கண்டது
(தென்காசி பாவூர்சத்திரம் மெயின் ரோட்டில் ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்...)
'உயிர்காக்கும் பணியிலிருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் அருந்தும் தேநீருக்குப் பணம் செலுத்தத் தேவையில்லை. பச்சிளம் குழந்தை பசியாற பாட்டிலில் வாங்கும் புட்டிப்பால் இலவசம்!''
மு.உமாமகேஸ்வரி, செங்கோட்டை.
(நாகர்கோவிலில் உள்ள ரெடிமேட் துணிக்கடைகளின் பெயர்கள்)
'மைனி, மச்சான், வாங்க மாப்ளே...''
கே.எல்.புனிதவதி, கோவை.
(ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சியின் பெயர்)
ஸ்ரீராமன்
எஸ்.மாணிக்கம், அரையபுரம்.
கேட்டது
(செங்கோட்டை அம்மன் சந்நிதி தெருவில் இரு சிறுவர்கள்)
'எங்கப்பா இருபது வருஷமா டிரைவரா இருக்காரு... இதுவரை ஒரு ஆக்ஸிடண்ட்கூடப் பண்ணலை...''
'அப்படியா! என்ன வண்டி ஓட்டுறாரு?''
'ரோடு ரோலர்!''
மு.முத்துராம் சுந்தர், செங்கோட்டை.
(மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் இரு பெண்கள்...)
'தீபாவளி வருது... குப்பைக்கும் செலவு பண்ணணும்; தொப்பைக்கும் செலவு பண்ணணும்!''
' என்னடிச் சொல்றே?''
' பட்டாசு வாங்கணும்... பலகாரம் செய்ய பொருளும் வாங்கணும்னு சொல்றேன்!''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
(கிருஷ்ணாபுரம் கலைக்கோயில் நகரில் ஒரு வீட்டின் அருகில் பாட்டியும் இளம்பெண்ணும்...)
'ரேஷன் கடைக்கு தனியா போறீயே... பேச்சுத் துணைக்கு யாரையாவது அழைச்சுக்கிட்டுப் போகலாமே?''
'எதுக்கு? அதான், மொபைலை எடுத்துட்டுப் போறேனே... பாட்டி!''
கோ.வினோத், நெல்லை.
யோசிக்கிறாங்கப்பா!
வெற்றி இலக்கை அடைய நம்பிக்கையுடன் உறுதியான உழைப்பும் அவசியம்.
மஞ்சுதேவன், பெங்களூரு.
மைக்ரோ கதை
நிலச்சொத்து வழக்கு விஷயமாக சொந்த ஊருக்குப் போயிருந்தார் சொக்கலிங்கம். இரண்டு மாதம் அங்கேயே தங்கவேண்டியதாகிவிட்டது.
வீடு திரும்பியபோது புழக்கடைப் பக்கம் விட்டுப்போயிருந்த சைக்கிள் மீது பூசணிக் கொடி படர்ந்து சைக்கிளை முழுவதுமாக மறைத்து விட்டிருந்ததைக் கண்டார்.
சாதாரண முல்லைக் கொடிக்காகத் தன்தேரையே தாரை வார்த்த பாரியின்நினைவு வந்தது.
புதிய சைக்கிளை வாங்கப் புறப்பட்டார் சொக்கலிங்கம்.
மலர்மதி, சென்னை.
எஸ்எம்எஸ்
தயங்கி நிற்பவர்கள் ஒருபோதும் தங்களுக்குத் தகுதியான இடத்திற்குச் சென்று சேர்வதே இல்லை.
ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.
அப்படீங்களா!
பல்வேறு நாடுகளில் உள்ள வாட்ஸ் ஆஃப் பயன்பாட்டாளர்கள் மாற்றுமொழியில் வரும் தகவல்களைப் படிப்பதில் நீண்ட காலமாகத் தடையாக உள்ள மொழி பிரச்னைக்கு மெட்டா நிறுவனம் தீர்வு கண்டுள்ளது. புதிய சேவையாக மொழிபெயர்ப்பை வாட்ஸ் ஆஃப் அறிமுகம் செய்துள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள பல கோடி பேருக்கு பயன்தரும்.
மாற்றுமொழியில் வரும் தகவல்களை தேர்வு செய்து சில நொடிகள் வைத்திருந்தால்போதும். அதில், மொழி
பெயர்ப்புக்கான தேர்வு செய்யும் சேவை வெளிப்படும்.
அதிலிருந்து ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்சுகீஸ், ரஷிய, அரபி ஆகிய மொழிகளில் தற்போது ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் தகவல்களை மொழிபெயர்க்கலாம்.
ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு 19 மொழிகளில் மொழி பெயர்த்துக் கொள்ளும் வசதியும் அறிமுகமாகி உள்ளது. வரும் நாள்களில் மேலும் பல மொழிகளும் இணைக்கப்படும்.
மொழிபெயர்க்கப்படும் தகவல்களை சேமிக்கலாம். அது பாதுகாப்பானதாகவும் இருக்கும் என வாட்ஸ் ஆஃப் உறுதி அளித்துள்ளது.
இந்தச் சேவையை குழு சாட், தனி நபர் சாட், சானல்களில் பயன்படுத்தலாம்.
அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.