'வெள்ளையனே வெளியேறு' என்ற ஆகஸ்ட் புரட்சி 1942 இல் தமிழ்நாட்டில் வெற்றி பெற ராணிப்பேட்டையில் ரகசியமாகத் தங்கியபடி, காமராஜர் வியூகம் வகுத்தார்.
அவரின் நினைவுகளைச் சுமந்து அவர் தங்கியிருந்த இல்லத்தைச் சீரமைத்து நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஆர்.காந்தியின் ஆலோசனையின்படி, ராணிப்பேட்டை நகர்மன்றத் தலைவர் சுஜாதா வினோத் முடிவெடுக்க, அந்த இல்லம் தற்போது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள இந்த இல்லத்தை நவம்பர் 3இல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
'ராணிப்பேட்டையில் காமராஜர் அப்படி என்ன செய்தார்?' என்பது குறித்து தியாகி கல்யாணராமனின் மூத்த மகள் தொண்ணூறு வயதான கே.ஜெ.பாரதி, ஏழுபத்து ஏழு வயதான கே.கே.ராஜாராமன் ஆகியோரிடம் பேசியபோது:
'நாட்டின் விடுதலைக்காக, மகாத்மா காந்தி பல்வேறு போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்து முன்னின்று நடத்தினார். இந்தப் போராட்டங்களில் ஆங்கிலேயரை அதிரவைத்தது 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம்தான்.
'செய் ! அல்லது செத்துமடி!' என்ற கனல் கக்கும் கோஷத்துடன் 1942 ஆகஸ்ட் மாதத்தில் மும்பையில் கூடியிருந்தவர்கள் மத்தியில் உணர்ச்சிப் பிழம்பாய் மகாத்மா காந்தி உரையாற்றினார்.
மாநாட்டின் தீர்மானங்களையும், செயல்பாடுகளையும் அறிந்த ஆங்கிலேயர் சினம் கொண்டனர். ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 5 மணிக்கெல்லாம் மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய், மகாதேவ் தேசாய், கவிக்குயில் சரோஜினி, அபுல் கலாம் ஆசாத், ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல் போன்ற முன்னணித் தலைவர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைக்கத் திட்டமிட்டிருந்தனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் அது நடக்குமோ, நடக்காதோ எனப் பலர் ஐயம் உற்றனர். திட்டமிட்டப்படி, புரட்சி வீராங்கனை அருணா ஆசப் அலி அஞ்சாமல் கொடியை ஏற்றி வைத்து, புரட்சியை நாடெங்கும் நடத்தும்படி வீர முழக்கம் செய்தார்.
மாநாட்டுக் கூட்டம் முடிந்து ரயில் ஏறி, அவரவர் ஊருக்குத் திரும்புவதற்குள்ளாகவே, பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து சென்ற சத்தியமூர்த்தி முதலானவரும் கைதாகினர்.
மாநாட்டு தீர்மான நகல்களோடு, காமராஜர் சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். அவரை கைது செய்ய போலீஸார் சென்ட்ரல் நிலையத்தில் காத்திருந்தனர். இதற்காக, அவர் கவலைப்படவில்லை. ஆனால் மாநாட்டு செய்திகளை மக்களிடம் சேர்க்க வேண்டிய கடமை இருந்ததால், சில நாள்கள் தலைமறைவாக இருந்து செயல்பட அவர் முடிவு செய்தார்.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்கி, சாலை மார்க்கமாக ராணிப்பேட்டையை அடைந்தார். அங்கு தனது நண்பரும் காங்கிரஸ் நிர்வாகியுமான கல்யாணராமனைச் சந்தித்தார்.
ஏ.பி.சுலைமான் என்ற தனது நண்பரை கல்யாணராமன் அணுகி, இன்றிரவு மட்டும் காமராஜர் தங்க இடம் வேண்டும் எனக் கேட்டார். அப்போது அவர், 'ஊருக்கு வெளியே எனது தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்க வையுங்கள். வருவது வரட்டும் பார்த்துக் கொள்வோம்' என்றார். அந்தத் தோட்டத்தில் இருந்த சிறிய கூரை வீட்டில் ரகசியமாக தங்கி அன்று இரவில் அங்கு இருவரும் நீண்ட ஆலோசனை செய்து, போராட்டத்துக்கான வியூகங்களை வகுத்து நகல்களைத் தயாரித்தனர்.
பின்னர், வேலூர், கண்ணமங்கலம் வழியாக காவல் துறையின் கண்காணிப்பிலிருந்து தப்பித்துச் சென்றனர். தற்போது அந்த இடம் ஏ.பி.சுலைமானின் பெயரில் ராணிப்பேட்டை நகராட்சி வளாகமாக உள்ளது.
அதைத் தொடர்ந்து தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களுக்குச் சென்று முக்கிய தலைவர்களைச் சந்தித்து, அந்தப் போராட்டத்தின் நோக்கத்தையும் தேவையையும் விளக்கி, தமிழ்நாட்டில் அதை வெற்றிகரமாக நடத்தச் செய்தார் காமராஜர்.
ஆகஸ்ட் 16இல் தன்னைக் கைது செய்யும்படி ஜெயராம ரெட்டியார் மூலம் உள்ளூர் போலீசாருக்குத் தகவல் தந்தார். எழுத்தச்சன் என்ற காவல் உதவி ஆய்வாளர் இந்தச் செய்தியைக் கேட்டு காமராஜரைப் பார்க்க உடனே வந்தார். அவர், 'உங்களைக் கைது செய்யும் உத்தரவுடன் வந்த போலீஸார் அரியலூர் சென்றுள்ளனர். அவர்கள் வரும் வரையில் இன்னும் சில நாள்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இங்கிருப்பதை யாரிடமும் மூச்சுவிட மாட்டேன்' என்றார்.
'செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் சிறப்புறச்செய்து முடித்து விட்டேன்.தலைவர்களும், தொண்டர்களும் சிறையில் வாடும்போது நான் மட்டும் சுகமாக ஓய்வெடுப்பதா ? சுதந்திரம் இல்லாத நாட்டில் சிறையில் இருப்பதுதான் என் போன்றவருக்கு ஏற்றதாகும். என் போன்றவர்களுக்கு வெளியே இருப்பதுதான் சித்திரவதை. என்னை உடனே கைது செய்து சிறைக்கு அனுப்புங்கள்' என்று காமராஜர் கேட்டுக் கொண்டார்.
உடனே காமராஜரை எழுத்தச்சன் என்ற காவல் உதவி ஆய்வாளர் கைது செய்து வேலூர் சிறைக்கு அனுப்பி வைத்தார். அவர் வேலூரிலிருந்து அமராவதி சிறைக்கும் சென்று தண்டனையை அனுபவித்தார்.
உடன் கைதான கல்யாணராமனும் 1944ம் ஆண்டு விடுதலையாகி வெளியே வந்தார். காமராசர் 1945ம் ஆண்டு விடுதலையாகி வெளியே வந்தார். கல்யாணராமன் கண்ணின் இமைப்போலக் காமராசரைக் காத்து அவருக்கு அடைக்கலம் தந்து ஆதரித்தார். இருவரும் தங்கியிருந்த இடம் தற்போது நினைவிடமாக மாறியுள்ளது.
இந்தியச் சிப்பாய் கலகம் என்றால் மங்கள பாண்டேவின் நினைவு வரும். மைசூரு யுத்தம் என்றால் ஹைதர் அலியும் திப்புச் சுல்தானும்தான் நினைவுக்கு வருவர். ஆகஸ்ட் புரட்சி என்றால் காமராஜர்கல்யாணராமன் நினைவு கட்டாயம் வரும். 'வெள்ளையனே வெளியேறு' என்னும் விடுதலைப் போர் வீர வரலாற்றில் இருவரும் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டனர்'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.