தினமணி கதிர்

அப்பா பிள்ளை

நிற்காமல் அழைக்கும் காலிங் பெல்லின் சப்தம்.

தி.சந்தான கிருஷ்ணன்

நிற்காமல் அழைக்கும் காலிங் பெல்லின் சப்தம்.

வேணுதான் இப்படி விடாமல் அழுத்துவான்.

கள்ளிச் சொட்டாய் இறங்கும் காப்பி டிகாக்ஷனின் வாசனை நாசியை முற்றுகையிட, புடவைத் தலைப்பில் எனது கையைத் துடைத்தபடியே எட்டிப் பார்த்தேன்.

வேணு நிற்பது வாசல் கேட்டுக்கு அந்தப் பக்கம் தெரிந்தது. வாசல் கேட் ஆறடி உயரம். வேணுவின் உயரமும் அதுவே.

'இருடா!'' என்றபடி நான் வாசலை நெருங்குவதற்குள், 'ஏய் விஜயா, சீக்கிரம் வந்து கதவைத் திறக்க மாட்டியா?'' என்ற என்னவரின் குரல் லவுட் ஸ்பீக்கரைவிட அதிகச் சப்தத்துடன் கேட்டது.

வேகமாகச் சென்று வாசற்கதவின் உட்புறத் தாழ்ப்பாளை நீக்கினேன்.

வேணுவும், அவன் அப்பாவும் ஆளுக்கொரு சூட்கேசை வைத்துக் கொண்டு நின்றிருக்க, 'இன்னொரு தபா தப்பித் தவறிக் கூட என்னைக் கூப்டுடாதீங்க மவராசா!'' என்று முறைத்தபடியே கால்டாக்சி டிரைவர் கிளம்பிக் கொண்டிருந்தார்.

'ஏன், என்ன ஆச்சு?''

'இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எவ்வளவு கொடுத்தாலும் போதாது!'' என்று தன்னிலை விளக்கம் கொடுத்த என்னவரை இடைமறித்தான் வேணு.

'நீயே கேளும்மா. அந்த கால்டாக்சி டிரைவர் 'மேலே ஏதாவது போட்டுக் கொடுங்க சார்'னு கேட்டார்மா. இஷ்டம் இருந்தா ஒரு ஐம்பதோ நூறோ கொடுக்கணும். இல்லை, 'எதுவும் கொடுக்க முடியாது'ன்னு சொல்லிடணும். ஆனால் இந்த அப்பா அஞ்சு ரூபா காயினைக் கொடுக்கிறார்மா. அதான் டிரைவருக்குக் கோபம். 'என்ன சார், ஏர்போர்ட் சவாரியாச்சேன்னு பார்த்தேன். இப்பிடி கஞ்சப்பிசுநாரியா இருக்கீங்களே'ன்னு அப்பாகிட்ட கத்திட்டுப் போறார். என் மானமே போகுதும்மா...''

'ஆமாண்டா மகாபிரபு, உன்னைக் கொடுக்கச் சொன்னால் நீ பாட்டுக்கு ஐந்நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டிடுவே. நாமதான் வர்ற வழியிலே அந்த ஆளுக்கும் காப்பி வாங்கிக் கொடுத்தோமே. அந்த இருபத்தைஞ்சு ரூபாய் என்ன கணக்கு? வழிவிட்டு நகர்ந்து நில்லுடா, நான் போய்க் குளிக்கணும்'' என்று சத்தம் போட்டபடி சடக்கென்று வீட்டினுள்ளே நுழைந்தார்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படித்தான்.

வேணுவும் அவன் அப்பாவும் சதா முறைத்துக் கொண்டே இருப்பதைப் பார்த்துப் பார்த்து எனக்குப் பழகிப் போய்விட்டது.

அப்பாவும் பையனும் ஐந்து நிமிஷத்துக்கு மேல் ஒற்றுமையாக இருந்தால் அது உலகமகா அதிசயம்.

அதேசமயம் அப்பா இல்லாமல் வேணுவுக்குப் பொழுது போகாது. வேணு இல்லாவிட்டால் அப்பாவுக்குக் கையொடிந்தது போல இருக்கும்.

முந்தாநாள் போனில் பேசும்பொழுது கூட, 'அம்மா, மறக்காமல் அப்பாவை ஏர்போர்ட்டுக்கு வந்துடச் சொல்லும்மா'' என்றுதான் சொன்னானே தவிர, மறந்தும் கூட 'நீயும் ஏர்போர்ட்டுக்கு வாம்மா!'' என்று என்னிடம் சொல்லவில்லை.

'உள்ளே வாடா வேணு, எல்லாப் பஞ்சாயத்தையும் வாசலிலேயே வெச்சுக்கணுமா என்ன?'' என்று நான் கூறவும், அங்கே ஓர் இடைக்கால அமைதி ஒப்பந்தம் உருவானது.

'ஏம்மா, இந்த வாஷ்பேஸினை மாத்துங்கன்னு ஆறு மாசம் முன்னாடியே சொன்னேன். இன்னுமா மாத்தாமல் இருக்கீங்க?''-புழக்கடையில் வேணு கத்துவது சமையலறையில் கேட்டது.

'டேய், இப்பதாண்டா ஏர்போர்ட்லேருந்து நேரா வந்து வீட்டுக்குள்ளே நுழைஞ்சிருக்கே. முதல்ல குளிச்சுட்டு டிபன் சாப்பிடு. அப்புறம் வெச்சிக்கலாம் உன் பிலாக்கணத்தை''ன்னு அவர் சொல்றது அதைவிடச் சத்தமாகக் கேட்கிறது.

வெளிநாட்டில் வேலைப் பார்க்கப் போன ஒரே மகன் வேணு லீவுல வந்திறங்கிய முதல் நாளே கச்சேரி களைகட்டிவிட்டது.

இந்த வேணு திரும்பவும் சுவீடனுக்குக் கிளம்புற வரைக்கும் ரெண்டு வாரத்துல இன்னும் என்னென்னல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ? நினைக்கவே எனக்குப் பயமாக இருக்கு.

நினைக்கவே கர்ப்பம் கலங்குகிறதுன்னு என்னால் சொல்ல முடியாது. வேணு பிறந்த ரெண்டாவது வருஷமே ஏதோ கோளாறு என்று என்னோட கர்ப்பப்பையை ஆபரேஷன் பண்ணி எடுத்தாகிவிட்டது. வேணுதான் எங்களுடைய ஒரே வாரிசுன்னு ஆகிப்போயிடுச்சு.

ஒருவேளை இந்த வேணுவுக்கு ஒரு தம்பியோ, தங்கையோ பிறந்திருந்தா இப்படி தன் அப்பாவோடு மல்லுக்கட்டாமல் அந்தத் தம்பி தங்கையோடு சண்டை போட்டுக்கிட்டு இருந்திருப்பானோ என்னவோ யார் கண்டது?

இது இது இப்பிடித்தான் நடக்கணும்னு தெய்வம் எழுதி வெச்சதை யாரால மாற்ற முடியும்?

'பல் தேய்ச்சுட்டியா வேணு, இதோ ஒருவாய் காபி குடிச்சு பிறகு குளிக்கலாமே?'' என்று கையில் காபித் தம்ளருடன் வந்த என்னை மடக்கிய வேணுவின் அப்பா, 'அவன் கிடக்கிறான். உன் பிள்ளை வந்த ஜோர்ல எனக்கு செகண்டு டோஸ் காபி கொடுக்க மறந்துட்டியே!'' என்று தம்ளரைப் பிடுங்கிக் கொண்டார்.

டிபனையாவது ரெடி பண்ணலாம் என்று கிச்சனுக்குள் நுழைந்தேன்.

இன்னும் இரண்டுவார கால காலத்தை எப்படித்தான் ஓட்டப் போகிறேனோ தெரியவில்லை.

ஒவ்வொரு வீட்டிலும் அண்ணா - தம்பி, அக்கா - தம்பி இதுங்கதான் டாம் அண்டு ஜெர்ரி மாதிரி சண்டை போட்டுக்கொண்டு இருக்கும். இந்த வீட்டுல என்னடான்னா அப்பாவும் பையனும் இப்படி இருக்குதுங்க.

இப்போதுதான் என்று இல்லை. எங்கள் வேணு ஸ்கூல் போகிற நாளிலிருந்தே இப்படித்தான்.

காலை நேரம் மணி எட்டரையை நெருங்கிக்கொண்டிருக்கும்.

வேணு தன்னுடைய யூனிஃபார்மைப் போட்டுக் கொண்டு புத்தகப் பையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு, 'வாசலில் ஸ்கூல் வேன் வந்துவிட்டதா?'' என்று நிமிடத்துக்கு ஒருமுறை வாசலை எட்டிப்பார்த்துக்கொண்டு தவித்தபடி அவ்வப்பொழுது 'மம்மி'' என்று குரல் கொடுக்க, 'சித்த இருங்க. குழந்தைக்கு இன்னிக்குப் பரீட்சை. இதோ அவனுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெடி பண்ணிட்டு உங்களுக்கு டிபன் தர்றேன்'' என்று சொன்னால் இவர் கேட்கவே மாட்டார்.

'இப்ப என்ன அவனுக்கு அவசரம்? ஸ்கூல் வேன் வர இன்னும் கால் மணி நேரம் இருக்குல்ல? முதல்ல எனக்கு டிபனைக் கொடு!'' என்று சின்னப்பசங்கள் மாதிரி தன் பையனுடன் மல்லுக்கு நிற்பார்.

'அம்மா, இப்ப என் லஞ்ச் பாக்சை ரெடி பண்றீயா இல்லையா?'' என்று இன்னொரு பக்கம் வேணு நாலைந்து முறை குரல் கொடுப்பான்.

இரண்டு பேரையும் அனுப்பிவிட்டுக் கதவை உட்

புறமாகத் தாழிடும் தருணத்தில் தலைவலி மண்டையைப் பிளக்கும்.

ரெண்டே ரெண்டு இட்லியை விண்டு போட்டுக்கொண்ட பிறகு ரெஸ்ட் எடுத்துக்கலாமே என்று மனசு கேட்கும்.

அதெல்லாம் வேண்டாம். சின்னதாய் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு அந்த இட்லியை முழுங்கலாம் என்று உடம்பு கெஞ்சும்.

உடம்பு சொல்வதைத்தான் கேட்கத் தோன்றும்.

பத்தே நிமிஷத்தில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தூங்கியவள் எழுந்திருக்கும்பொழுது மதியம் மணி ஒன்றைத் தாண்டியிருக்கும்.

பள்ளிக்கூடம், ஆபீஸ் எதுவுமில்லாத ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பா, பிள்ளை இரண்டு பேரின் ஆர்ப்பாட்டமும் வேற லெவலில் இருக்கும்.

டிபனோ, லஞ்சோ முடித்த பிறகு இரண்டு பேரும் கேரம், செஸ் ஆடத் தொடங்கினால், அடுத்த ஐந்தாவது நிமிஷம், 'நோ, இதை நான் ஒத்துக்க மாட்டேன்... நீ போங்கு ஆட்டம் ஆடறப்பா..'' என்று வேணு குரல் எழுப்ப, இவரோ அதைவிடப் பெரிய குரலில் 'போடா கழுதை! நீதாண்டா போங்கு. ஏதோ பொழுது போகலையேன்னு உன்ன மாதிரி சின்னப்பையன் கூட ஆடவந்தேன் பாரு!'' என்று சப்தம் போட்டபடியே போர்டைக் கவிழ்த்துவிட்டு எழுந்து கொள்வார்.

காயின்கள் நாலா பக்கமும் சிதறும்.

'எல்லாத்தையும் ஒழுங்கா எடுத்து வைடா!'' என்று இவர் குரல் கொடுக்க, 'போப்பா, கலைச்சது நீதானே, நீதான் எடுத்து வைக்கணும்'' என்று வேணு முறுக்கிக் கொள்வான்.

பஞ்சாயத்து செய்யப்போகும் என்னிடம், 'அந்தாளுக்கு காபி, டிபன், சாப்பாடு எதுவும் கொடுக்காதேம்மா!'' என்று மறியல் செய்வான் வேணு.

அபூர்வமாக இரண்டு பேருக்கும் ஒற்றுமை வந்து ஒன்றாகச் சேர்ந்து டி.வி.யில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறது, தியேட்டரில் ரஜினி படத்துக்குச் செல்வது எல்லாவற்றையும் பார்க்கின்ற அந்தக் கணத்தில் என் கண்ணே பட்டுவிடும்போல் இருக்கும்.

எல்லாம் கொஞ்ச நேரம்தான். சினிமா முடிந்து வீட்டுக்குள்ள நுழையும்போதே சண்டையும் கிளம்பிடும்.

'ஏம்பா... இந்த ரஜினி ஃபைட் நம்பும்படியாவா இருக்கு?''

'ஆமாண்டா, உங்களுக்கெல்லாம் ஜாக்கிசான் பத்துப் பேரை அடிச்சா அதுதான் நம்பும்படி இருக்கும்.''

எது எப்படி ஆனாலும், ராத்திரிக்குள் இரண்டு பேருக்கும் ஒருவழியாகச் சமாதானமாகி, ஹால் நடுவில் சீலிங் ஃபேனுக்கு நேர் கீழே ஜமக்காளமும் தலையணையும் போட்டுக் கொண்டு இரண்டு டிக்கெட்டு

களும் படுத்துக் கொண்டுவிடும். 'நிம்மதி' என்று சொல்லிக் கொண்டு நான் பெட்ரூம் கட்டிலில் படுத்துக் கொண்டு விடுவேன்.

பாதி ராத்திரியிலோ, விடியற்காலையிலோ பாத்ரூம் போக எழுந்தால் அப்பாவின் கழுத்தில் ஒரு கையும், வயிற்றின் மீது ஒரு காலுமாக வேணு அசந்து தூங்கிக் கொண்டிருப்பான். 'அப்பா விடுகிற குறட்டைச் சத்தத்தில் எப்படித்தான் இந்தப் பையன் தூங்குகிறதோ?' என்று ஆச்சரியப்பட்டபடியே நான் மறுபடியும் பெட்ரூமுக்குள் செல்வேன்.

பிளஸ் டூ வரைக்கும் இப்படி அப்பாவின் மேல் கால் போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த வேணு முதன்முதலாக திருச்சி என்.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படிக்கச் சென்றது, அதன் பிறகு சென்னை ஐ.ஐ.டி.யில் எம்டெக் படித்து முடித்தது, கேம்பஸில் மிகப் பெரிய பன்னாட்டு கம்பெனியில் வேலை கிடைத்தது, இரண்டே வருடத்தில் புரொமோஷனாகி சுவீடன் நாட்டுக் கிளைக்கு மாற்றாலாகிக் கிளம்பிப் போனது எல்லாமே ஒரு கனவு மாதிரி இருக்கிறது.

வேணு என்னவோ சமர்த்துப் பையன்தான். எங்களிடம் அவன் வைத்திருக்கும் பாசத்துக்கும் குறைவில்லை. நாள் தவறாமல் வீடியோ காலில் பேசுகிறான்.

'அம்மா, இப்போ இங்க விண்டர் சீஸன்மா, உங்களாலே இந்த ஊர் குளிரெல்லாம் தாங்க முடியாது. சம்மர்ல ஓரளவு சமாளிக்கலாம். உன்னையும் அப்பாவையும் வர்ற சம்மருக்கு இங்கே அழைச்சுக்கிட்டு வர்றேன்மா'' என்று ஆசை ஆசையாகச் சொல்வான்.

அதனால் என்ன, சுவீடனுக்குச் சென்ற ஆறாவது மாதம் கொஞ்சம் லீவு எடுத்துக்கொண்டு வந்து, இதோ வீட்டில் நுழைந்த மறுகணமே அப்பாவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறான்.

சுவீடனிலிருந்து திரும்பி வந்த பிறகு ஜெட்லாக் அது இதுவென்று ஒரு நான்கு நாட்கள் சாப்பிட்டுத் தூங்கியே கழித்த வேணு ஐந்தாவது நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்.

'ஏம்மா, அந்த பாத்ரூம்ல ஒரு ஹீட்டர் ஃபிட் பண்ண மாட்டீங்களா? இன்னும் ஏம்மா இப்படி கேஸ் அடுப்புல வெந்நீர் வெக்கிறீங்க? ஏன், பேசாமல் பழையபடி கட்டை அடுப்பையும் வெந்நீர்த் தவலையையும் வெச்சுக்கிட்டு மாரடிக்கவேண்டியதுதானே?''

குரலில் கொஞ்சம் எகத்தாளம் எட்டிப் பார்த்தது.

'கண்ணா, சீக்கிரமா தலையைத் துவட்டிக்கிட்டு டிபன் சாப்பிட வாப்பா! நீ என்னென்ன விஷயங்களையெல்லாம் மாத்தணும்னு நினைக்கறியோ எல்லாத்தையும் இந்த வாரத்துலேயே செஞ்சு முடிச்சிடலாம். எல்லா பஞ்சாயத்தையும் அப்புறமா வெச்சுக்கலாம்...'' என்று அந்த வேளைக்கு அவனுடைய கவனத்தைத் திசை திருப்பினேன்.

வேணுவின் அப்பாவுக்கு வாட்டர் ஹீட்டர் என்றாலே பயம். 'ஹீட்டரில் கரண்ட் லீக் ஆகி ஷாக் அடித்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை' என்பது அவருடைய உறுதியான அபிப்பிராயம். இதைச் சொன்னால் வேணுவுக்கு விர்ரென்று கோபம் ஏறுகிறது.

'இந்த இரண்டு பேரில் யார் சொல்வதை நான் கேட்பது? வேணு சுவீடனுக்குக் கிளம்பிச் செல்லும் வரையில் மறுபடியும் இந்தப் பிரச்னை தலையெடுக்காமல் இருந்தால் நல்லது' என்று தோன்றுகின்றது.

கூடத்தில், தடதடக்கும் மின்விசிறியின் கீழ் இலை போட்டுக்கொண்டு உட்கார்ந்த அப்பா, மகன் இருவருக்கும் இலையில் இட்லியை வைத்துவிட்டு, ஸ்வீட், வடை, சட்னி, சாம்பார் வகையறாக்களை எடுத்துவருவதற்காகச் சமையலறைக்குச் சென்று திரும்புவதற்குள் அடுத்த பஞ்சாயத்து தொடங்கியிருந்தது.

'ஏம்பா, ஒரு டைனிங் டேபிள் வாங்கிப் போடணும்னு முன்னமே சொல்லியிருந்தேன். வயசான காலத்துல நீங்களும் அம்மாவும் இப்படிக் கஷ்டப்பட்டுத் தரையில உட்கார்ந்துதான் சாப்பிடணுமா?''

'கண்ணா, உங்கப்பாவுக்கு அதெல்லாம் சரிப்படாதுடா...!''

'ஹூம், இந்த அப்பாவுக்கு எதுதான் சரிப்படும்? இந்த லட்சணத்துல உங்க ரெண்டு பேரையும் என்னோடு ஃபாரின் அழைச்சுக்கிட்டுப் போகணும்னு வேற ஆசைப்படறேன் பாருங்க. என் புத்திய...''

'அதெல்லாம் விடுடா கண்ணா, மதியம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணட்டும், அதை சொல்லிட்டு நீ ரெஸ்ட் எடுக்கப் போயேண்டா!'' என்று மறுபடியும் அவனை திசை திருப்பினேன்.

சுவீடனிலிருந்து வந்த ஆறாவது நாள்தான் வேணுவுக்குத் தன் சூட்கேஸ்களின் ஞாபகம் வந்தது. அதுவரையில், எலி வாகனத்தின் மீது பிள்ளையார் உட்கார்ந்திருப்பதைப் போன்று குட்டிக் குட்டிச் சக்கரங்களின் மீது ஏறிநிற்கும் பளிச் கலர் அமெரிக்கன் டூரிஸ்டர் சூட்கேஸ்கள் இரண்டும் எங்கள் வீட்டு ஹாலின் ஒரு மூலையில் ஏனென்று கேட்க ஆளில்லாமல் நின்றுகொண்டிருந்தன. அவற்றின் பிளாஸ்டிக் கைப்பிடிகளில் 'லுஃப்தான்ஸா' என்று அச்சிட்ட நீளமான பிளாஸ்டிக் ரசீதுகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.

'என்னடா, வர வர ஏர்போர்ட்டுல சூட்கேஸூக்கெல்லாம் கூட கோவணம் கட்டி விடறாங்களா என்ன?'' என்று என்னவர் நக்கலடிக்க, 'அண்டர்வேரையே பார்க்காத நாட்டுப்புறம்'' என்று முணுமுணுத்தபடியே வந்த வேணு அவற்றிலிருந்து உதிர்ந்த துணிகளுடன் சுவீடன் நாட்டு பிரெட், ஜாம், சாக்லேட் எல்லாவற்றையும் எடுத்துத் தரையில் பரப்பினான்.

'இந்தாம்மா ப்ளூ பெர்ரி ஜாம். வித்தியாசமான டேஸ்ட்டு. உனக்கு ரொம்பப் பிடிக்கும்மா'' என்று எடுத்து நீட்ட, எங்கிருந்தோ வந்த என்னவர், என்னடா வேணு, வெளிநாட்ல இப்பல்லாம் மரவட்டையை ஊறவெச்சு ஜாம் பண்றாங்களா என்ன?'' என்று கிண்டலடிக்க, கோபத்தில் முகம் சிவந்த வேணு தன்னுடைய சூட்கேஸ்களைப் பட்டென்று மூடினான்.

நாள்கள் ஒலிம்பிக் மாதிரி ஓடினால் நாம் என்ன செய்ய முடியும்? இதோ நேற்றுதான் வேணு சுவீடனிலிருந்து வந்திறங்கிய மாதிரி இருக்கிறது. அதற்குள் வேணு சுவீடன் திரும்பவேண்டிய நாள் நெருங்க ஆரம்பித்துவிட்டது.

சுவீடனிலிருந்து வந்த சமயத்தில் ஏற்பட்ட ஜெட்லாக் பிரச்னை தீர்ந்த பிறகு கிடைத்த நேரங்களில் வேணு தன் பழைய சிநேகிதர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுடன் ஊர் சுற்றிவிட்டு வந்து அவ்வப்பொழுது அற்பக் காரணங்களுக்காக அப்பாவுடன் சண்டை போட்டுவிட்டுத் தூங்கச் செல்வான். நடுவில் ஒருநாள் கார் வைத்துக்கொண்டு குலதெய்வக் கோயிலுக்குப் போய் பொங்கல் வைத்துவிட்டு வந்தோம்.

சுமார் பத்துநாட்களுக்குப் பிறகு திடீரென்று விழித்துக்கொண்டவன், 'அம்மா, இன்னும் நாலு நாள்ல நான் கிளம்பணும்மா. அயர்ன் பண்ணின துணியெல்லாம் எடுத்துக் கொடும்மா. அப்படியே எதிர்வீட்டுச் சமையல் மாமிக்கிட்ட சொல்லி ஊறுகாய், வத்தக்குழம்பு பேஸ்ட் எல்லாம் பார்சல் வாங்கி வந்து அதையும் பேக் பண்ணணும்மா'' என்றான்.

நடுவில் புகுந்த என்னவர், 'இதோ பாருடா வேணு, இன்னமும் இருக்கிற ரெண்டு மூணு நாளுக்காவது ஃபிரெண்ட்ஸூங்க சகவாசம் இல்லாமல் வீட்டோடு இருந்து ரெஸ்ட் எடு. பாஸ்போர்ட், விசா, ஃப்ளைட் டிக்கெட், ஸ்டாக்ஹோம்ல நீ குடியிருக்கிற வீட்டோட சாவி எல்லாத்தையும் பத்திரமா எடுத்து வெச்சுக்கோ.

அதை விட்டுட்டு ஃப்ளைட்டுக்குக் கிளம்புகிற தினத்தில் அம்மாஞ்சி மாதிரி தேடிக்கிட்டிருக்காதே! அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே, அடுத்த தரம் நீ வரும்பொழுது உன் கல்யாணத்தை முடிச்சுடலாம்னு பார்க்கிறேன். என்ன ஓகேவா, இல்லே எவளாவது சுவீடன்காரியை வீடியோ காலில் காண்பித்துவிட்டு இவள்தான் என் டார்லிங்னு சொல்லப்போறீயா?'' என்று எகத்தாளமாகக் கேட்க, 'மிஸ்டர் ஓல்டு மேன்! கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?'' என்றான் என் மகன் வேணு.

நாளைக்கு வேணு கிளம்ப வேண்டும். உள்ளூர்ப் பெருமாள் கோயிலுக்குப் போய்விட்டுச் சீக்கிரமாகவே இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டுப் படுத்துக் கொண்டோம்.

விடியற்காலை நாலு மணிக்கு டாக்ஸியை வரச்சொல்லியிருக்கிறது. காலை ஒன்பது மணி விமானத்தில் ஏறுவதற்கு ஆறுமணிக்கெல்லாம் வேணு ஏர்போர்ட்டில் இருக்க வேண்டுமாம்.

அதிகாலை ரெண்டு மணிக்கே நான் எழுந்து கொண்டு இட்லி குக்கரை வைத்து காபி போட்டுவிட்டு வேணுவையும் அவன் அப்பாவையும் எழுப்ப வேண்டும். வழக்கம் போல் அவர் மட்டும்தான் ஏர்போர்ட்டுக்குப் போய் வழியனுப்பப் போகிறார்.

'நீ எதுக்குமா அநாவசியமா அலையணும்?''

பெற்றெடுத்த அம்மா மீது அக்கறை போலவும் தெரியுது.

'நீ வந்தால் எனக்குச் சரிப்படாது. அப்பா மட்டும் என்னோடு வந்தால் போதும்' என்று சொல்லாமல் சொல்லுவது போலவும் தோணுது.

'டேய், வேணு. நான் இதுவரையில் ஏர்போர்ட்டைப் பார்த்ததே இல்லைடா!' என்று வெளிக் கிளம்பிய வார்த்தைகளைத் தொண்டைக்குழிக்குள்ளேயே புதைத்துக்கொண்டேன்.

விடியற்காலை இரண்டு மணிக்கு அலாரம் வைத்துக் கொண்டு எழுந்தவள் அடுத்த அரைமணி நேரத்தில் ஆவி பறக்கும் இட்லியைக் கச்சிதமான ஹாட் பேக்கில் நெருக்கி வைத்து, அதன் மேல் வேணுவுக்கு ரொம்பவும் பிடித்தமான வேர்க்கடலைச் சட்னியையும் தாராளமாகப் பரப்பி வைத்து மூடினேன். வேர்க்கடலைச் சட்னியில் ஊறிய இட்லி வேணுவுக்கு மிகவும் பிடிக்கும்.

நேற்று மாலைதான் வேணுவுக்காகவென்றே அவன் அப்பா ஃப்ரெஷ் ஆக வாங்கி வந்திருந்த வந்திருந்த பீபரி காபிப்பொடியில் தயார் செய்த டிகாக்ஷனை இறக்கிய கையோடு ஹால்விளக்கைப் போட்டேன். நடுஹாலில் மின்விசிறியின் கீழ் அப்பாவின் தொப்பையின் மீது ஒரு காலைப் போட்டுக் கொண்டு தூங்குகின்ற வேணுவை எழுப்ப மனசில்லாமல், 'வேணு, எழுந்திருடா கண்ணு''! என்று லேசாகக் குரல் கொடுக்கிறேன்.

வேணுவுக்கு பதில் அவன் அப்பாவுக்கு விழிப்பு வந்துவிட்டது. தவம் கலைந்த விசுவாமித்திரரைப் போன்று கண்விழித்துப் பார்த்தவர், தன்மேல் படர்ந்திருந்த வேணுவின் காலை மெதுவாக ஒதுக்கித் தனது உடம்பை விடுவித்துக்கொண்டு, 'கண்ணு, எழுந்துக்கோப்பா, ஏர்போர்ட்டுக்குக் கிளம்பணும்'' என்றார்.

வேணு இலேசாக அசைந்தான். வாசலில் டாக்ஸி வந்து நிற்கும் சப்தம் கேட்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

85% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன: அமைச்சா் சு.முத்துசாமி

தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமா்த்த கோரி செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் மனு

கூடலூா் அருகே பழங்குடி மக்களின் புத்தரித் திருவிழா

கோவை மருதமலையில் சூரசம்ஹாரம் கோலாகலம்

இறைச்சிக் கடை உரிமையாளா் உள்பட 2 போ் கொலை: 5 பேருக்கு இரட்டை ஆயுள்

SCROLL FOR NEXT