சென்னையில் இந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பு சார்பில், 'மீடியா அன்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு' என்ற கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பங்கேற்று, தனுஷின் 55ஆவது திரைப்படம் குறித்தான சில தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார்.
ராஜ்குமார் பெரியசாமி பேசியது, 'இந்தப் படத்துக்கு நான் தனுஷ் சார் மாதிரியான நடிகரைதான் தேடிக் கொண்டிருந்தேன். கதையும் அவரின் நடிப்பு திறனுக்கு சில விஷயங்களைக் கொடுக்கும். கதை முழுமையாக அவருக்கு எழுதப்பட்டது கிடையாது. எந்தக் கதையையும் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை அவர் வைத்திருக்கிறார்.
நான் அவரை சந்திக்கும்போது என்னிடம் எந்தக் கதைக்கான ஐடியாவும் இல்லை. அந்தச் சந்திப்புக்குப் பிறகு நான் அவருக்கு பொருந்திப்போகும் என நினைக்கும் எந்தக் கதையாக இருந்தாலும் அவரிடம் சொல்வதற்கு ஒரு கம்போர்ட்டைக் கொடுத்தார்.
நான் திரையில் இப்படி தெரிய வேண்டும், நான் இப்படியான கதாபாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும், இப்படியான சில கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என எந்த பாராமீட்டரும், விதிகளும் அவரிடம் இல்லை. இரண்டாவது முறை நான் அவரைச் சந்தித்து அவரிடம் இரண்டு கதைக்கான ஐடியாவைச் சொன்னேன்.
அந்த இரண்டு ஐடியாவுமே அவருக்குப் பிடித்திருந்தது. அதில் ஒரு கதையில்தான் தற்போது கவனம் செலுத்தி வேலை செய்து வருகிறோம். இந்தக் கதையும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்'' எனக் கூறியிருக்கிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 'அமரன்' திரைப்படம் வெளியாகியிருந்தது.
'தங்கல்' பட இயக்குநரின் 'ராமாயணா' படத்தில் நடிப்பது பற்றி யஷ்!
இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், 'கே.ஜி.எஃப். சாப்டர் 1' என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் கன்னட சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து பான் இந்தியா ஸ்டாராகப் பிரபலமானவர் யஷ்.
அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'கே.ஜி.எஃப். சாப்டர் 2' சுமார் ரூ. 1,200 கோடி வசூல் செய்து, ரூ. 1,000+ கோடியை வசூல் செய்த முதல் கன்னட படம் என்ற சாதனை படைத்தது. அதோடு, உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் 'கே.ஜி.எஃப். சாப்டர் 2' இருக்கிறது.
இவ்விரு படங்களைத் தொடர்ந்து, உலக அளவில் அதிக வசூல் செய்த இந்தியப் படங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் 'தங்கல்' படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கத்தில் 'ராமாயணா' திரைப்படத்தில் யஷ் நடித்து வருகிறார்.
வால்மீகியின் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில், யஷ் உடன் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, சன்னி தியோல் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் இந்தப் படத்தின், முதல் பாகம் 2026லும், இரண்டாம் பாகம் 2027லும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ராமாயணா படத்தில், ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து யஷ் சுவாரஸ்யம் பகிர்ந்திருக்கிறார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் யஷ், 'இது மிகவும் ஈர்ப்புக்குரிய கதாபாத்திரம். வேறு எந்த காரணத்துக்காகவும் இதை நான் செய்திருக்க மாட்டேன். ஒருவேளை, ராமாயணத்தில் வேறு எதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்களா? என்று என்னிடம் நீங்கள் கேட்டால், எனக்கு அப்படி எதுவும் இல்லை.
ஒரு நடிகராக நடிப்பதற்கு மிகவும் சுவாரசியமான கதாபாத்திரம் ராவணன். இந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் வெவ்வேறு பக்கங்கள் மற்றும் நுணுக்கங்களை நான் விரும்புகிறேன். மேலும், இந்தக் கதாபாத்திரத்தை வித்தியாசமான முறையில் காண்பிக்க நிறைய ஸ்கோப் இருக்கிறது'' என்று கூறியிருக்கிறரார்.
ஹிந்தியில் ரீமேக் ஆகும் திகில் தமிழ் படம் ஜான்வி கபூர் ஹீரோயின்!
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல இந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர்.
ஹிந்தியில் மட்டும் நடித்து வந்த ஜான்விகபூர், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான 'தேவார' எனும் தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தார்.
2018இல் ஸ்ரீதேவி இறந்தவுடன், ஜான்வி கபூர் பல படங்களில் நடித்து வருகிறார். 'கோஸ்ட் ஸ்டோரீஸ்'கார்கில் கேள்' இந்த ஆண்டு வெளியான 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாகி' போன்ற படங்களில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ரசிகர்களிடமும் ஜான்விகபூரின் நடிப்பிற்கு பெரும் வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ்ப் படம் ஒன்றின் ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அறிவழகன் இயக்கத்தில் நடிகர்கள் ஆதி, நந்தா, சரண்யா மோகன், சிந்து மேனன் ஆகியோர் ஒன்று சேர்ந்து நடித்து 2009 இல் வெளியான படம் 'ஈரம்'. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்து இருந்தார். திகில் க்ரைம் படமாக வெளியாகி இருந்த இப்படம் அதிகமான ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில், ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.