முகப்பு
தினமணி கதிர்

பேல்பூரி - 10-05-2026

மனிதரில் இரண்டு வகை... தேவையென்றால் தேன்; தேவையில்லை என்றால் தேள்!

பகிர்:

கண்டது

(நாகையில் வேன் ஒன்றின் பின்புறம் எழுதியிருந்த வாசகம் )

'மனிதரில் இரண்டு வகை...

Advertisement

தேவையென்றால் தேன்; தேவையில்லை என்றால் தேள்!'

-நாகஜோதி செந்தில்குமார், நாகப்பட்டினம்.

(கரூரில் மருந்துக்கடை ஒன்றில் எழுதியிருந்த வாசகம்)

தவறு என்னுடையது அல்ல என்பதற்கு ஆயிரம் பொய்கள் வேண்டும்...

தவறு என்னுடையதுதான் என்பதற்கு ஒரே ஒரு உண்மை போதும்!

-எம். அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(சென்னை போரூரில் ஆட்டோவின் பின்புறம் எழுதியிருந்த வாசகம் )

'கற்றதை மறந்தாலும்

வாழ்க்கையில் பட்டதை மறக்காதே!'

- க. பூமலை, நமசிவாயபுரம்.

கேட்டது

(கோவை கவுண்டம்பாளையத்தில் இரு பெண்கள்)

'உங்க வீட்டில் மிக்சி, கிரைண்டர் ஓடுற சத்தமே கேட்கறதில்லையே, ஏன்?'

'உடல் ஆரோக்யத்துக்காக ஆட்டுக்கல், அம்மிக்கல்ல அரைச்சே என் கணவர் பழகிட்டாரு, அதான்!'

-எம்.பி.தினேஷ், கோவை - 25.

(தஞ்சை பேருந்து நிலையத்தில் இருவர்)

'ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?'

'முதல்ல என்ன ஹெல்ப்னு சொல்லு... சின்னதா, பெரிசான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்!'

-வி.ரேவதி, தஞ்சை.

(பாளை மார்க்கெட்டில் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டது)

'உன் மருமகள் எப்படி இருக்கிறாள்?'

'அதை ஏன் கேக்குறே... சாம்பாரில் உப்பு பார்க்கச் சொன்னேன். அதற்கு அவள், 'சாம்பாரில் கத்திரிக்காய், வெண்டைக்காய் எல்லாம் இருக்கு. உப்பை மட்டும் காணவில்லை' என்கிறாள். இதை எங்கே போய்ச் சொல்ல...'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

'ஆசைக்கு அடங்குபவர்களைவிட

ஆசையை அடக்குபவர்களுக்குத்தான் நிம்மதி நிலைத்து நிற்கிறது!'

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

மைக்ரோ கதை

'ஏன்டா செந்தில், உலகம் நாகரிகமா மாறிக்கிட்டே இருக்கு. ஆனா, நீ உன்னை மாத்திக்கவே மாட்டேங்கறீயே...' என்றான் கிண்டலாக, சொந்த ஊருக்கு வந்திருந்த பால்ய நண்பன் குமார்.

'என்னடா சொல்ற?' என்று புரியாமல் கேட்டவனிடம், 'பின்ன என்னடா, எல்லோரும் பைக்ல சிட்டாப் பறக்கறாங்க. நீ இப்பவும் சைக்கிளை விடாமக் கட்டிக்கிட்டு அழறீயே...'

'டேய் குமார், நீ சொல்ற மாதிரி சைக்கிள் மிதிக்கறது கேவலம் இல்லை. ஆரோக்கியமான விஷயம். நாகரிகமும் முன்னேற்றமும் அவசியம்தான். அதை ஆடம்பரத்துக்காகப் பயன்படுத்தக்கூடாது. எங்கிட்டயும் பைக் இருக்கு. அதை அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பயன்படுத்தறதால நீ பார்த்திருக்க மாட்டே. தினமும் சைக்கிள் மிதிக்கறதாலதான் ஐம்பது வயசை நெருங்கியும் இதுவரை எந்த நோயும் அண்டாம புத்துணர்வோடு ஆரோக்யமா இருக்கேன்' என்றான் செந்தில்.

பெருத்துப்போன தொப்பையை மெதுவாக தடவிப் பார்த்துக் கொண்ட குமார், 'நீ சொல்றது உண்மைதான். என்னோட உடல் ஆரோக்யத்தைப் பெருக்கிக்க இனிமேல் நானும் சைக்கிள் ஓட்டப் போறேன்' என்றான்.

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

எஸ்.எம்.எஸ்.

'தீயதை கடந்து செல்...

நல்லதை மனதில் சுமந்து செல்!'

-சிவம், திருவள்ளூர்.

அப்படீங்களா!

வாட்ஸ்ஆப் செயலியை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருந்தால்தான் புதிய சேவைகளைப் பெற முடியும்.

இந்த புதிய அப்டேட்களுக்கு நாம் பயன்படுத்தும் அறிதிறன்பேசியில் போதிய இடமும், அதற்கான மென்பொருள் ஆட்டேட்களும் அளிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 வெர்ஷனில் இயங்கும் அறிதிறன்பேசியில் வாட்ஸ்ஆப் இயக்கம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பழைய ஆண்ட்ராய்டு அறிதிறன்பேசியின் இயக்கம் நிறுத்தப்படும் என வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.

மேலும், சேவை நிறுத்தப்படும் முன் சாட்களை தரவிறக்கம் செய்து சேமித்து வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாட் தரவுகளை கூகுள் டிரைவ் அல்லது கைப்பேசியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

இந்தியா, பிரேஸில், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பழைய ஆண்ட்ராய்டு அறிதிறன்பேசிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால், ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் 6.0 வெர்ஷன் அல்லது அதற்கும் மேல் உள்ள ஆண்ட்ராய்டு வெர்ஷன்களைப் பயன்படுத்த வேண்டும்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.