தினமணி கதிர்

புள்ளிகள்

அன்றொரு நாளின் அதிகாலை வேளை. அந்த அமெரிக்கப் பத்திரிகை நிருபரின் வெகுநாள் ஆசை நிறைவேறியது.

இணையதளச் செய்திப் பிரிவு

அன்றொரு நாளின் அதிகாலை வேளை. அந்த அமெரிக்கப் பத்திரிகை நிருபரின் வெகுநாள் ஆசை நிறைவேறியது. அடர்த்தியான செழித்த வனப் பகுதிக்குள் ஒரு ராணுவ வீரர், அந்த நிருபரை வழிகாட்டியாக அழைத்துச் சென்றார். இருப்பிடம் வந்தது.

'காத்திருங்கள். மேலிருந்து அழைப்பு வரும். இந்த ஏணி வழியாக மேலே ஏறிப் போங்கள்' என்று சொல்லிவிட்டு ராணுவ வீரர் சென்றுவிட்டார். நிருபர் மேலே பார்த்தார். சுற்றும் முற்றும் கவனித்தார். தான் நேரில் காண வந்த அந்தத் தலைவரின் இருப்பிடத்தைப் பார்த்தார். இரு பிரம்மாண்டமான விருட்ச இணைப்புகளுக்கு இடையில் மேலே ஒரு ராட்சதப் பறவைக் கூண்டைப் போல் இருந்தது அந்தக் குடிசை.

அதில், இரண்டு ஜன்னல்கள் இருந்தன. ஒன்றில் ஒரு கழி நீட்டிக் கொண்டிருந்தது. அந்தக் கழியில் ஒரு கால் சட்டையும், மேல் சட்டையும் காய்ந்து கொண்டிருந்தது. அவை கழியோடு உள்ளே போன கொஞ்ச நேரத்தில் நிருபருக்கு அழைப்பு வந்தது.

மேலே ஏறிச் சென்றார் நிருபர். பயணச் சிரமத்துக்கும், காத்திருக்க வைத்ததற்கும் வருத்தம் தெரிவித்த அந்தத் தலைவர் ஒரு கருப்பு தேநீரை அளித்து உபசரித்தார். பின்னர், நேர்காணல் நடைபெற்றது. நிருபர் கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.

'நான் இங்கே காத்திருக்கும்போது என்ன செய்தீர்கள்?'

'காலை பத்திரிகைகளை அவசரமாகப் படித்து முடித்தேன்.'

'அதற்கு முன்னால் என்ன செய்தீர்கள்?'

'காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்தேன்...'

'அதுக்கு முன்னால்?'

'எனது ஆடைகளைத் துவைத்துவிட்டு கழியில் கட்டிக் காய வைத்தேன்.'

'உங்களிடம் எத்தனை ஆடைகள் உள்ளன?'

'இந்த ஒரு செட்தான்!'

அதிர்ந்தார் நிருபர். பேட்டி அளித்தவர் வியத்நாம் மக்கள் தலைவர் ஹோசிமின்.

('ஹோசிமின்' குறித்து எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதியிருப்பது)

கு. அழகிரிசாமியிடம் ஆலோசித்தே தொ.மு.சி.ரகுநாதன் 'சுருதிபேதம்' என்னும் இசை குறித்த ஒரு கதையை எழுதினார். 'காண்டீபம்' எனும் பத்திரிகையில் வந்த அந்தக் கதை சர்ச்சைக்குள்ளானது. ஒரு வாசகர், 'நீங்கள் உங்கள் கதையில் மேளகர்த்தாக்கள் 32 என எழுதியிருக்கிறீர்கள். 72 மேளகர்த்தாக்கள் அல்லவா? கல்யாணி ராகத்துக்கு 'கைசிகி நிஷாதம்' என்று எழுதியிருக்கிறீர்கள்? 'காசலி நிஷாதம்' அல்லவா?'என்று கேட்டிருந்தார். அழகிரிசாமியிடம் விளக்கம் கேட்டவுடன் அடுத்த வாரம் பதில் வெளியானது.

'மேளகர்த்தாக்கள் 32 ஆகும். 72 என்று குழப்படி செய்தவர் வேங்கடமகி. ஸ்தானமில்லாத ஸ்வரங்களைக் கொண்டு தாமே 40 மேளகர்த்தாக்களை அதிகப்படியாக உற்பத்தி செய்துவிட்டார். உதாரணமாக, 'கனகாங்கி' எனும் ஒரு ராகத்தை உண்டாக்கினார். ரிதபம் எப்படி காந்தாரமாகும்? இதேபோல், ஒரு ஸ்வரத்துக்கு வேறு பெயரைக் கொடுத்து, பல ராகங்கள் உண்டாக்குவதை ஒப்புக் கொள்ள முடியுமா? ஆகவே, மேளகர்த்தாக்கள் 72 என்பது அபத்தம். 32 மேளகர்த்தாக்களுக்கு மட்டுமே ஸ்வரங்கள் உண்டு. கல்யாணி ராகத்துக்கு ஞாபக மறதியாக, 'கைசிகி நிஷாதம்' என்று போட்டுவிட்டேன். 'காசலி நிஷாதம்' என்றுதான் இருக்க வேண்டும். சங்கீதம் தொடர்பாக மேற்கொண்டு நான் சர்ச்சை செய்ய விரும்பவில்லை. நான் எழுத்தாளர். சங்கீத வித்வான் அல்ல' என்று இசையின் செயல்பாடு குறித்து தொ.மு.சி.ரகுநாதன் விளக்கம் அளித்தார். தான் எழுதிய சில வானொலி நாடகங்களுக்கு அவரே பாடல்களை எழுதி இசை அமைத்தார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்து ஓராண்டுக்கு மேல் ஓடிய படம்

'சிவகவி'. புகழ் பெற்ற இந்தப் படத்துக்குத் திரைக்கதையை எழுதியவர் திருமுருக கிருபானந்த வாரியார். வசனம்- இளங்கோவன்.

-த.நாகராஜன், சிவகாசி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் இடத்தில் கட்டிய வீடுகளை காலி செய்யும் விவகாரம்: அறநிலையத் துறையிடம் அவகாசம் கோரி பொதுமக்கள் மனு

காா்த்தி சிதம்பரம் மகள் இரு அரசு பள்ளிகளுக்கு தலா ரூ. 1.10 லட்சம் நிதி உதவி

கோயிலில் கல்வெட்டு அகற்றப்பட்ட விவகாரம்: இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை பாஜகவினா் முற்றுகையிட முயற்சி

சிவகங்கையில் செவிலியா்கள் உண்ணாவிரதம்

சிவகங்கையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நான்கு தொகுதிகளிலும் 1,50,828 போ் நீக்கம்

SCROLL FOR NEXT