தினமணி கதிர்

பேல்பூரி

தடுமாறும்போது தோள் கொடுப்பவனும், தடம் மாறும்போது கண்டிப்பவனுமே உண்மையான நண்பன்.

இணையதளச் செய்திப் பிரிவு

கண்டது

(பூந்தமல்லியில் ஆட்டோ ஒன்றின் பின்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம்)

தடுமாறும்போது தோள் கொடுப்பவனும், தடம் மாறும்போது கண்டிப்பவனுமே உண்மையான நண்பன்.

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

(மயிலாடுதுறையில் அரசுப்பள்ளி ஒன்றில் கரும்பலகையில் கண்ட வாசகம்)

தோழா! என்னைத் தொலைத்துவிடாதே! ஆயுளுக்கும் கிடைக்கமாட்டேன்- கனிவுடன் சொன்னது காலம்!

-சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

(சென்னையில் ஒரு கல்லூரி வாசலில் பார்த்தது...)

பெயில் - தோல்வி வாசகமா? இல்லை, கற்றுக்கொள்வதற்கு முதல் வாய்ப்பு.

-கு.கோப்பெருந்தேவி, சென்னை.

கேட்டது

(திருச்சியில் பூங்கா ஒன்றில் இருவர்...)

'என்னது... ஒரு வாரத்துக்கு வரமாட்டீங்களா? ஊருக்குப் போறீங்களா?''

'ஊஹூம். பசங்களுக்கு காலாண்டு லீவ் விட்டாச்சே! அவங்களை யார் மேய்க்கிறது?''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(சென்னை மேற்கு முகப்பேர் இயற்கைப்பூங்காவில் இரு இளைஞர்கள்...)

'என்னப்பா! செல்போனை நோண்டிக்கிட்டே வாக்கிங் போறே?''

'இது மொபைல் யோகா. நிறையப்பேர் இப்படித்தான் போறாங்க!''

-சி.சந்திரசேகர், மேற்கு முகப்பேர்.

(பேருந்து நிலையத்தில் இருவர்...)

'ஏங்க நல்லா இருக்கீங்களா?''

'நீங்க யாரு... தெரியலையே?''

'வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க?''

'அட ! யாருப்பா நீ ?''

'குழந்தைங்க ஸ்கூல் முடிச்சிட்டாங்களா?''

'யோவ்! யாருய்யா நீ ?''

'சரிங்க, பஸ் வருது... வரட்டா? என்ன... எனக்கும் உங்களைச் சுத்தமா தெரியாது. பஸ் லேட்டாச்சா... அதுவரை டைம்பாஸூக்கு ஏதாவது பேசலாமேன்னுதான்!''

'உன் போதைக்கு நான்தான் ஊறுகாயாடா!'' (போனபிறகு கண்டபடி திட்டுகிறார்)

-யு.பைஸ் அஹமத், நாமக்கல்.

யோசிக்கிறாங்கப்பா!

பிறருடைய பலவீனத்தை அடையாளம் கண்டுகொள்கிறவனே பெரிய மனிதனாக வாழ்க்கை நடத்துகிறான்.

-ஏ.ஷேக் பிலால், நெல்லை.

மைக்ரோ கதை

(இரவு ஏழு மணி)

கணவன்: இன்னைக்கு என்ன டின்னர்?

மனைவி: மதியம் சோறு மிச்சமாயிடுச்சி. முட்டையைப் பொரிச்சு மிளகு கலந்து வச்சிருக்கேன்.

கணவன்: எனக்கு இப்ப பசியில்லை!

(ஒரு மணி நேரம் கழிந்தது. மணி எட்டு)

கணவன்: டின்னர் ரெடியாயிடுச்சா?

மனைவி: ஆயிடுச்சிங்க!

கணவன்: என்ன டின்னர்?

மனைவி: பெப்பர் வித் ஹாட் எக் மிக்ஸ்டு ரைஸ்.

கணவன்: ஹையா... சூப்பர் டின்னர்!

(கருத்து: பழைய சோறுன்னாலும் பேரு புதுசா இருக்கணும்.)

-அ.கௌரி சங்கர், வேளச்சேரி.

எஸ்.எம்.எஸ்.

அனைத்தையும் மன்னித்துவிடு. ஆனால் எதையும் மறந்துவிடாதே!

-த.நாகராஜன், சிவகாசி.

அப்படீங்களா!

கணினிகளின் பயன்பாட்டு மென்பொருளாக நீண்ட காலமாக மைக்ரோ சாஃப்டின் வின்டோஸ் இருந்து வருகிறது.

இதை விஞ்ச கூகுள் நிறுவனம் கொண்டு வந்த க்ரோம் ஓ.எஸ். பயன்பாடு வெற்றி பெறவில்லை.

இதனால், அறிதிறன் பேசி சந்தையில் தளபதியாக விளங்கும் ஆன்ட்ராய்டை கணினி மற்றும் மடிக்கணினியின் பயன்பாட்டு மென்பொருளாகக் கொண்டு வரும் முயற்சியில் கூகுள் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன் மூலம் கணினியையும், அறிதிறன்பேசிகளையும் ஒன்றிணைப்பது எளிதாகும். கணினியின் பயன்பாட்டு முறையும் கைப்பேசி போன்று எளிமையாக இருக்கும் என்று கூகுள் கருதுகிறது.

எனினும், கணினியின் முழுப் பயன்பாட்டுக்கு க்ரோம் ஓ.எஸ்.ஸூடன் சேர்ந்து ஆன்ட்ராய்டு கொண்டு வரப்படுகிறதா அல்லது ஆன்ட்ராய்ட் மட்டும் தனி மென்பொருளாகக் கொண்டு வரப்படுகிறதா என்பதை கூகுள் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

எனினும், கணினிக்கு ஆன்ட்ராய்ட் வருவதை கூகுள் உறுதி செய்துள்ளது. தற்போது கூகுள் தேடலில் ஏ.ஐ. ஜெமினியின் அறிமுகம் கூடுதல் பயன்பாட்டாளர்களை உருவாக்கி உள்ளது. இதேபோல் ஆன்ட்ராய்ட் கணினி பயன்பாட்டிலும் ஏ.ஐ. உதவியுடன் புதிய தோற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

SCROLL FOR NEXT