தினமணி கதிர்

மலரே.. குறிஞ்சி மலரே..!

கொடைக்கானல், மூணாறு போன்ற மலைப் பகுதிகளில் மட்டுமே வளரும் குறிஞ்சி செடி மதுரையில் வளர்ந்ததுடன் பூவும் பூத்திருக்கிறது.

பிஸ்மி பரிணாமன்

கொடைக்கானல், மூணாறு போன்ற மலைப் பகுதிகளில் மட்டுமே வளரும் குறிஞ்சி செடி மதுரையில் வளர்ந்ததுடன் பூவும் பூத்திருக்கிறது. இங்குள்ள ஒத்தக்கடை கடச்சனேந்தல் சாலையில் உள்ள ரமேஷின் இல்லத் தோட்டத்தில் மலர்ந்திருக்கும் மலர்களைப் பார்க்க மக்கள் வருகை தரத் தொடங்கிவிட்டனர்.

இதுதொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை. உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் ரமேஷிடம் பேசியபோது:

'மலைப் பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் 'நீலக் குறிஞ்சி'யை வீடுகளில் வளர்க்கக் கூடாது என்று வனத்துறையின் விதி உள்ளது. இதை வளர்த்தால், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறைத் தண்டனையும் உண்டு.

எனது வீட்டில் வளரும் செடியானது குறிஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த 'சிறு குறிஞ்சி' வகையாகும். 'குறிஞ்சி மதுரையில் பூத்துள்ளது' என்று செய்தி வந்ததும், வனத் துறையும் விசாரித்தது. நான் வளர்த்திருப்பது 'சிறு குறிஞ்சி' என்று தெரிந்ததும் விசாரணையை முடித்துவிட்டனர்.

எனது வீட்டில் தினம் ஒன்று அல்லது இரண்டு சிறு குறிஞ்சி பூக்கள் மலரும். மாலையிலேயே வாடி உதிர்ந்துவிடும். பனிக்காலம் என்பதால் குறிஞ்சி பூத்துள்ளது. ஏப்ரல் மாதம் வரையில் பூக்கும். இந்தப் பூவில் வாசம் உண்டு. பூவில் அமர வரும் வண்டுகளைப் பிடிக்க, செடியில் சிலந்திகள் கூடு கட்டி வாழ்கின்றன. பூ வெளிர் கத்தரிப்பூ நிறத்தில் கவர்ச்சிகரமாக உள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன் சிறுகுறிஞ்சியின் தளிரை பெங்களூரில் இருந்து எனது நண்பர் வாங்கிவந்து என்னிடம் ஒன்றும், காரைக்குடியில் இருக்கும் இன்னொரு நண்பரிடமும் கொடுத்தார். இப்போதுதான் பூத்திருக்கிறது. காரைக்குடியில் நண்பர் வளர்க்கும் சிறு குறிஞ்சியில் இதுவரை பூக்கவில்லை.

குறிஞ்சி வகை செடி கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயர மலைப் பகுதிகளில் வளரும் என்று சொல்லப்பட்டாலும், நூறு அடி உயரத்தில் இருக்கும் மதுரையில் வளர்ந்து பூத்துள்ளது அதிசயம்தான்.

குறிஞ்சி செடிவகைகள் 6, 8, 12, 13 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். அடுத்த ஆண்டு பூக்குமா? என்று உறுதியாகச் சொல்லமுடியாது.

ஆற்று மீன்கள் குறித்த ஆராய்ச்சி செய்துவரும் நான் வீட்டின் மொட்டைமாடியிலும், வீட்டை ஒட்டியுள்ள மூன்றரை சென்ட் நிலத்திலும் பெருங்காய மரம், திருவோடு, ருத்திராட்சம், குங்கிலியம் (சாம்பிராணி), மனோரஞ்சிதம், சித்தரத்தை, காபி, எண்ணெய் பனை, கற்பூர வெற்றிலை அடங்கிய 87 வகை செடிகள், மரங்களை வளர்த்துவருகிறேன்.

இடப்பற்றாக்குறையால், மாடித் தோட்டத்தில் 'போன்சாய்' (மரங்கள் வளரும்போது அவ்வப்போது வெட்டி குட்டை மரங்களாக வளர்ப்பது) மரங்களாக வளர்த்துவருகிறேன்.

மரங்களுக்கும் செடிகளுக்கும் உலந்த மாட்டுச் சாணம்தான் உரம். அரிய செடிகள், மரங்களைப் பார்க்க இயற்கை ஆர்வலர்கள் எனது தோட்டத்துக்கு வருகை தருகின்றனர்'' என்கிறார் ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT