என் பேரனுக்கு வயது 16. ஒல்லியான தேகம். அசைவப் பிரியர். இரவில் அதிக நேரம் கண் விழித்து,காலையில் தாமதமாக எழுந்து கொள்கிறார். அவர் பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் பெறவும், சுறுசுறுப்புடன் இருக்கவும், உரிய நேரத்தில் உறங்கவும் என்ன செய்யவேண்டும்?
- தணிகை மணியன், அம்பத்தூர்.
அசைவ உணவு சாப்பிட்டும் உடல் பெருக்காமல் ஒல்லியான தேகம் என்பது ஆச்சர்யமே! உடலின் சாராம்சம், உடல் புஷ்டியைத் தரும் சதை மற்றும் கொழுப்புப் பகுதிகளுக்கு ஊட்டம் அளிக்கவில்லை என்பதேயே இது காட்டுகிறது. அவற்றில் பொதிந்துள்ள 'தாத்வக்னி' எனும் செரிமானப் பசியானது அவருக்கு வளர வேண்டிய அவசியமிருப்பதால், வயிற்றிலுள்ள பசித்தீயை ஆரம்பத்தில் சரியாக்குவதற்கான முயற்சிகள் தேவைப்படுகின்றன.
வில்வாதி லேகியம், அஷ்ட சூரணம், குமார்யாஸவம், பிப்பல்யாஸவம் போன்ற மருந்துகளை இதற்காகப் பயன்படுத்தலாம். இம்மருந்துகள், கூடவே நல்ல ஆரோக்கியமும், மனோதிடமும், உடல் வலுவும், சுறுசுறுப்பும் வளரச் செய்யும். இதன் மூலம் வலுவடைந்த வயிற்றுப் பசித்தீயானது, கனமான செரிமானத்தில் கடினமான உணவு வகைகளாலும் கேடுறாமல் செரிக்கச் செய்து, சதை மற்றும் கொழுப்புகளுக்கு வலுவூட்டுவதால் இங்கு அவை முக்கியத்துவம் பெறுகின்றன.
ஓங்கி வளர்ந்த பசித் தீயினால், அடுத்து வரக்கூடிய கல்யாணககிருதம் எனும் லேஹிய நெய் மருந்து, பிராம்ஹரஸாயனம் எனும் லேஹிய மருந்துகளால் உடல், மன புஷ்டியானது என்றென்றும் நிலைத்திருக்கும். மூளைக்குத் தேவையான பிராணவாயு கிடைக்கச் செய்ய உதவும் சங்க புஷ்பீ, பிரம்மீ, வசம்பு போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ள மருந்துகளால் அவர் பிளஸ் டூ படிப்பில் நல்ல கவனம் செலுத்தி, நிறைய மதிப்பெண்கள் பெற ஏதுவாயிருக்கும்.
கசகசா, ஜாதிக்காய், அதிரசம் போன்றவற்றை இரவில் உணவாகவும் மருந்தாகவும் அவர் பயன்படுத்த, உறக்கமானது விரைவில் தழுவக்கூடும். மூளையில் உள்ள உறக்கத்தினை ஏற்படச்செய்யும் சுரப்பிகளை இவை தூண்டி விடுவதால், உறக்கமானது விரைவிலேயே வரும். விடியற்
காலையில் இனிதே கரைந்து மூளையின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சுரப்பிகளையும் வேலை செய்ய அனுமதிக்கும். காலையில், காலைக்கடன் முடித்து, பல் துலக்கி, முகம் கழுவியதும், இரண்டு சொட்டுகள் அணு தைலம் மூக்கினில் விட்டு மெல்ல உறிஞ்சிக் காறித்துப்பிவிடுவதால், தூக்கத்தை ஏற்படுத்தும் 'தமஸ்' எனும் மனோ தோஷத்தை அகற்றி, அவை மேலும் சுடர்விட்டு எரியச் செய்யலாம். படிப்பில் ஆர்வம் ஏற்படுவதுடன், பாடத்தின் கருத்தையும் உள்வாங்கிச் செயல்படுத்தும் திறனையும் கூட்டும்.
உடல் சோர்வு, சோம்பல் நீங்க எதிலும் கவனம், ஆர்வம், கற்கக்கூடிய விஷயங்களை மூளையில் பதிவிறக்கம் செய்து, தேவைப்படும் தருணங்களில் வெளிப்படுத்தும் சாமர்த்தியத்தைத் தரக்கூடிய ஆயுர்வேத மருந்துகளாகிய பிராம்மீ கிருதம், மஹாகல்யாணக கிருதம், சாரஸ்வத கிருதம் போன்ற நெய் மருந்துகள், சாரஸ்வத சூரணம், சியவனப்ராசம் லேஹியம், ப்ரம்மீ திராக்ஷாதி கஷாயம், மானஸமித்ரம், குளிகை போன்றவை பயன்படுத்தத் தக்கவை.
பால், பாதாம், நெய் இரவில் பயன்படுத்தலாம். பனங்கற்கண்டு, பால், மாலையில் பச்சைப்பயறு சுண்டல், சத்தான பசு நெய் சேர்த்த சூடான பருப்புச் சாதம் பயன்படுத்தலாம். தவிர்க்க வேண்டியவை: அதிக மொபைல் போன் பயன்பாடு, குளிர்பானம், பாக்கெட் உணவுகள், ஜங்க் வகை உணவுகள்.
மாலை நேரத்தில் நடைப் பயிற்சி, விளையாட்டில் கவனம் போன்றவை நல்ல நினைவாற்றலையும் புத்திசாலித்தனத்தையும் உயர்வடையச் செய்யும். மெலட்டோனின் எனும் உறக்கம் - எழுப்புதல் ஆகிய வேலையைச் செய்யும் ஹார்மோன் சீராகும். மூளையின் செயல் திறனைக் கூட்டும் 'சிரோதாரா' எனும் தலையின் நெற்றியில் வழிந்தோடச் செய்யும் ஆயுர்வேத சிகிச்சை பள்ளி மாணவ - மாணவியருக்கு அவசியம் செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.