கே.ஆர். விஜயா பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
பெண்களால் அம்மன்' என்றும் ஆண்களால் புன்னகை அரசி' என்றும் பெயர் பெற்ற விஜயாம்மா கேரளாவிலிருந்து பெற்றோருடன் பழனி வந்து, சகோதர சகோதரிகளுக்காக சென்னை வந்து நாடகங்களில் நடித்தார். பின்னர், விஜயகுமாரி நடிக்க மறுத்த கற்பகம்' படத்தில் இயக்குநர் கே. எஸ். கோபால
கிருஷ்ணனின் இயக்கத்தில் 1963இல் கதாநாயகியாக அறிமுகமாகி எந்த வித வித்தியாசமும் பார்க்காமல் நகைச்சுவை நடிகர்களுடனும் நடித்த ஒரு நட்சத்திரம் இவர்.
கேரவன் என்று ஒரு கலாசாரம் உருவாகி தயாரிப்புச் செலவை நாள் ஒன்றுக்குப் பல லட்சங்கள் ஆகும் காலத்தில் ஒரு சேர், ஒரு குடை போதும் என்று நினைத்து நடித்தவர். என் படத்தின் படப்பிடிப்பு நாமக்கலில் நடந்த போது வேகாத வெயிலில் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று உடை மாற்றி வந்தார். ஆடம்பர பங்களா, தியேட்டர், நீச்சல் குளம், தனியாக விமானம் இருந்த போதும் இன்றும் அதே வெள்ளை மனம் பிள்ளை மனம்.
தங்கப்பதக்கம்', நான் வாழ வைப்பேன்', பாரத விலாஸ்', நெஞ்சிருக்கும் வரை', இதயக்கமலம்', பெண்ணை நீ வாழ்க' என்று எத்தனை எத்தனை வெற்றிப் படங்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினியை வைத்துப் படம் தயாரித்தவர்.
சிவாஜியுடன் 3 வெள்ளி விழாப் படங்கள், 20 நூறு நாள் படங்கள் நடித்தது எவ்வளவு பெரிய பெருமை. இவர் திருமணமாகி குழந்தை பிறந்த நிலையில் தேவர் கேட்டுக் கொண்டதற்காக அக்கா தங்கை' படம் மூலம் மறு பிரவேசம் செய்தார்.
1972இல் என்னுடைய முதல் படம் சொந்தம்' . படப்பிடிப்பு வாஹினி ஸ்டூடியோவில் நடந்த போது ஆரம்பித்த கலை உலக நட்பு இன்று வரை நீடித்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
விஜயாம்மா நான் எழுதிய கதை, வசனத்தில் அதிகமான படங்களில் நடித்தவர். அவர் எப்போது படப்பிடிப்புக்கு வந்தாலும் அவருக்குத் தேவையான எதையும் புரொடக்ஷனில் கேட்பதில்லை. தண்ணீர், காபி, பழம், ஈஸி சேர் வரை வந்து விடும். அவர் உதவியாளர் மேபெல் என்கிற ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. என்னுடன் அடிக்கடி சண்டை போடுவார். காரணம், விஜயாம்மா நடிக்கப் போனதும் அவர் ஈஸி சேரில் நான் உட்கார்ந்து ஆடுவேன். இட்ஸ் மேடம் சேர் கெட் அப்' என்பார். ஆனால் இதைப் பற்றி கவலைப்படாமல் விஜயாம்மா அங்கு இருக்கும் சோபாவில் உட்கார்ந்து விடுவார்.
நான் எழுதிய வசனத்தைப் பேசி விட்டு வந்து என்னிடம் நீங்களும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் எழுதுற டயலாக் ரொம்ப நல்லாருக்கு. ஆனா, இவ்வளவு பெரிய டயலாக் இல்லாம கொஞ்சமா எழுதக் கூடாதா... வாயெல்லாம் வலிக்குது' என்று அவருக்கே உரிய செல்லச் சிரிப்புடன் சொல்வார்.
நான் எழுதி அவர் நடித்த தீர்க்க சுமங்கலி' என் வாழ்வில் மறக்க முடியாதது. வாணி ஜெயராம் பாடிய மல்லிகை என் மன்னன் மயங்கும்...' பாடலில் அவர் அறிமுகமாக முக்கிய காரணமாக இருந்தார் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
ஏவி.எம். சரவணன் தயாரித்த எனது சீரியல் நாணயம்'. அதில் விஜயாம்மாவை முதன் முதலில் நடிக்க வைத்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தேன். விஜயாம்மாவின் கணவர் சுதர்சன் சிட்பண்ட்ஸ் எம்.டி.வேலாயுதன் நாயர் எப்போதும் என்னை பழைய ஆளு' என்று கூறி, கூடவே இருந்து கதை கேட்பார்.
நாணயம்' கதையை நான் சொன்ன போது அலுவலகத்துக்குப் போகத் தயாராக இருந்தவர், அவர் அணிந்திருந்த ஷூவை விஜயாம்மாவிடம் நீட்டி அதைக் கழட்டி விடச் சொல்லி உட்கார்ந்து கதை கேட்டார்.
இன்னொரு நாள் விஜயாம்மா வீட்டில் இருந்த தியேட்டரில் நான் எழுதிய தீர்க்க சுமங்கலி' படத்தை எடுத்த வரை போட்டுப் பார்த்து விட்டு, ஏ.சி. திருலோகசந்தர் முதல் பலரும் காரில் ஏறி சென்ற போது இரவு மணி 12. நான் அவர் வீட்டிலிருந்து எப்படிப் போவது என்று யோசித்தப்படி நின்றேன்.
மாடியிலிருந்து என்னைப் பார்த்த வேலாயுதன் நாயர் கீழே வந்து வெறும் கைலியுடன் மேல் உடம்பில் ஒரு டவல் கூட இல்லாமல் அவர் காரில் என்னை ஏற்றிச் சென்று நான் தங்கியிருந்த திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் விட்டு வந்ததை மறக்க முடியுமா?
நான் ஒரு ரூபாய் கூட அட்வான்ஸ் தராத நிலையில் என் இயக்கம், தயாரிப்பான காதல் சங்கீதம்' சீரியலில், என் வீட்டில் ஏ.சி. இல்லாத அறையில் தங்கி, மொட்டை மாடியில் வந்து நடித்தார். அந்த ஜனவரி முதல் தேதியன்று அவர் வீட்டிற்குச் சென்று 10,000 பணம் தந்த போது நீங்கள் நிறை குடம்' என்று என்னைப் பாராட்டினார்.
நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் புது வீட்டிற்குச் சென்ற போது எனக்கு 5,000 ரூபாய் தந்து முதல் தடவை என் புது வீட்டுக்கு வந்திருக்கீங்க... வச்சுக்குங்க' என்று வீட்டை எல்லாம் சுற்றிக் காட்டினார்.
எப்போது பேசினாலும் அமெரிக்காவில் படிக்கும் என் பேரன் வரை விசாரிப்பார். மகாசிவராத்திரியில் பிறந்த இவர் அறுபது ஆண்டு காலமாக நூறு படங்கள் நடித்து பேரும் புகழுடன் இருந்தாலும் மேலும் புகழுடனும் உடல் நலத்துடனும் உற்சாகத்துடனும் நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.