இந்தியாவில் வளர்ந்து வரும் சதுரங்க வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார், வைபவ் கெளதம். சிறுவயதிலிருந்தே அவர் பெருமூளை வாத நோயால் அவதிப்பட்டு வருகிறார். அதன் காரணமாக வைபவால் தன் உடல் உறுப்புகளை இயக்க முடியாது.
அவரது உடலை இயக்குவதும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. கெளதமால் நடக்கவும் முடியாது, பேசவும் முடியாது. வீட்டில் வைபவின் கவனத்தைப் பயனுள்ள வழியில் திசை திருப்ப அவருக்குச் சதுரங்க விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
வைபவின் அப்பா மனோஜ். தன் மகனை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், செஸ் ஆட்டத்தில் ஆர்வம் தோன்றவும் தொடக்கத்தில் வைபவ் வெற்றிபெறவும் விட்டுக் கொடுப்பார். அந்த உற்சாகத்தில், வெகு விரைவில், செஸ் ஆட்டத்தில், வைபவ் தந்தையின் தயவு இல்லாமல் வெற்றிபெறத் தொடங்கினார்.
செஸ் அட்டையில் காய்கள் நகர்த்தப்படுவதைக் கூர்மையாகக் கவனித்து சொந்தமாக அவரே சில கணிப்புகள் செய்யத் தொடங்கினார். இந்தக் கணிப்புகள் வைபவின் பெற்றோரை மட்டுமல்ல... செஸ் ஆட்ட ஆர்வலர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. வைபவிடம் எதிராளியின் செஸ் காய்கள் நகர்வைக் கணித்து, தனது பதில் நகர்வைத் தீர்மானிக்கும் சிறப்புத் திறமை உள்ளது என்ற முடிவுக்கு வந்தனர்.
வைபவின் அடுத்த பயணம் சர்வதேசப் போட்டிகளில் பங்கு பெறுவது. அதில் அவர் எதிர் ஆட்டக்காரர்களின் சவால்களை எப்படிச் சமாளிப்பார் என்று பெற்றோர் பயந்துகொண்டிருந்தனர்.
ஆனால், வைபவ் எதிராளியின் நகர்வுக்கு ஏற்ப தனது நகர்வுகளை மாற்றியமைத்துக் கொண்டு பெற்றோர் உட்பட அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கினார். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு காரணமாக 2017 இல் பர்ஸ்வநாத் தில்லி சர்வதேச சதுரங்கப் போட்டி'யில் வைபவ் அறிமுகமானார்.
தானாக போட்டிகள் குறித்த செய்திகளை அவர் சேகரிக்கிறார். தனது டேப்லெட்டில் அவராகவே போட்டியில் கலந்து கொள்வதற்கான படிவங்களை நிரப்புகிறார். பொருத்தமான பயிற்சியாளரை நாடுகிறார். இந்தப் பேரார்வம் காரணமாக போட்டியில் எந்தச் சவாலையும் மிக எளிதாக வைபவ் எதிர்கொள்கிறார்.
வைபவின் பயிற்சியாளர் அங்கித் ராஜ்பாரா சொல்வது :
24 ஆவது ஐபிசிஏ உலக சதுரங்க சாம்பியன்ஷிப் 2025 போட்டிக்காக வைபவ்வை தயார்படுத்த முடியுமா என்று கேட்டு என்னை அணுகினர். நான் ஒப்புக்கொண்டேன். பயிற்சிகள் ஆன்லைன் அமர்வுகள் மூலம் நடக்கும்.
ஆனால் வைபவ்வுடன் எப்படிப் பேசுவது? செஸ் நகர்வுகள் குறித்த விளக்கம் எப்படி வழங்குவது குறித்தெல்லாம் எனக்குத் தெரியவில்லை. வைபவிற்குப் பேச வராது. தவிர வைபவிற்கு உடல் ஊனமும் உள்ளது.
அதிர்ஷ்டவசமாக அமர்வுகளில், வைபவின் அப்பா அல்லது சகோதரி உடன் இருப்பார்கள். வைபவின் சைகைகள், வைபவ் உச்சரிக்கும் தெளிவற்ற வார்த்தைகளின் அர்த்தத்தை அவரது அப்பா அல்லது சகோதரி எனக்குச் சொல்ல... நான் விளக்கத்தைத் தருவேன். விளக்கங்களை வைபவ் நேரடியாகப் புரிந்துகொள்வார்.
அவரது சந்தேகங்களை டேப்லெட் திரையில் காட்டுவார். இப்படி எனக்கும் வைபவிற்கும் இடையே தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. செஸ் காய்களின் நகர்வுகளைப் பொருத்தவரை, வைபவ் அதை தனது டேப்லெட் திரையில் காண்பிப்பார். வைபவ் அப்பா அதை விளக்கிச் சொல்வார். நான் தந்த பயிற்சியை வைபவ் புரிந்துகொண்டார்.'
வைபவ், 24 ஆவது உலக ஐபிசிஏ தனிநபர் சதுரங்க சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளில் சிறப்புத் திறனாளி பிரிவில் பங்கேற்றார். அதில் விரைவுப் பிரிவில்' எட்டாவது இடத்தைப் பிடித்தார். ஆண்களுக்கான மாற்றுத் திறனாளி பகுதியில் வெள்ளிப் பதக்கத்தையும் சமீபத்தில் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.