோல இசைக் கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பதிலும் சரியான முறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
வெளிநாடுகளில் கச்சேரி: நான் அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, மலேசியா, கென்யா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று கச்சேரி செய்துள்ளேன். 'எ கர்நாடிக் குவார்டட்' என்று பெயரில் நிறைய கச்சேரிகளைச் செய்கிறோம். அதில், மயிலை கார்த்திகேயன், பிரவீன், ஸ்ரேயா தேவநாத் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.
நான் அறிந்தவற்றை பிறருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். என்னிடம் குருகுல வாசமாக வீட்டில் தங்கிப் பயிற்சி பெறும் மாணவர்களும் இருக்கிறார்கள். நிஜமான ஆர்வம் இருந்து கட்டணம் கொடுக்க வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாகவும் கற்றுக் கொடுக்கிறேன். இணைய வழியில் பல நாடுகளில் உள்ள மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன்.
108 தாளங்களில் 108 காணொலிகள்: தாளம், ஸ்வரம் என்பதில் அனைத்து வாத்தியங்களுக்கும் ஒரே இலக்கணம்தான். ஆனால் வாத்தியங்களைக் கையாளும் முறைதான் வேறு மாதிரியாக இருக்கும்.
உதாரணமாக, மிருதங்கத்தில் மோதிர விரலை மடித்து ஆள்காட்டி விரலை அழுத்தி வாசிக்க வேண்டும். தவில் என்றால் ஒரு கையில் நான்கு விரல்களாலும் வாசிக்க வேண்டும். இன்னொரு கையில் தவில் கழி (கொம்பு) இருக்கும். கஞ்சிரா ஒரே கையால் வாசிக்க வேண்டும். அது சிரமமானது. கடம் வாத்தியத்தில் சத்தம் அதிகமாக வராது. மிகவும் அழுத்தி வாசிக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றும் வேறுபடும்.
தாளங்கள் என்றால் பொதுவாக ஆதி, ரூபகம், கண்டசாபு, மிஸ்ரசாபு, சங்கீர்ண சாபு போன்றவை முக்கியமானவை. இவை பாடல்களுக்கு ஏற்ற மாதிரி போடப்படுபவை. இதற்கான தாளங்கள் ஏழு. அவை சப்த தாளங்கள் எனப்படும். துருவ, மட்டிய, ரூபக, ஜம்பை, திருப்புடை, அட, ஏக தாளங்கள் என்பவை.
அந்த ஏழுக்கும் உரிய அங்கங்கள் ஆறு. லகு, துருதம், அனுதுருதம், குரு, புளுதம், காகபாதம் என்றுள்ள தாளங்களுக்கான அட்சர எண்ணிக்கை வேறு மாதிரியாக இருக்கும். இந்தத் தாளங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை வாசிக்கப்படுவது இல்லை. இப்படியே விட்டால் மெல்ல, மெல்ல மறைந்து விடும் என்று தோன்றியதால், அவற்றைப் பற்றி ஒரு பதிவு செய்யலாம்.
கூகுளில் தேடிப் பார்த்தால் தவறான தகவல்களே வந்தன. அதுகுறித்து விவரமறிய தேடலில் இறங்கினேன். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்துக்குச் சென்று, தகவல்களைச் சேகரித்தேன். இந்தத் தாளங்கள் பற்றி ஆய்வு செய்த மிருதங்க வித்துவான் குரு பரத்வாஜ் , டி. ஆர். எஸ். மணிகண்டன் ஆகியோரின் ஆய்வுகளைச் சேகரித்தேன். பல மேதைகளிடம் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றேன். இப்படிப் பல்வேறு வகையாகச் சிரமப்பட்டு தேடித்தேடி ஒரு நிறைவைப் பெற்றேன்.
'சிம்ம நந்தன தாளம்' என்பது நீளமான பெரிய தாளம். அதற்கு 108 அட்சரங்கள் உண்டு. அவையும் சீராக இருக்காது. எண்ணிக்கை மாறி, மாறி வரும். அந்தத் தாளத்தை முதலில் எடுத்துக் கொண்டு அதற்கு நான் அங்கங்களைப் பற்றி விளக்கி, மோரா கோர்வை அறுதி சொல்லி ஒரு பதிவைப் போட்டேன். அவ்வளவு நீளமான தாளத்துக்கு நான் சரியாகப் பதிவிட்டதால் எல்லா தாளங்களுக்கும் அங்கங்கள் விளக்கம் கொடுத்து பதிவு போட வேண்டும் என்று நண்பர்கள் வலியுறுத்தினார்கள். அதனால் 108 தாளங்களுக்கும் நாளுக்கு ஒன்றாக 108 நாள்கள் என தினமும் ஒரு பாடம் சொல்லி பதிவேற்றினேன்.
108 தாளங்கள் இருப்பதில் சிலவற்றைத் தவிர மற்றவை புழக்கத்தில் இல்லை. காலப்பகுதியில் மறைந்துவிடும் அபாயம் இருக்கிறது. இதை எண்ணி நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் நான் இந்த முயற்சியில் இறங்கினேன்.
எனது 108 தாளங்களுக்கு அங்கங்கள் விளக்கும் அந்த முயற்சிக்கு நண்பர் திருநாகேஸ்வரம் மணிகண்டன் மிகவும் ஊக்கமாக இருந்தார். நண்பர்கள் அதை உலக சாதனை முயற்சிக்குக் கொண்டு சென்றனர். அதன்படி 'இந்தியன் வேர்ல்ட் ரெக்கார்ட்' அமைப்பு இந்திய உலக சாதனை விருதை அளித்தது. இசைக் கல்லூரியில் முதல்வராக இருந்த வீணை காயத்ரி என்னை வாழ்த்திப் பேசினார்.
இந்தப் பணியை முதலில் நான் செய்தபோது, பல வித்துவான்களும் இசைக்கலைஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இசை என்பது மனதை மகிழ்விப்பதற்காக இருக்கக்கூடிய ஒரு கலை. அதைப் பற்றி எது செய்தாலும், அது இன்பம் தரக்கூடியதுதான். தைரியமாக நான் இறங்கினேன். எதிர்ப்புகள் வந்தாலும் நான் தாங்கிக் கொள்கிறேன் என்று துணிந்து இறங்கினேன். வெற்றி அடைந்தவுடன் நிறையப்பேர் பாராட்டினார்கள். பெரிய இசைக் கலைஞர்களே தங்களுக்குச் சந்தேகம் எழும்போது, எனது காணொலியைப் பார்த்து தெளிவு பெற்று விடுவதாகக் கூறியபோது எனக்கு மகிழ்ச்சி' என்கிறார் அடையாறு சிலம்பரசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.