திருப்பூர் கிருஷ்ணன்
கவிதா அவசர, அவசரமாக மல்லிகா வீட்டுக்குப் புறப்பட்டாள். அப்படி, இப்படி என்று ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. இன்றைக்காவது போய் மல்லிகாவிடம் துயரம் விசாரித்துவிட வேண்டும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை. துயரம் விசாரிப்பதற்கு ஏற்ற நாள்தான் இது. கவிதாவின் கணவர் அலுவலக விஷயமாக வெளியூர் போயிருக்கிறார். கவிதாவுக்கு பணியாற்றும் பள்ளி விடுமுறை. இன்றைக்குப் போனால்தான் உண்டு. இல்லாவிட்டால் இன்னும் தாமதமாகிவிடும். இப்போதே தாமதம்தான்.
கவிதா தன் மகன் விக்னேஷை அழைத்தாள். 'என்னம்மா?' என்று சிணுங்கியவாறே வந்தான் அவன்.
'இங்கே பார். நான் என் பிரண்ட் மல்லிகா வீட்டுக்குப் போய்ட்டு வரேன். மணி இப்போ நாலு. எட்டு மணிக்குள்ள திரும்பிடுவேன். நீ வீட்டைப் பூட்டிக்கிட்டு உள்ளே உட்கார்ந்து ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டிரு... ஆறு மணிக்கு வெளி லைட்டை போடு.
பிளாஸ்கில் ஹார்லிக்ஸ் வெச்சிருக்கேன். கொஞ்ச நேரம் பொறுத்து பிரட் சாப்பிட்டு ஹார்லிக்ஸ் குடி. நான் வந்தவுடன் சாப்பாடு சாப்பிடலாம். கதவை உள்ளே பூட்டிக்கோ... ஜாக்கிரதை' என்று பேசியவாறே தோளில் கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு காலில் செருப்பை நுழைத்தவாறு புறப்பட எத்தனித்தாள் கவிதா.
'அம்மா! ஜோசப், அப்துல், ரஞ்சித் எல்லாரும் கிரிக்கெட் விளையாடறாங்கம்மா... நானும் போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வர்ரேனே? காலனிக்குள்தான். வெளியே போக மாட்டேன்...' என்று விக்னேஷ் கெஞ்சலாகக் கேட்டான்.
'நோ... கட்டாயம் போகக் கூடாது' என ஆள்காட்டி விரலை உயர்த்திக் கடுமையாக அவனை எச்சரித்தாள் கவிதா.
'அவங்க விளையாடறாங்கன்னா அவங்க எட்டாம் கிளாஸ். நீ ஒன்பதாவது. அடுத்த வருஷம் உனக்கு பப்ளிக் எக்சாம். நீ விளையாட வெளியே போனது தெரிஞ்சா உன் அப்பா என்னைத் தொலைச்சுப்பிடுவார். தெரிஞ்சுதா?' என்று கதவைப் பூட்டிக்கிட்டு, 'உள்ளே உட்கார்ந்து படி!' என்று அவள் கண்டிப்புடன் உரத்த குரலில் எச்சரித்துவிட்டு வீட்டுக்கு வெளியே நடந்தாள்.
விக்னேஷ் படாரென்று வாசல் கதவை உள்பக்கம் சாத்திக் கொண்ட சப்தத்தில் அவனது சலிப்பும் கோபமும் தெரிந்தன.
விறுவிறுவென்று பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள் அவள். சென்னையில் அவள் இருப்பது வடபழனி. மல்லிகா இருப்பதோ கிழக்குத் தாம்பரம். போவதற்கே முக்கால் மணி நேரத்துக்கு மேலாகிவிடும். நல்லவேளை, அவள் பேருந்து நிறுத்தத்தை அடையவும் தாம்பரம் போகிற எழுபதாம் எண் பேருந்து, நிறுத்தத்திலிருந்து புறப்படவும் சரியாக இருந்தது. ஓடிப் போய் பேருந்தில் ஏறிக் கொண்ட அவள் காலியாயிருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்தாள். முன்னோக்கி ஓடிய பேருந்தின் ஓட்டத்தோடு கூடவே அவள் நினைவுகள் பின்னோக்கி ஓடின.
ஒரு மாதத்துக்கு முன்னால் அதிகாலையில் செய்தித்தாளைப் பிரித்ததும் தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. 'கல்லூரி மாணவி மரணம்' என்ற தலைப்பில், அவளுடைய உற்றத் தோழியும், அவளுடன் சில ஆண்டுகள் முன்னால் ஒன்றாக ஆசிரியையாகப் பணியாற்றியவளுமான மல்லிகாவின் பதினெட்டு வயது மகள் சாலை விபத்தில் காலமான செய்தி கட்டம் கட்டி வெளியிடப்பட்டிருந்தது.
என்ன கொடுமை இது! ஒரே மகளைப் பறிகொடுத்துவிட்டு அந்தத் தாய் மனம் என்ன பாடுபடும்! அதுவும் திடீரென்று நேர்ந்த சம்பவம்.
மல்லிகாவின் கணவர் மிக நல்ல மனிதர். தன் மனைவியைக் கட்டாயம் குழந்தைபோல் பார்த்துக் கொள்வார். இந்தக் கடும் துயரம் அவருக்குமானது அல்லவா? அவரும் அதிலிருந்து மீள வேண்டுமே?
மல்லிகா தமிழ் ஆசிரியை. அவள் நடத்தும் பாடங்கள் பள்ளியில் மிகப் பிரபலம். மற்ற வகுப்பு மாணவர்கள்கூட அவள் பாடம் நடத்தும்போது அவள் வகுப்பில் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். தமிழை வேலைக்காகப் படித்தவள் அல்ல. வாழ்க்கைக்காகப் படித்தவள் அவள்.
மல்லிகாவின் திருந்திய உச்சரிப்பு, தமிழ்ச் செய்யுள்களைச் சொல்லும்போது, அவற்றின் பொருளில் ஈடுபட்டு உணர்வுபூர்வமாக அவற்றைச் சொல்லும் நேர்த்தி, பொருத்தமான கதைகளைச் சொல்லி விளங்க வைக்கும் திறன், ஒவ்வொரு மாணவியிடமும் அவள் கொண்டிருந்த தனித்த அன்பு என்றிப்படி எல்லாம் சேர்ந்து அவளை ஒரு நட்சத்திரமாக்கிவிட்டன.
ஏழை மாணவிகள் சிலருக்குப் பிறர் அறியாமல் அவள் சம்பளம் கட்டி வந்தாள். புத்தகங்களை வாங்கிக் கொடுத்தாள். அந்த மாணவிகள் அவளைத் தெய்வம்போல் கருதினார்கள்.
கவிதாவுக்கும் மல்லிகா என்றால் மிகவும் நெருக்கம்தான். அவளுடைய அபாரமான தமிழறிவு அவளையும் மயக்கியது. ஆனால் கூடுதல் சம்பளம் கிடைக்கிறதென்று அவள் பழைய பள்ளிக்கூடத்தை விட்டுப் புதிய பள்ளியொன்றில் சேர்ந்தாள். மல்லிகாவுக்கும் அழைப்பு விடுத்தாள்.
மல்லிகாவோ தனக்குத் தற்போது கிடைக்கும் சம்பளமே போதும் எனச் சொல்லிவிட்டாள். அந்தப் பள்ளியின் மாணவர்களையும் சக ஆசிரியைகளையும் பிரிய அவளுக்கு மனமில்லை.
பேருந்திலிருந்து இறங்கி மல்லிகாவின் வீட்டை நோக்கி நடந்தபோது, கவிதாவின் கால்கள் பின்னிக் கொண்டன. ஒரே மகளை திடீரென்று இழந்த தாயை எப்படி எதிர்கொள்வது? அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள்.
கதவைத் திறந்த மல்லிகா, துயரம் விசாரிக்க வந்தவர்களை வரவேற்பது சம்பிரதாயமில்லை என்பதால் அமைதியாக உள்நோக்கி நடந்தாள். கூடத்திலிருந்த சோபாவில் கவிதாவும் மல்லிகாவும் எதிரெதிரே உட்கார்ந்துகொண்டார்கள். சற்றுநேர கனத்த மௌனத்துக்குப் பிறகு கவிதாதான் அந்த மௌனத்தை உடைத்தாள்.
'உனக்குப் போய் இப்படியான்னு நெனச்சு நெனச்சு ராத்திரீல எனக்குத் தூக்கமே வர்றதில்லே மல்லிகா!'
இதைக் கேட்ட மல்லிகா ஒரு கசந்த முறுவலுடன் பேசத் தொடங்கினாள்.
'எனக்கு மட்டும் இது நேரக் கூடாதுன்னு நெனக்கறதுக்கு நான் எந்த வகையில ஸ்பெஷல் கவிதா? யாருக்கு வேணும்னாலும் எது வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் நேரலாம்தானே? இயற்கை எல்லாரையும் பொதுவாத்தான் பாக்குது!'
'பேப்பர்ல அந்தச் செய்தியைப் படிச்சப்போ நான் ஒரேயடியாத் துவண்டு போனேன்!'
'தெனமும் இதுமாதிரி எத்தனையோ செய்தி பேப்பர்ல வருது. ஆனா நமக்கோ நமக்கு வேண்டியவங்களுக்கோ இப்படி நேர்ந்து அது செய்தியா வந்தா அப்பத்தான் அந்தச் செய்தியோட உண்மையான தாக்கம் நமக்குப் புரியுது. என்ன செய்யலாம் சொல்லு?'
ஆறுதல் சொல்ல வந்த தனக்கு மல்லிகா ஆறுதல் சொல்கிற மாதிரி கவிதாவுக்கு பிரமை தோன்றியது. மல்லிகா தனக்கு நேர்ந்த துயரத்தை எதிர்கொள்ளும் விதம் அவள்மேல் மிகுந்த மரியாதையைத் தோற்றுவித்தது. கவிதா வியப்போடு மல்லிகாவைப் பார்த்தபடி இருந்தாள். மல்லிகா பேசத் தொடங்கினாள்.
'இதோ இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில இருக்கற எல்லார்கிட்டயும் அவங்க பிறந்த தேதியைக் கேட்டு வாங்கி யார் சீனியர், யார் ஜூனியர்னு கொஞ்ச நேரத்தில வரிசைப்படுத்திவிடலாம். ஆனா யார் முன்னாடி இறப்பாங்க, யார் பின்னாடி இறப்பாங்கன்னு இப்பவே வரிசைப்படுத்த முடியுமா சொல்லு? மனிதர்களோட எக்ஸ்பயரி டேட்டை இயற்கை ரகசியமா வெச்சிருக்கறதுதானே வாழ்க்கையோட மர்மம். 'நெருநல் உளனொருவன் இன்றில்லை'ன்னு திருக்குறளும் சொல்லுதே?'
கவிதா தன் பேச்சை ஆர்வத்தோடு கேட்பதை கவனித்த மல்லிகா தொடர்ந்து பேசலானாள்.
'உடல் காயமும் மனக் காயமும் ஒண்ணுபோல்தான் கவிதா! உடல் காயம் முதல்ல வலிக்கும். பின்னர் பொருக்குத் தட்டும். அப்புறம் பொருக்கு உதிரும். அதுக்கப்புறம் தழும்பு ஏற்படும். ஆனா தழும்பு ஏற்பட்ட பிறகு தழும்புதான் நிரந்தரமா இருக்குமே தவிர வலியே இருக்காது.
இப்போ என் மனக் காயத்தில வலிக்குது. பொறுமையா இருக்க வேண்டியதுதான். பொருக்குத் தட்டித் தழும்பா ஆகற வரைக்கும். அப்புறம் வலியே இருக்காதுங்கற நம்பிக்கையோடதான் இப்ப நாளைக் கடத்த வேண்டியிருக்கு!'
'மல்லிகா! உன்னோட மனமுதிர்ச்சியும் நீ வாழ்க்கையைப் பாக்கற பார்வையும் எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீ ரொம்பவே துவண்டு போயிருப்பியோன்னு கவலையோட வந்தேன். ஆனா அப்படி இல்லேன்னு தெரிஞ்சு இப்ப கொஞ்சம் சமாதானமா இருக்கேன்!'
மல்லிகா மெலிதாய் முறுவல் செய்தாள்.
'நீ என்மேல உண்மையான அன்பு செலுத்தறதுனால, கட்டாயம் நீ என்னைப் பாக்க வருவேன்னு எனக்குத் தெரியும் கவிதா. ஆனா என் வாழ்க்கையில் நேர்ந்த இந்தச் சம்பவம் மனிதர்கள் உள்ளூற எப்படியெல்லாம் குரூரமா இருக்காங்கன்னு நான் புரிஞ்சுக்கவும் உதவியிருக்கு. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன் கேளு. எங்கிருந்தோ என்னைப் பாக்க நீ வந்திருக்கே. ஆனா நேர் எதிர் வீட்டுல இருக்கறவங்க இண்ணி வரையில் எங்கிட்ட இதுசம்பந்தமாக எதுவும் கேட்கல... என்ன செய்ய?'
'இப்படிக் கூடவா இருப்பாங்க?'
'இருக்காங்களே! என் கணவரோட நண்பர் ஒருத்தர் வந்தாரு. என்னையும் என் கணவரையும் ரொம்ப நேரம் எதுவும் பேசாம உத்துப் பாத்துக்கிட்டே இருந்தாரு... பிறகு எந்திரிச்சுப் போயிட்டாரு... எதுக்காக அப்படி உத்துப் பாத்தாருன்னு எங்க ரெண்டு பேருக்கும் புரியல. ஆனா அப்படி உத்துப் பாத்தப்ப அவர் கண்கள்ல ஒரு சின்ன மகிழ்ச்சி தென்பட்டுது. என்ன செய்யலாம் சொல்லு?'
கவிதா அதிர்ச்சி கலந்த திகைப்புடன் அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
'என் கணவரோட உறவுக்காரங்க நெறைய பேர் சென்னையிலதான் இருக்காங்க. அவங்கள்ல முக்காவாசிப் பேர் இன்னும் போன் பண்ணிக் கூட விசாரிக்கலை... என் கணவரோட அத்தை மகன் ஒருத்தர், 'நடந்தது நடந்துபோச்சு, அடுத்தவாரம் என் அறுபதாவது பிறந்த நாள் விழா, அவசியம் வா'ன்னு கூப்பிடறார். என் கணவருக்கு மகள் போன துக்கத்தைவிட, உறவுக்காரங்க இப்படி நடந்துக்கற துக்கம்தான் இன்னும் பெரிசா இருக்கு...'
சற்றுநேரம் அமைதியாக இருந்த கவிதா, பிறகு மெல்லக் கேட்டாள்:
'உன் கணவர் வீட்டுல இல்லியா மல்லிகா?'
'அவர் அடிக்கடி ரத்தத் தானம் செய்வார்ங்கறதுதான் உனக்குத் தெரியுமே? அவர் க்ரூப் ரத்தம் தேவைன்னு யாரோ தொலைபேசியில குறுஞ்செய்தி அனுப்பினாங்க... அவர் ரத்தம் கொடுக்க இப்பத்தான் புறப்பட்டுப் போனாரு... நான் மனமுதிர்ச்சியோட இருக்கேன்னு சொல்றியே, என் மன முதிர்ச்சிக்கெல்லாம் காரணம் அவர்தான். எப்படின்னு சொல்றேன் கேளு...' என்ற மல்லிகா தொடர்ந்து பேசலானாள்.
'அவர் அடிக்கடி என்கிட்டச் சொல்வாரு. என் மகள் அவள் வயசில அடைய விரும்பற அத்தனை சந்தோஷத்தையும் அவளுக்குக் கொடுக்கணும்னு என்று அவள் விரும்பின ஹோட்டல்ல சாப்பிடக் கூட்டிட்டுப் போவாரு. அவளோட தோழிகளோட அவள் எங்க போகணும்னாலும் அனுமதிப்பாரு... அவரே அவளோட பல இடங்களுக்குச் சுற்றுலா போவாரு... அவளை நாள்தோறும் சாயங்காலம் வெளியே போய் தோழிகளோட விளையாடச் சொல்வாரு... அந்தந்த வயசில அந்தந்த வயசுக்குரிய சந்தோஷங்களை எல்லாரும் அனுபவிக்கணும்கறது அவரோட சித்தாந்தம்.
குழந்தைங்க பெற்றோரை நம்பி இருக்கறதுனாலயே பெற்றோர் அளவுக்கு மீறிக் குழந்தைங்க மேல ஆதிக்கம் செலுத்தறது தப்புன்னு சொல்வாரு அவரு. குழந்தைகளோட சுதந்திரத்துக்குக் குறுக்கில பெற்றோர் இருக்கக் கூடாதும் பாரு... எங்க மகள் இறந்துபோவான்னு நாங்க ரெண்டு பேரும் ஒருகணம் கூட நினைச்சதில்ல. ஆனா அது நடந்துபோச்சு.
என்றாலும் அவள் வாழ்க்கையை அவள் விரும்பினபடி வாழ நாங்க ஆதரவா இருந்தோம்கற உண்மை இப்ப எங்களுக்கு ஆறுதல் தருது' என்று கவிதாவையே சற்றுநேரம் அன்போடு பார்த்தவாறிருந்த மல்லிகா மேலும் பேசலானாள்.
'நாமே செத்துச் செத்துத்தானே பொறக்கறோம் கவிதா? உனக்கு 'குண்டலகேசி' பாட்டு ஞாபகம் இருக்கா? பாளையாம் தன்மை செத்தும்னு தொடங்குமே? நான் குழந்தை மல்லிகாவா இருந்தேன். அப்புறம் சிறுமி மல்லிகா ஆனேன். அப்புறமா கல்லூரி மல்லிகாவா வளந்தேன். இப்ப நடுவயது மல்லிகாவா இருக்கேன். இயற்கை அனுமதிச்சா முதிய மல்லிகாவா எதிர்காலத்துல மாறுவேன். மற்றபடி இந்தப் பருவங்களெல்லாம் நாமே இறந்து இறந்துதானே நமக்குக் கிடைக்குது? நாம முழுமையா இறக்கலைன்னாலும் அந்தந்தப்
பருவங்களை இழந்த அந்த வகையில இறக்கத்தானே செய்யறோம்? ஆகையினால அதிகாரத்தைக் கையில வெச்சுக்கிட்டு அந்தந்தப் பருவத்து சந்தோஷத்தைக் குழந்தைங்க அடையறதை நாம தடுக்கக் கூடாதுன்னு சொல்வாரு அவரு... மூணு வயசுக் குழந்தைக்கு கிலுகிலுப்பை வாங்கிக் கொடுக்காம எட்டு வயசு ஆனப்புறம் அந்தப் பையனுக்கு அதை வாங்கிக் கொடுத்தா அந்த சந்தோஷத்தை அவன் அடைய முடியுமா? அதோட ஒரு மனைவிங்கற வகைல என் வாழ்க்கை தனியானதும்பாரு.
அதை தான் பிடுங்கி வாழ நினைக்க மாட்டாரு. என் நியாயமான விருப்பம் எதுக்குமே அவர் தடை போட்டதில்லே. அவரோட சம்பளமே எங்களுக்குப் போதும்தான். ஆனா நான் வேலைக்குப் போகணும்னு ஆசைப்பட்டப்போ அவர் அந்த ஆசைல குறுக்கில நிக்கலை. என் பொண்ணு பதினெட்டு வயசு வரைதான் இருந்தா. ஆனா அந்தப் பதினெட்டு வருஷமும் அவ வாழ்க்கையை அவ விரும்பினபடி சந்தோஷமா வாழ்ந்தா. அதுக்கு நாங்க உறுதுணையா இருந்தோம்.
அவ இப்பக் காலமாகலேன்னாலும் எங்க காலத்துக்கு முன்னாடியோ பின்னாடியோ அவ காலமாகத் தானே போறா? காலமே ஆகாதவங்கன்னு பூமில யார் உண்டு? ஆனா வாழற காலத்துல அவங்கவங்க நியாயமா விரும்பினபடி வாழ எல்லாருக்கும் உரிமை உண்டு இல்லியா? நாம ஒருத்தருக்கு உறவுங்கற அதிகாரத்தைப் பயன்படுத்தி, அடுத்தவங்க வாழ்க்கையை நாம பிடுங்கி வாழலாமா? அப்படி வாழ்ந்தா அது நியாயமா சொல்லு!' என்று ஒரு பிரமிப்போடு மல்லிகா சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள் கவிதா.
மல்லிகாவின் முகத்தில் புத்தரின் சாயல் தென்படுவதுபோல் தோன்றியது அவளுக்கு.
சற்றுநேரம் மௌனமாக இருந்த கவிதா, விடைபெறும் நோக்கில் மெல்ல எழுந்தாள்.
'மல்லிகா... என்ன சொல்றதுன்னு தெரியலை. உன்னைப் பாத்து ஆறுதல் சொல்லத்தான் நா வந்தேன். ஆனா, உன்கிட்டருந்து எத்தனையோ பாடங்களை இன்னிக்கு நான் கத்துக்கிட்ட மாதிரி இருக்கு. இதுமாதிரி சந்தர்ப்பங்கள்ல போய்ட்டு வரேன்னு சொல்லக் கூடாதும்பாங்க...'
மல்லிகாவும் கவிதாவைப் பார்த்து தலையசைத்து மென்மையாகச் சிரித்தாள். கவிதா மல்லிகாவின் வீட்டை விட்டு வெளியேறி பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.
திடீரென ஏதோ யோசனையோடு வழியிலேயே நின்ற கவிதா, அவசரமாக தன் கைப்பையிலிருந்து கைப்பேசியை எடுத்து மகன் விக்னேஷை அழைத்தாள்.
'என்னம்மா?' சலிப்போடு கேட்டான் விக்னேஷ்.
'விக்னேஷ்... வீட்டைப் பூட்டி சாவியை எதிர்வீட்டுல குடுத்துட்டு வெளியே போய் கொஞ்சநேரம் விளையாடு. நான் எதிர்வீட்டுல சாவியை வாங்கிக்கறேன். நான் வந்தபிறகு நீ வந்தாப் போதும்...'
'ஹையா!' என்ற விக்னேஷ் குரலில் உற்சாகம் பீறிட்டது.
'ஆனா கொஞ்சம் ஹோம்ஒர்க் பாக்கி இருக்கும்மா!'
'அதெல்லாம் நீ விளையாடிட்டு வந்த பிறகு செஞ்சுக்கலாம். முதல்ல போய் விளையாடு!'
கைப்பேசியை அணைத்துக் கைப்பையில் போட்டுக்கொண்டு கவிதா பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள். அவள் நடையில், அவரவர் வாழ்க்கையை அவரவர் சந்தோஷமாக வாழ எல்லோரும் உதவ வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டதால் விளைந்த ஒரு தனி கம்பீரம் தென்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.