தினமணி கதிர்

எவரெஸ்ட் மலையேற்றம்... பார்வைக் குறைபாடு தடையல்ல...

பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணான சோன்சின் அங்மோ, எவரெஸ்ட் சிகரத்தில் மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

DIN

பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணான சோன்சின் அங்மோ, எவரெஸ்ட் சிகரத்தில் மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடித்திருக்கிறார். 'எவரெஸ்ட் ஏறிய முதல் பார்வைக் குறைபாடுள்ள இந்தியப் பெண்', 'உலகின் ஐந்தாவது பார்வையற்ற பெண்' என்ற பெருமைகளை இவர் மே 19-இல் பதிவு செய்துள்ளார்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்தியாதிபெத் எல்லையில் கின்னவுர் மாவட்டத்தின் சாங்கோ கிராமத்தைச் சேர்ந்த இருபத்து ஒன்பது வயதான பழங்குடிப் பெண்ணான இவர், 'பார்வைக் குறைபாடு என் கனவுகளுக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை' என்கிறார்.

அவர் கூறியது:

'ஹெலன் கெல்லர் எனக்கு மானசீக குரு. 'பார்வை இல்லாமல் இருப்பதைவிட மோசமானது, பார்வை இருந்தும் தீர்க்கத் தரிசனம் இல்லாமல் இருப்பது' என்ற எனது குருவின் பொன்மொழியை நம்புகிறேன். எனது வாழ்க்கைப் பயணம் சவால்களால், சோதனைகளால் நிறைந்தது.

எனது எட்டு வயதில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது மருந்து ஒவ்வாமையால் பார்வையை இழந்தேன். என் தந்தையும் பார்வைக் குறைபாடுள்ளவர்.

என் பார்வையை மீட்க முயன்றும் முடியவில்லை. தந்தையும் என் குடும்பத்தினரும் எனது பயணத்தில் ஆதரவளித்தனர். நான் அல்லது அவர்கள் ஏதாவது தருணத்தில் சோர்வடைந்திருந்தால், வாழ்க்கையில் ஒரு படி கூட நான் முன்னேறியிருக்க முடியாது.

பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்து, தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றேன். யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் தில்லி கிளை ஒன்றில் பணிபுரிகிறேன். பார்வைத் திறன் இல்லாததை என் பலவீனமாகக் கருதவில்லை. எனது பலம் மலைச் சிகரங்களை ஏறுவதில் உள்ளது என்று தீர்மானித்து அதை நோக்கி பயணித்தேன்.

மலையேறும் கனவை நனவாக்க நான் 2016 இல் அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேறும் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றேன். மணாலியில் இருந்து 18,000 அடி (சுமார் 5486 மீ.) உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான சாலைகளில் ஒன்றான கர்துங் லா வரை 10 நாட்களில், கடுமையான வெப்பநிலையைத் தாங்கி சைக்கிள் ஓட்டியுள்ளேன்.

2018 , 2019இல் ஆறு நாள்களில் கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு வழியாக சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன். 2024 ஜூலையில் மணாலியில் இருந்து ஸ்பிதி பள்ளத்தாக்கு, கின்னூர் வழியாக கல்பா வரை ஏழு நாள் சைக்கிள் பயணத்தை முடித்துள்ளேன்.

2021இல் 'ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம்' என்ற பெயரில் உலகின் மிக உயரமான போர்க்களமான உறையும் பனிப்பாறைகள் உள்ள சியாச்சின் பனிமலையில் ஏறி , 'இந்திய மாற்றுத்திறனாளிகளில் சியாச்சின் பனிமலை ஏறிய ஒரே பெண்' என்ற பெருமையைப் பெற்றேன்.

அக்டோபர் 2024இல், 5,364 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்தேன். இந்த முகாமை எட்டிய முதல் பார்வையற்ற இந்தியப் பெண்மணியும் நான்தான். முன்னேமே 6,000 மீ. உயரமுள்ள இரண்டு இந்திய மலைகளை ஏறி பயிற்சி பெற்றுள்ளேன். பார்வையற்றோருக்கான மாநில நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றேன். எனக்கு ஜூடோ தற்காப்புக் கலையும் தெரியும். தேசிய அளவிலான பார்வையற்றோருக்கான மராத்தான் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளேன்.

மலையேறுவது, எனது குழந்தைப் பருவக் கனவு. நிதி நெருக்கடி பெரிய சவாலாக இருந்தது. அதையும் சமாளித்து எவரெஸ்ட்டை தொட்டுவிட்டேன். இதற்காக எனக்கு இரண்டு பெண் வழிகாட்டிகள் உதவினர். இனி உலகின் பிற புகழ்பெற்ற மலைச் சிகரங்களில் ஏறத் தொடங்குவேன்,

ஒவ்வொரு மாற்றுத் திறனாளிக்கும் மன உறுதியை ஊட்ட வேண்டும் என்ற எனது கனவில் இது ஒரு படி மட்டுமே. சாதிக்க வேண்டியது இன்னும் உள்ளது.

எனது சாதனைகளுக்காக, மாற்றுத்திறனாளிக்கான 'சர்வஷிரேஷ்ட் திவ்யாஞ்சன்' என்ற தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கியுள்ளார்' என்கிறார் சோன்சின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT