முதல் இடத்தை நோக்கிய பயணம் அல்ல; பிடித்த இடம் நோக்கி..!
'வணிக ரீதியில் வெற்றி பெற்ற இயக்குநராக இருக்கும் சீனு ராமசாமி எழுதிய கவிதை நூல்கள் அண்மைக்காலமாக வரிசையாக வெளிவருகின்றன.
அருள்செல்வன்
'வணிக ரீதியில் வெற்றி பெற்ற இயக்குநராக இருக்கும் சீனு ராமசாமி எழுதிய கவிதை நூல்கள் அண்மைக்காலமாக வரிசையாக வெளிவருகின்றன. விருதுகளும் பெறுகின்றன.
அவருடன் ஓர் சந்திப்பு:
கவிதை ஆர்வம் வந்தது எப்படி? எந்த வயதில் இருந்து எழுதுகிறீர்கள்?
தமிழ் மொழியில் தொடர்ந்து பேசியும், கவிதைகள், இலக்கியம், சிறுகதை, நாவல் போன்றவற்றைப் படித்தும் வந்தாலே அதை எழுதும் ஆற்றல் கிடைத்துவிடும். இது தமிழுக்கே உள்ள சிறப்பு.
நான் பிறந்து வளர்ந்தது கூடல் மாநகரான மதுரை. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் போன்றவர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், அரசியல் மேடைகள், இலக்கிய மேடைகள், கோயில் விழாக்கள்.. என்று எல்லா வகையிலும் தமிழ் மொழியை ரசித்து அனுபவித்து வளர முடிந்தது .
என் தாத்தா எனது பத்து வயதிலேயே கோயில் விழாக்களுக்கு அழைத்துச் செல்வார். அங்கே கதாகாலட்சேபம் கேட்போம். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் கேட்க முடிந்தது. ஆழ்வார் பாசுரங்கள், தேவாரம், திருவாசகம் போன்றவற்றைக் கேட்டு மனனம் செய்வது என்றிருந்தேன்.
பாரதியார் கவிதைகள் எனக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. இப்படிச் சிறு வயதிலேயே தமிழும் ரசனையும் எனக்குள் வளர்ந்தன. இந்த ரசனையே என் கவிதைகளுக்கான தோற்றுவாய் என்பேன்.
இலக்கிய வாழ்வில் உன்னத ரசனைகளையும் உன்னதத் தருணங்களையும் அறிமுகம் செய்து வைத்தது. கிளை நூலகங்களின் ஜன்னல் வழியாக இந்த உலகைப் பார்த்தேன். இப்படிப் படிப்பதை, பார்ப்பதைக் கவிதையாக எழுதுவது சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது.
சுருக்கமாகச் சொன்னால், மொழி ஆர்வமே என்னை கவிதை மனம் உள்ளவனாக மாற்றி கவிதை எழுதத் தூண்டியது. வானம்பாடி கவிஞர்கள், மணிக்கொடி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தீவிரமாக வாசித்தேன். தி.ஜா., புதுமைப்பித்தன் தொடங்கி நவீன இலக்கியத்துக்குள் நுழைந்து அப்படியே வண்ணதாசன், வண்ண நிலவன், ஆத்மா நாம், கலாப்ரியா வரை வாசித்தேன்.
நான் படித்தது மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி என்றாலும், அமெரிக்கன் கல்லூரியில் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வேன். ஒரு முறை அங்கே எழுத்தாளர் சுந்தர ராமசாமி வந்து கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது அவரிடம் நான் கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறேன்.
இன்று பிரபலமான எழுத்தாளர்களாக இருக்கும் பலரும் அன்று என் இலக்கிய நட்பு வட்டத்தில் இருந்தவர்கள்தான்.
மீராவின் 'அன்னம் பதிப்பகம்' சென்று பகுதி நேரப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தபோது, அங்கே வாசித்தேன். அந்தக் காலத்தில்தான் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எழுத ஆரம்பித்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு வந்தது. இப்படி என் இலக்கிய ரசனையும் வளரத் தொடங்கியது. கவிதை ரசனையே எனது திரைப்பட ரசனையாக மாறியது.அந்த வகையில்தான் பாலு மகேந்திரா, மகேந்திரன், கே.பாலசந்தர், பாரதிராஜா, சத்தியஜித்ரே, பரதன் போன்றவர்களின் படங்களை ரசித்தேன்.
நான் சிறுவயதிலேயே தோன்றியதையெல்லாம் எழுத ஆரம்பித்தேன். என் இருபதாவது வயதில் நான் எழுதிய கவிதை கணையாழியில் பிரசுரமானது. இப்படி எனக்குள் என்னோடு சேர்ந்து கவிதையும் வளர்ந்தது.
குறுகிய காலத்தில் ஏராளமான கவிதைகள் எழுதியது எப்படி?
இதுவரை 1,400 கவிதைகளை எழுதி இருக்கிறேன். 2008- ஆம் ஆண்டில் 'காற்றால் நடந்தேன்' என்கிற முதல் கவிதைத் தொகுப்பு 'உயிர்மை' மூலம் வெளிவந்தது.
கரோனா காலத்துக்குப் பின்னர் நிறைய எழுதினேன்.
'புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை' என்கிற 300 கவிதைகள் கொண்ட தொகுப்புக்கு 'சௌமா', 'கவிதை உறவு' விருதுகள் கிடைத்தன. 'மாசி வீதியின் கல் சந்துகள்' என்ற கவிதைத் தொகுப்புக்கு 'ஜெயந்தன்', 'படைப்பு' , 'சௌமா' விருதுகள் கிடைத்தன. 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்', 'கோயில் யானையின் சிறுவன்', 'மேகங்களின் பேத்தி', 'நதியழகி' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. 'ஒரு தலை பபூன்', 'முதல் ருசி' என இரண்டு தொகுப்புகள் வெளியாக உள்ளன.
தோன்றியதை எழுதுவது என் பழக்கம். திரைப்படம் இயக்கும்போதுதான் சற்று இடைவெளி விடுவேன். மற்ற நேரங்களில் நான் எழுதிக்கொண்டே இருப்பேன்.
பிரசுரம் ஆகிறதோ இல்லையோ எழுதுவது என்பது உயிரோடு இருப்பது. உன்னதத் தருணங்களைக் கண்டடையும் போதெல்லாம் சொல் பிடித்து எழுத்தாக உருமாறத் தொடங்கும். என் மகிழ்ச்சிக்காக நான் எழுதிக் கொண்டிருப்பேன். அதனால்தான் இவ்வளவு எழுத முடிந்தது.
கருப்பொருளை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?
கருப்பொருளைத் தேடி நான் அலைவதில்லை. கண்ணால் காண்பவை, மனதில் பாதிப்பவை... என்று எதுபற்றியும் எழுதுவேன். புறத் தூண்டல்களாகவும் இது ஏன் என்ற கேள்வியாக அகத் தூண்டலாகவும் பாதிப்பவை அனைத்தும் கவிதையாக மாறும். கவிதைக்கான கருப்பொருளை இதுவரை நான் வரையறுத்ததில்லை. இப்படியாக புற, அகத் தூண்டல் கொண்ட எதையும் நான் கவிதையாக்கிக் கொள்வேன்.
கவிதை நூல்கள் அளித்த அனுபவம் என்ன? எதிர்வினை என்ன?
எழுதியது அச்சில் வரும்போது, பார்க்கிற மகிழ்ச்சி அலாதியானது. விருதுகள் கிடைப்பதும் பெருமையாக இருக்கிறது. பேராசிரியர் இளங்கோ நடேசன் மொழிபெயர்த்த எனது கவிதைகள் 'தி டேஸ் ஆஃப் ஸ்மால் புரூக் அன்ட் அதர் பொயம்ஸ்' என்ற பெயரில் க்ரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் பாடப் பகுதியாக உள்ளது. கன்னடம், தெலுங்கு, மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
லண்டன் கேம்பிரிட்ஜ் பெகாசஸ் பதிப்பகம் சார்பில், ஜெயந்தி சங்கர் மொழிபெயர்ப்பில் 'ஹேண்ட்ஸ் ஆஃப் அன்நோன் ஃபேஸஸ்' என்ற பெயரில், கவிதை நூல்கள் வெளியிட உள்ளது. நான் கவிஞனாக இருந்து திரைப்பட உலகத்துக்கு வந்தேன். என் கவிதை நூல்கள் வெளிவரும் வரை நான் ஒரு கவிஞன் என்று யாருக்கும் தெரியாது.
நூல்கள் வந்தவுடன் தான் எனது இன்னொரு முகம் வெளியே தெரிந்தது. அதுவரை சினிமா முகம் மட்டுமே எனக்குரியதாக இருந்தது. அந்த வகையில் இந்த நூல்கள் எனது கவிதை முகத்தைக் காட்ட உதவி இருக்கின்றன.
திரைத் துறையில் இருந்துகொண்டு கவிதைகளை எப்படி எழுதுகிறீர்கள் ?
நான் காலையில் மன்னனைப் போல் இருப்பேன். மாலையில் அநாதை போலாகி விடுவேன். எனக்குள் திடீர் உற்சாகம் எடுக்கும். பரவசம் வரும், அப்படி ஒரு பித்து மனநிலை எனக்கு உண்டு. ஆனாலும் அது பெண்டுலம் போல் நிற்காமல் ஆடிக் கொண்டிருக்கும்.
திரைத்துறையிலும் அப்படித்தான் இருக்கிறேன். ஆனாலும் கட்டுப்பாடான குறுகிய காலத்தில் படம் எடுக்கக்கூடிய இயக்குநராக நான் இருக்கிறேன். திரைப்படம் என்று வரும்போது என் கவனத்தை சிதற விடுவதில்லை. நான் இயக்கி, இடி முழக்கம், இடம், பொருள், ஏவல் படங்கள் வர உள்ளன. கவிதை மனம்தான் என்னை இயக்குநராக்கி உள்ளது என்பேன்.
'கவிதை எழுதுவதைவிட கவிமனம் முக்கியம்' என்று நான் நினைக்கிறேன். சிரிப்பும் அழுகையும் கொண்ட உணர்வுகளால் புனையப்பட்ட மனம் என்னுடையது. இந்தக் கவிமனம் என்பது மயக்கம் அல்ல. சகலப் புலன்களும் திறந்துகொண்டு விழிப் புற்றிருக்கும் உணர்வே கவி மனம். கவிதை மூலம் எளிதில் விழிப்பு நிலையை அடையலாம்.
கவிதையாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் எனது உணர்வு தீவிரமாக இருக்கும் . அந்த தீவிர உணர்வு மூலம் கவிதை இலக்கை எளிதில் அடையலாம். திரைத்துறை விழிப்புணர்வு வர 60 நாள்களாவது பணியாற்ற வேண்டும். விழிப்புணர்வின் உன்னத நிலையே இந்த பித்து நிலை. இந்தப் பித்து பைத்தியம் அல்ல. திரைத்துறையாக இருந்தாலும் கவிதையாக இருந்தாலும் தீவிரச் செயல்பாடு என்றே அதை நினைத்துக் கொள்ள வேண்டும்.
திரைத்துறையே ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க, நீங்கள் திரைத்துறையில் இருந்தும் கவிதைகளை விரும்புவது ஏன்?
திரைத்துறையும் சிறிய வட்டம்தான். பிரபஞ்சம்தான் பெரியது. நான் காட்சி ஊடகத்திலிருந்து எழுத்தை நோக்கிச்செல்ல விரும்புகிறேன். காட்சி ஊடகங்கள் முற்றுப்பெறும் தன்மை கொண்டவை. எழுத்துதான் கற்பனைக்கு இடம் தருவது. அதற்கு முடிவில்லை. நான் கவிதை எழுதுவதை எனக்குப் பிடித்ததாக நினைக்கிறேன். நான் திரையுலகத்திலிருந்த போதும், முதலிடத்துக்கு முயற்சி செய்பவன் அல்ல; பிடித்த இடத்தை நோக்கி பயணம் செய்பவன்.
திரைப் பணிகளில் இருந்து விலகி, கவிதை எழுதுவது ஒரு தடையாகத் தோன்றவில்லையா?
திரைப்பட வேலையும் கவிதைகளையும் நான் பகுத்துக் கொண்டுள்ளேன். அந்த தெளிவு எனக்கு இருக்கிறது. 1,400 கவிதைகள் எழுதினாலும் 9 தொகுதிகள் எழுதியிருந்தாலும் திட்டமிட்டு செய்யவில்லை. திட்டமிட்டு அப்படிச் செய்ய முடியாது. வாழ்க்கையையும் திட்டமிட்டு நடத்த முடியாது.
'ஒரே நேரத்தில் இரண்டு குதிரைச் சவாரியா?' என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி அல்ல. திரைத்துறை என்பது வேறு. திரைப்படங்களைத் திட்டமிட்டு, 9 திரைப்படங்கள் எடுத்திருக்கிறேன். குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்கும் இயக்குநராக இருக்கிறேன்.
கடந்த கால ஏக்கம், அன்றாட அழுத்தம் எது உங்களை அதிகமாக எழுதத் தூண்டுகிறது?
கவிஞனின் மனம் உணர்ச்சி பிரவாகமாக இருக்கும். ரசனையின் உச்சம், அன்பு, நன்றி, இரக்கம், கருணை என்றிருக்கும். அதில், பிறரை புண்படுத்துவதற்கு வேலை இல்லை. மனிதர்களையும் மனங்களையும் நேசிக்கக் கூடியது. யாருடைய வாதைக்கும் அங்கே வேலை கிடையாது. பிறரைப் புண்படுத்தி காயப்படுத்தி எழுதி மலிவாக்க நினைப்பதில்லை.
எனக்கு எல்லாமே எழுதத் தூண்டும். எனக்கு தோன்றுவதை நான் எழுதுகிறேன் திட்டமிட்டு எழுதவில்லை. திட்டமிட்டு எழுதுவது அல்ல கவிதை. கவிஞன் வறுமையில் இருந்தாலும் அவனிடம் ஒரு ராஜ அம்சம் இருக்கும். அவன் இறைவனோடு அல்லது பிரபஞ்சத்தோடு உறவு உள்ளவனாக இருக்கிறான். அவனது இடம் தனியானது.
பலத்த காற்று வீசும்போது, மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும் சிறுவனின் மன நிலையில் தான் நான் இருக்கிறேன். கவிதை எனது ஆதிகலை. அதை நான் கைவிட மாட்டேன். அது தரும் புத்துணர்ச்சியை இழக்க விரும்ப மாட்டேன்.
இந்த உலகத்தில் வெறும் எலும்புக் கூடுகளை விட்டுச் செல்லக்கூடாது என்பதற்காகத்தான் நான் எழுதுகிறேன். அன்பைப் பெருக்குகிறேன். கவிதைக் காலம் முடிந்துவிட்டது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் நான் என் மகிழ்ச்சிக்காகவும் திருப்திக்காகவும் மட்டுமே எழுதுகிறேன். எதையும் எதிர்பார்த்து அல்ல.